60-ஏன் ‘அறிவே தெய்வம்’ எனப்படுகின்றது?

வாழ்க மனித அறிவு                                வளர்க மனித அறிவு

ஏன் ‘அறிவே தெய்வம்’ எனப்படுகின்றது?அ.வி.எண்.60—(5/?)

25-02-2015 – புதன்

கடந்த அறிவிற்கு விருந்தில், உதாரணத்திற்கு, ஆர்சனிக் என்கின்ற அணுவை எடுத்துக் கொண்டோம். அதில், மகரிஷி அவர்கள் கூறியுள்ளது போல், அறிவு, எவ்வாறு உயிரற்ற சடப்பொருட்களில் ஒழுங்காற்றலாகத் திகழ்கின்றது என்று பார்த்தோம். இன்று, அணுவிலுள்ள துணைத்துகள்களான(sub atomic particles) புரோட்டான்கள், நியூட்ரான்கள், எலக்ட்ரான்கள் உருவானது எவ்வாறு என்று பார்க்க இருக்கிறோம்.

விஞ்ஞானத்தில், புரோட்டான்கள், நியூட்ரான்கள், எலக்ட்ரான்கள் எவ்வாறு பிறந்தன/உருவாகின என்கின்ற விளக்கம் இல்லை. ஒரு இரசாயன அணுவில்(chemical atom) துணை அணுத்துகள்களான (subatomic particles) புரோட்டான்கள், நியூட்ரான்கள், எலக்ட்ரான்கள் எவ்வாறு, அமைப்போடு(pattern), துல்லியமாக(precision) ஒழுங்குடன்கோடு(regularity) இயங்கி வருகின்றன என்பதற்கு காரணமான ஆற்றல் பற்றிய விளக்கம் இல்லை.

அணுவில் (atomic structure), குறிப்பிட்ட அமைப்பு, துல்லியம், ஒழுங்கு ஆகிய மூன்று நெறிகளுக்கு உட்பட்டு புரோட்டான்கள், நியூட்ரான்கள், எலக்ட்ரான்கள் தத்தம் இடத்தில் அமைந்திருப்பது என்பது ஆற்றல் இல்லாமல் இயலாது. ஆகவே இந்த மூன்று நெறிகளுக்கும்(ஒழுங்கிற்கும்) காரணமான ஆற்றலை வேதாத்திரியம் கி.பி.1911 க்குப் பிறகு ஒழுங்காற்றல் எனப் பெயரிட்டதோடு மட்டுமல்லாமல், அது அறிவு என்றும், அறிவு சடப்பொருட்களில் ஒழுங்காற்றலாய் திகழ்கின்றது என்றும் கூறியுள்ளது.

அணுவின் துணைத்துகள் இருந்ததைக் கண்டுபிடித்தது; அதனை ஏற்றுக்கொண்டது விஞ்ஞானம். ஆனால் துணைத்துகள்கள் எவ்வாறு அமைப்பு, துல்லியம், ஒழுங்கு ஆகிய மூன்று நெறிகளுடன் அணுவில் இடம் பெற்றதற்கான காரணத்தை வினவவில்லை விஞ்ஞானம். அந்தக் காரணத்தை அறிய வேண்டிய அவசியம் விஞ்ஞானத்திற்கு இதுவரை வரவில்லை.

ஆனால் கடவுள் என்பவர் யார்,
அவர் ஏன் இப்பிரபஞ்சத்தைப் படைத்தார் என்கின்ற வினாவை எழுப்பி,
அதற்குரிய விடையான, ஆதிநிலையை அறிவுப்பூர்வமாகக் கண்டுபிடித்து,
விஞ்ஞானத்தின்படி இப்பிரபஞ்சம் தோன்றிய மூலத்தையும் உறுதி படுத்தி,

இரண்டு மூலங்களும்(the source/state of God and the source of this universe) ஒன்றே என்று கடவுளின் உண்மை நிலையை, அறிவுப்பூர்வமாக வேதாத்திரி மகரிஷியின் வழியாகத் தெரிவிக்க விரும்பியதால், இயற்கை, அணுவில் அமைப்பு, துல்லியம், ஒழுங்கு ஆகிய நெறிகளுக்கானக் காரணத்தை மகரிஷி அவர்களுக்குத் தெரிவித்து, அது ஒழுங்காற்றலாகிய அறிவு என்று விளக்கியுள்ளது.

ஆகவே, அறிவு சடப்பொருட்களில் ஒழுங்காற்றலாய் திகழ்கின்றது என வேதாத்திரியம் கூறுகின்றது. விஞ்ஞானம், அறிவை, பிரபஞ்ச மூலப் பொருட்களில் ஒன்றாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் வேதாத்திரிய மெய்ஞானம் அறிவை பிரபஞ்ச மூலப்பொருட்களில் பிரதானமாக எடுத்துக் கொண்டுள்ளது. எனவே, எவ்வாறு புரோட்டான்கள், நியூட்ரான்கள், எலக்ட்ரான்கள் பிறந்தன/உருவாகின என்று வேதாத்திரிய வெட்ட வெளி விஞ்ஞானம் கூறுவதனையும் இப்போது சுருக்கமாக அறிந்து கொள்வோம்.

வெளியாகி இருப்பு நிலையில், ஆற்றல் வற்றாமல் இருப்பாக இருக்க, ஆற்றல் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருப்பதனால் அதனுள் இறுக்க ஆற்றல் மிகுந்து வெளி நொறுங்கித் துகள்களாகின(இறைத்துகள்கள்). அந்தத் துகள்கள், வெளியில் இருப்பதனால், வெளியின் சூழ்ந்தழுத்தும் ஆற்றலால் எல்லாத்திசைகளிலும்(360°) அழுத்தப்படுவதாலும் துகள்கள் தன்னையே சுற்றிக் கொள்ளும் ஆற்றலைப். பெறுகின்றன. இக்கருத்தை எடுத்துச் சொல்லும் பாடலை நினைவு கூர்வோம்.

”இறை வெளியே தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல்
இதன் திணிவு மடிப்பு விழச் சுழலும் நுண்விண்ணாம்;
………………………………………………………….”     — மகரிஷி அவர்கள்.

இலட்சக்கணக்கான துகள்கள் வெளியின் சூழ்ந்தழுத்தத்தால், ஒன்று சேர்ந்து ஒரு கொத்தியக்கமாக(association) உருவானதுதான் விண் எனப்படுகின்ற பஞ்சபூதங்களில் முதலாவதாகும்.

இந்த விண்ணின் தற்சுழற்சி வேகத்திற்கேற்ப(spinning speed) துகள்களை வெவ்வேறாகப் பிரித்துச் சொல்லப்படுவதுதான் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவைகள் என்கின்றது வேதாத்திரியம். இதனை விளக்குவதற்காக வேதாத்திரியம், காலத்தால், வெவ்வேறு வயதில் இருக்கக்கூடிய ஒரே மனிதனுக்கான வெவ்வேறு பெயர்களை உதாரணங்களாகக் கூறுகின்றது. அதாவது ஒரே மனிதன்னை, அவன் வயதிற்கேற்ப குழந்தை என்றும், இன்னும் வளர்ந்த பிறகு மாணவன் என்றும், இன்னும் வளர்ந்த பிறகு இளைஞன் என்றும், இன்னும் வளர்ந்த பிறகு குடும்பத்தலைவன் என்றும் பெயர் பெறுவதைப் போல் துகள்கள் எலக்ட்ரான்கள், புரோட்டான்கள், நியூட்ரான்கள் என்று அவற்றின் வயதைக் கொண்டு, அதாவது தற்சுழற்சி வேகத்தைக் கொண்டு பெயரிடப்படுகின்றன. காலம் செல்லச் செல்ல, சுழற்சிக்கு வந்த. விண்ணின் ஆரம்ப வேகம் (spinning speed— rpm or rps – revolutions per minute or second) குறைந்து கொண்டே வரும். முதலில் தோன்றிய விண்ணின் சுழற்சி வேகம் குறைவானதாகவும், பின்னர் தோன்றிய விண்ணின் சுழற்சி வேகம், முன்னர் தோன்றிய விண்ணைவிட சுழற்சி வேகம் அதிகமானதாகவும் இருக்கும். இந்த சுழற்சி வேகம் குறைந்து வந்ததுதான் விண்கள் ஒன்றை விட்டு மற்றொன்று பிரியாமல் – வேகம் குறைந்ததை வேகம் அதிகமானது சுற்றி வர ஆரம்பித்து உறவை தக்க வைத்துக் கொண்டது. அதாவது தற்சுழற்சி வேகம் குறைந்து வந்ததால்தான் விண்கள் ஒன்றுக்கொன்று உறவை வைத்துக் கொள்ள முடிந்தது. இத்தன்மைதான் பருப்பொருள் உருவானதற்கு ஏதுவாக இருந்தது. இதுபோன்ற விளக்கம் விஞ்ஞானம் தரவில்லை.

இத்தகைய இயக்க ஒழுங்கில் தான் வெவ்வேறு வகையான 118 மூலகங்கள் (elements) உருவாகின. (மூலகங்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டவண்ணம் உள்ளது; இந்த இயக்க ஒழுங்கிற்கு காரணமான ஆற்றலை ஒழுங்காற்றல் என்கின்றது வேதாத்திரியம். இந்த இயக்க ஒழுங்கு நடைபெறுவது உயிரற்ற சடப்பொருட்களில். ஆகவேதான் உயிரற்ற சடப்பொருட்களில் இயங்கும் இந்த இயக்க ஒழங்காற்றலைத்தான் அறிவாற்றல் என்கின்றது வேதாத்திரியம். ஏன் ஒழுங்கிற்குக் காரணமான ஆற்றலை ஒழுங்காற்றல் என்றே கூறாமல், அதனை அறிலு என்கின்றது என்றால், இதே ஆற்றல்தான் பஞ்சபூத கூட்டினால் உருவான முதல் உயிரில் உணர்வாக செயல்படுவதினால் அறிவு எனப்படுகின்றது.
மேலும் அறிவின் பணி உணர்தல் மட்டுமல்ல, அது ஒழுங்கிற்கும் காரணம் என்பதனை மறந்து விடக்கூடாது. இதனை, ஒரே தவற்றை மீண்டும் மீண்டும் செய்யும் சிறுவனை பெரியவர் “அவனுக்கு அறிவே கிடையாது” என்று கடிந்து கொள்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக, ஏற்கனவே அறிந்திருக்கிறோம்.

பொதுவாக, அறிவு என்றால் அதற்கு உணரும் ஆற்றலும், எண்ணும் அல்லது சிந்திக்கும் ஆற்றலும் உள்ளது என்று எல்லோரும் அறிவர். ஆனால் எல்லோரும் அதனை தெய்வம் என்று அறியார். ஆனால் அறிவுதான் தெய்வம் என்று கண்டுபிடித்து விட்டாலும், மகரிஷி அவர்கள் “உணர்ச்சியாய், சிந்தனையாய் உள்ளது மட்டுமே அறிவு” என்கின்ற உண்மையிலேயே பல நாட்களாக இருந்து வந்ததாகக் கூறுகிறார் பாடலில், அவர் அதோடு, ‘அறிவே தெய்வம் என்கின்ற’ கண்டுபிடிப்பை (சிந்தனையை) நிறுத்திக் கொள்ளவில்லை. அவர் நிறுத்திக்கொள்ளவில்லை என்பதைவிட இயற்கை அவரது சிந்தனையை நிறுத்திவிடவில்லை என்பது தான் ‘இயற்கையின் தன்மாற்ற சுத்த அத்வைத’ விஞ்ஞானத்தின் படி சரி.

பாடலில் “மேலும் உண்மை விளங்க” என்று கூறுவதிலிருந்தே இயற்கை அவரது சிந்தனையை நிறுத்தவிடவில்லை என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. இப்பாடலோடு தொடர்புள்ள, மகரிஷிக்கு நடந்த உண்மைச் சம்பவத்தையும் இங்கே அறிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் ஞானி வாழ்ந்த சமகாலத்தில் வாழ்ந்ததற்கான பயனும், மகிழ்ச்சியும் இல்லாது போய்விடும்.
திருவான்மியூர் தலைமை மன்றத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், இறைவணக்கத்தில் பேரின்ப ஊற்று என்கின்ற தலைப்பில் உள்ள பாடலை மகரிஷி அவா்களின் சீடர்களான இருவர், தாயும், மகளும் சோ்ந்து இசையோடு பாடினார்கள். அப்போது மகரிஷி அவர்களுக்கு கண்களில் நீர் மல்கியது. காரணம் என்ன? இதனை அவரவர்கள் சிந்தனைக்கே விட்டுவிடலாம்.

இருப்பினும் சத்சங்கம் என்பதால் சிறிதளவு கருத்தை இப்போது பரிமாறிக் கொள்ளலாம். பாடல் மகரிஷி அருளியது. நல்ல இசையுடன் பாடப்பட்டது. பாடலின் கருத்துடன் இசையும் சேர்ந்து கொண்டது. பாடலில், ஒரு பேருண்மையை அதாவது இறையின் உண்மை நிலையைக் கண்டுபிடித்த அனுபவத்தை இறையிடமே தெரிவித்து, நமக்கும் தெரிவிக்க விரும்பி பாடல் இயற்றியுள்ளார். அவ்வரிகளில் 7,8 ஆம் வரிகளையும், கடைசி நான்கு வரிகளையும் மீண்டும் நினைந்து இன்புறவும். இசை ஞானம் இருந்தால் நீங்களே பாடிப் பாடி பேரின்ப ஊற்றில் திளைக்கவும். அந்நிகழ்வு நடந்தேறும். அல்லது பாடலின் குறுந்தகடு இருந்தால், அதற்கான, சூழ்நிலையையும், மனநிலையையும்(mind set) ஏற்படுத்திக் கொண்டு, அப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு பேரின்பத்தில் அடிக்கடித் திளைக்கவும். தவப்பயிற்சிகளுடன் இப்பாடலை தினந்தோறும் கேட்டு வருவதோடு, அந்நிகழ்வை, மனதில் உருவகப்படுத்திக் கொண்டால், இயற்கையின்/இறையின் கருணைக்கண்கள் நம்மீது விழ ‘அவனிலே நாம் அடங்க, நம்முள்ளே அவன் விளங்க, அவனது தன்மை ஒளிர, நமதுள்ளம் தூய்மை பெறும்’

. இறுதியாக மனிதப்பிறவியின் நோக்கம், மனம் தூய்மையை எய்துவதுதான். அப்போதுதான், விவேகானந்தர் கூறியுள்ளது போல், மனிதன் கொண்டுள்ள மிருக இயல்பு, மனித இயல்பு, தெய்வீக இயல்புகளில் மிருக இயல்பும், மனிதஇயல்பும் மறைந்து தெய்வீக இயல்பு மேலோங்கும். மகரிஷி அவர்கள், தனது ஆன்மீக வாழ்வில், பிறவியின் நோக்கத்தை அடைந்த படிகளாக நான்கினைக் கூறுவதில்(பாடல் எண் 1849- ஞானக்களஞ்சியம் பாகம்-2). இரண்டாவது படியாக மனத்தூய்மையைத்தான் குறிப்பிடுகின்றார். அதே கருத்துதான் பேரின்ப ஊற்று என்கின்ற இந்தப் பாடலின் 19வது வரியும் தெரிவிக்கின்றது.

ஆகவே இறையுணர்வு என்பது மனம், இறைக்கு சமமாகத் தூய்மை பெற்றால்தான் சாத்தியம். “மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம்” என்று சொல்வது கூட இந்த பொருளில்தான். “அறிந்தது சிவம், மலர்ந்தது அன்பு”. அன்பு மலர்கின்ற அளவிற்கு மனம் தூய்மை பெறவேண்டும். இறையுணர்வு என்பதும், மனத்தூய்மை வேறு வேறல்ல. மகரிஷி அவர்கள் தெய்வத்திற்கு கூறும் ஒரு சாம்யத்தை நினைவு கூர்வோம்:-

தெய்வம்= மனிதன் minus மும்மலங்கள். மும்மலங்கள்= ஆணவம்+கன்மம்+மாயை

God = Man minus impurities.
Impurites =Ego+ sinful imprints+maya

         பேரின்ப ஊற்று

                           ffc-60-png-1-25-2-15     

                                                                                              

 உணர்ச்சிக்கு முன்னம் விண்ணில் ஒழுங்காற்றலாய் விளங்கும் 

                                     உனது திரு நிலையும் அறிவே என உணர்ந்தேன்.

                                                                                                                                                                          (இன்ப ஊற்றாய்)

      ffc-60 -png-2

  

FFC-60-PNG-3 

                                                            ….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

இப்பாடல் மகரிஷி அவா்கள் இயற்றியது. அதனைக் கேட்டு இரசிக்கின்ற மற்றவர்களுக்கு கண்களில் நீர் வரலாம் வருவதும் உண்டு. ஆனால் அந்நிகழ்ச்சியில் மற்றவர்களுக்கு இப்பாடலைக் கேட்டு கண்களில் நீர் வரவில்லை. ஆனால் பாடல் இயற்றியவருக்கே கண்களில் நீர் வழிந்தது. காரணம் என்ன? மனம் நெகிழ்தலைக் காட்டுகின்றது கண்ணீர்.
நெகிழ்தல் என்றால் இறுக்கம் தளர்தல் என்று பொருள். அன்பு, பரிவு, இரக்கம் முதலியவற்றால் மனம் இளகுதல். பாடலில் தெரிவித்துள்ள மகரிஷியின் அனுபவம் என்றோ நடந்தது. அன்றும் இதே போன்று மனம் ‘நெகிழும் நிகழ்வு’ அவருக்கு நிச்சயமாக நடந்திருக்கும். மனம் நெகிழ்ந்த காலஅளவும்(Duration) நீடித்திருக்கும். அதனை இறைவன் ஒருவன் மட்டுமே பார்த்து ரசித்திருப்பான். அதே போன்ற அனுபவம், அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியிலும் நடந்தது. இதனால் இயற்கை நடத்திய அந்நெகிழ்தல் நிகழ்ச்சி மகரிஷியோடு முடிந்து விட்டது என்று பொருள் கொள்ளக் கூடாது. நமக்கும் அந்நெகிழ்தல் நிகழ்ச்சி இப்பாடலையோ அல்லது வேறு பாடலைக் கேட்கும் போதோ அல்லது உரைநடையை வாசிக்கும் போதோ ஏற்பட வேண்டும் என்பதற்காகவே இயற்கை அன்னை அன்று அந்நெகிழ்தல் நிகழ்ச்சியினை நடத்தியுள்ளாள்.

“யாரொருவருக்கு இறைவனின் நாமத்தைக் கேட்கும்போதே கண்களில் நீர் வருகின்றதோ, அவருக்கு அது கடைசி பிறவி” என ஸ்ரீ ராமகிருஷ்ணர் கூறியுள்ளதை, அன்றைய மகரிஷி அவர்களின் நெகிழ்தல் நிகழ்ச்சியில் நேரிடையாக காணமுடிந்தது. வாழ்க மகரிஷியின் அறிவாற்றல்.
தொடரும் அடுத்த விருந்தில்(01-03-2015 ஞாயிறு)