எல்லாப் புகழும் இறைக்கே!  –1/?

வாழ்க மனித அறிவு                                                 வளர்க மனித அறிவு

எல்லாப் புகழும் இறைக்கே!  –1/?

அ.வி.137

18-11-2015 புதன்

 

FFC-137- new-எல்லாப்புகழும் இறைக்கே

எல்லா சிறப்புகளும், பெருமைகளும் புகழும் இறைக்குத்தானே சொந்தம்?!  சந்தேகமா?

ஐந்தறிவு வரை புகழ் யாருடையது என்கின்ற பிரச்சனை, அவற்றிற்கு எழவில்லை. இயற்கையின் சிறப்பும் புகழும் ஐந்தறிவு சீவ இனங்களுக்குத் தெரியாது. எதற்காக, தானே ஆறாம் அறிவாக தன்மாற்றம் அடைந்ததோ, அது நிறைவேறுவதற்கு  வாய்ப்பு கிட்டாத நெடுங்கால நிலையில், ஆறாம் அறிவு, தன்னுடைய மூலம் தெரியாமல், தன்னை தனிமைப் படுத்திக் கொண்டதால், ஐவகைப் பற்றுக்களில் ஒன்றாகிய  புகழ்-பற்றில் மூழ்கி, ‘‘புகழ் யாருடையது? என்னுடையதா, இறையினுடையதா?’ என்கின்ற   தன்முனைப்புச் சிக்கலில் அல்லலுருகின்றது.  தவிக்கின்றது.

FFC-137-அவன் யார் நீ யார்- படம்

என்கின்ற வேதாத்திரிய உண்மை சமுதாயத்திற்கு  ஞானத்தெளிவாகும் வரை புகழ் யாருடையது? என்கின்ற தன்முனைப்புப் பிரச்சனை தொடர்ந்து இருந்து கொண்டே சமுதாயத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கும்.

     இருப்பினும் இறை-உணர் ஆன்மீக சாதகர்களாவது இப்பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டும்.  ஏனெனில் மெய்ப்பொருளை உணர்வதற்கான பயிற்சியினை செய்து கொண்டு வரும்போது உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் மனதில் வாசம் செய்து கொண்டிருந்தால், கருத்தியலாக தெரிந்தது கருத்தியலாக இருக்குமேயன்றி, செய்முறையில் தோ்ச்சி பெறுவது இயலாததாகிவிடும்.

 அறிவியாலாளர்/விஞ்ஞானியைப் பற்றிய ஓரு ஆங்கிலக்கூற்று ஒன்று உண்டு. —

‘He who knows Science is not a Scientist; but person who knows Science and lives scientifically alone is a Scientist.’   Similarly a person who knows Spiritualism is not Spiritualist but a person who knows Spiritualism and lives spiritually alone is a True Spiritualist.

   What is required for the Society?  Spiritualism or Spiritual Evolution? Spiritual evolution is essential and required. Spiritual evolution is for harmonious living in Society. That is – manly living – finally Godly living is essential in order to enjoy hereditary wealth of Peace.

Knowing Spiritualism alone will not be beneficial to life.  But being a True Spiritualist/Living spiritually is  certainly  a boon  to life.

   அறிவியல்/விஞ்ஞானம் தெரிந்தவர் அறிவியலாளர்/விஞ்ஞானி அல்ல. அறிவு பூர்வமாக வாழ்பவரே அறிவியலாளர்.  அதுபோல் ஆன்மீகம் தெரிந்தவர் ஆன்மீகவாதியல்ல.  ஆன்மீகம் தெரிந்து ஆன்மீகவாதியாக வாழ்பவரே  உண்மையான ஆன்மீகவாதி.  சமுதாயத்திற்கு என்ன தேவை?  ஆன்மீகம் தெரிந்திருத்தலா அல்லது ஆன்மஉணர்வு பரிணாமம் தேவையா?  ஆன்மஉணா்வு பரிணாமம் தான் அவசியமாகவும், தேவையுமாக உள்ளது. பரிணாமம் ஆன்மஉணர்வு நிலைக்கு எட்டவில்லை.  அதனால்தான் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும்,  தத்துஞானியுமான டாக்டர். இராதாகிருஷ்ணன்  “பரிணாமம் இன்னும் பூர்த்தியாகவில்லை” என்றார். ஆன்மஉணா்வு பரிணாமம் என்பது சமுதாயத்தில் இணக்க வாழ்விற்கு அவசியமாக உள்ளது.  அதாவது மனிதன் மனிதனாக வாழ ஆரம்பித்து, தெய்வமாக வாழ்வதாகும்.  இதன் மூலம்தான் மனித குலம் தனது  பூர்வீக சொத்தான அமைதியினை அனுபவிக்க முடியும்.

    ஆன்மீகம் தெரிந்திருப்பது மட்டுமே வாழ்க்கைக்கு பயன் தராது.  ஆனால் உண்மையாக ஆன்மீக வாழ்க்கை — மனிதனாக — நல்லவனாக வாழ்வதென்பதே  இறைவன் கொடுத்த வரமாகும்.

    வாழ்வியலுக்கு  வேண்டியதையெல்லாம் 133 அதிகாரங்களாக வகுத்து அவற்றில்  எடுத்து இயம்பியுள்ள திருவள்ளுவர், ‘தெரிந்து கொண்டதற்கு’ — கற்றதற்கு   சான்று என்ன என்று சொல்லாமலா இருப்பார்?!   என்ன சொல்லியிருக்கிறார் என்று ஆராய்வோம். ஆராய்ந்ததில் திருவள்ளுவர் இரண்டு குறட்பாக்களை எடுத்துக் காட்டுகிறார்.  முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தில் இரண்டாவது குறளிலும். அடுத்து,  ‘கல்வி’ என்கின்ற அதிகாரத்தில் முதல் குறளிலும்  கூறியிருக்கிறார்.

கற்றதனா லாய பனனென்கொல் வாலறிவன்

நற்றால் தொழாஅர் எனின்.                  …. குறள் -2

விளக்கம்:— தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால் அவர் கற்ற கல்வியினால் என்ன பயன்? எனக் கேட்கிறார் திருவள்ளுவர்.  தெளிவான ஆன்மீகம் தெரிந்து கொண்டு அதுபோல் வாழாமல் இருப்பதனால் என்ன பயன் எனக் கேட்கிறார்.

கற்கக் கசடறக்  கற்பவை கற்ற பின்

நிற்க அதற்குத் தக.                      …. குறள் 391

 விளக்கம்:– கற்கத்தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும். அவ்வாறு கற்ற பிறகு, கற்றதற்கு-தெரிந்து கொண்டதற்கேற்ப நெறியில் வாழ வேண்டும்.  அந்த நெறிதான் ஆன்மீகம்.  ஆன்மீகத்தை சந்தேகமில்லாமல் கற்க வேண்டும்.  கற்ற பிறகு கற்றதற்கேற்ற நெறியில் வாழ்வதே சிறந்த ஆன்மீகமாகும். அவரே சிறந்த வாழ்வியலாளராவார் என்கிறார்.

    புகழ் யாருடையது பற்றி ஓர் உதாரணத்தின் மூலம் சற்று சிந்தித்துப் பார்ப்போம். ஒரு குடும்பத்திலுள்ள பெண்ணின் திருமணம் அக்குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளைகளின் சரீர ஒத்துழைப்பாலும்  மற்றும் அவா்கள் ஈட்டிய  பொருளைக் கொண்டும் மிகச்சிறப்பாக நடந்தேறியது என்று வைத்துக் கொள்வோம். உறவினர்கள், நண்பர்கள், ஊர்மக்கள் எல்லோரும் என்ன கூறுவர்?  அக்குடும்பத்தலைவரின் பெயரைச் சொல்லி ‘அவர் தன் மகளுக்கு மிகச்சிறப்பாகத் திருமணம் நடத்தினார்’ என்று சொல்வதுதானே இயல்பு.  அதனை விட்டுவிட்டு தந்தை இருக்கும் போது, அந்த ஆண்பிள்ளைகளின் பெயர்களைச் சொல்லியா  ‘சகோதரர்கள் தங்களின் தங்கைக்கு மிகச்சிறப்பாகத் திருமணம் நடத்தினார்கள்’ என்றா சொல்வார்கள்! சகோதரர்கள்தான்  தங்களைப் பற்றி இவ்வாறு சொல்வதை விரும்புவார்களா?   அதுபோல் இயற்கையின்/இறையின் அரசாட்சி என்கின்ற தொடர் நாடகம் நடந்து கொண்டிருக்கின்றது.  அதில் மனிதன் ஒருநீர்குமிழ் பாத்திரம் தான். இயற்கையின்/இறையின் கருவியாகத்தான் மனிதன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்.  இது தெள்ளத்தெளிவாகி விட்டால் ‘புகழ் யாருடையது’ என்கின்ற தன்முனைப்புப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுவிடும்.

     ஒரு செயலால் வருகின்ற புகழை அது இறைவனுக்கு அர்ப்பணித்துவிடுவது சிறப்பா?  அல்லது அப்புகழ் தன்னுடையது என்பது சிறப்பா? இறைவனுக்கு கீழ்படிதலாக சொல்வதல்ல ‘புகழ் இறைவனுடையது’ என்று.  அப்புகழை ஏற்படுத்தக் கூடியச் செயலை செய்வதற்கான சந்தர்ப்பம் யார் ஏற்படுத்தியது?  தான்-நான் யார்? தான்- தனது எங்கிருந்து வந்தன?

    உடல் பலமும், அறிவுபலமும் யார் கொடுத்தது? யாருடையது? அப்புகழுக்கான செயலை சமுதாயத்திற்கு செய்வதற்காக இறை திட்டமிட்டு,  ‘அதன் பணியை நிறைவேற்றத் தன்னை கருவியாகப் பயன்படுத்திக் கொண்டதே இறை’ என்று நினைப்பதில் பெருமையா, சிறப்பா, மகிழ்ச்சியா?

     புகழ் ஏற்படக்கூடிய சமுதாயத்திற்கானச் செயலை நிறைவேற்றுவதற்குக்  கருவியாக ஒர் ஆன்மாவை இறை  தேர்ந்தெடுக்கின்றது  என்றால் என்ன பொருள்?  அந்த ஆன்மா இறைக்கு நெருக்கமாகி வருகின்றது என்று பொருள்.  அல்லது நெருக்கமாகிவிட்டது என்று பொருள். அதாவது இறையும் அந்த ஆன்மாவும் ஒன்றாகிவிட்டது என்று பொருள்.  தந்தைக்கு புகழ் என்றால் நமக்கும் தானே.  பின்னர் ஏன் கவலை?  புகழ் எனும் மாய வலையில் ஏன் சிக்கிக் கொள்ள வேண்டும்?  எனவே இன்றையச்சிந்தனையில் ‘புகழ்—உயர்புகழ்’ பற்றி சிந்திக்க இருக்கிறோம்.

 புகழும் உயர்புகழும்:

  புகழ் என்பது எதனைக்குறிக்கின்ற சொல்? புகழ் என்பது பலரும் அறிந்திருக்கிற, பலராலும் பேசப்படுகிற நிலையைக்(fame, renown) குறிக்கும் சொல்.  பெருமை(glory, praise) என்றும் பொருள்.

   புகழ், உயர்புகழ் ஆகியவற்றில் எது உயா்ந்தது என்றால், எதனைச் சொல்ல முடியும்?   அதிகாரி, உயர் அதிகாரி என்கின்ற இருவரில் யார் உயர்ந்தவர் என்றால், உயர்அதிகாரி உயர்ந்தவர் என்று சொல்வோம். அதுபோல், புகழ், உயர்புகழ் ஆகியவற்றில் எது உயர்ந்தது,  என்றால் பொதுவாக, உயர்புகழ் உயர்ந்தது என்போம்.  எப்படி? ‘உயர்’ என்பது பல நிலைகளாகப் பகுக்கக்கூடியதில் மேலாக உள்ளதைக்(higher in grades or in hierarchical set up) குறிக்கும் பெயரைடைச் சொல்.  உதாரணத்திற்கு உயா்படிப்பு. அதுபோல்,  ஒன்றின் உயர்ந்த நிலையைத் தெரிவிக்க  ‘உயர்’ என்பதனைச் சேர்த்து சொல்வது போல் ‘புகழ்’ என்கின்ற சொல்லுடன் ‘உயர்’ என்பதனைச் சேர்த்து ‘உயர்புகழ்’ எனப்படுகின்றது வேதாத்திரியத்தில்.

   புகழ், உயர்புகழ் என்கின்ற இரண்டில் எது உயர்ந்தது என்கின்றபோது உயர்புகழ்தானே உயா்ந்தது என விடை வரும்.  ஆனால் புகழ் இறைக்குரியது, உயா்புகழ் மனிதனுக்குரியது என்கின்ற போது இறையைவிட மனிதன் உயர்ந்தவனா என்கின்ற ஐயம் வந்து வந்துவிடுகின்றதா? ஏன் இந்த குழப்பம்?

   ‘புகழ்’ என்கின்ற சொல், ஏற்கனவே உள்ளதை எல்லோருமே அறிவர். அதாவது, ‘உயர்புகழ்‘ எனும் சொல் உருவாக்கப்படுவதற்கு முன்னரே ‘புகழ்‘ எனும் சொல் உள்ளது. ‘புகழ்’ ‘உயா்புகழ்’ ஆகிய இரு சொற்களில் முதலில் தோன்றியது புகழ் எனும் சொல். எனவே முன்னரே இருந்த ‘புகழ்’ என்கின்ற சொல், மனிதனுக்கு முன்னரே  இருக்கின்ற  இறைக்குரியதாகிவிட்டது,  ஆனால் இறைக்குரிய புகழை மனிதன் அறியாமையில் தனதாக்கிக் கொள்கிறான்.  புகழ் என்பது எப்படி மனிதனுக்குரியதாகும்?

   பல பிறவிகளாக  அறிவு (ஆன்மா) தன் மூலத்தை மறந்திருக்கின்றது.

   தன்மூலத்தினுடான (இறையுடனான)  பிணைப்பை மீண்டும் நிரந்தர நினைப்பிற்கு கொண்டு வருவதற்காக எடுத்த  இந்தப்பிறவியிலும்,

   அறியாமையில் புகழை தனதாக்கிக் கொள்ளும்போது, அறிவு (ஆன்மா,) தன்னை இறையிடமிருந்து தன்னைப் பிரித்துக்கொள்ளவே செய்கின்றது.

   இறையே நாமாக இருக்கின்றது என்கின்றபோது இறைக்கு புகழை உரித்ததாகக் கூறுவதில் நாம் குறைந்து விடப்போகிறோமா?  மாறாக பேரானந்த நிலைக்கு செல்வதற்கு அதுதான் திறவுகோல். (மனிதன் கூறினாலும் கூறாவிட்டாலும் புகழ் இறைக்குரியதுதான்.) ஆகவே சம்பிரதாயத்திற்காக புகழ் இறைக்குரியது என்று கூறப்படவில்லை.   இறையாகிய ஒன்றுதானே எல்லாமாக ஆகியுள்ளது. எனவே எல்லாப் புகழும் அந்த ஒன்றாகிய இறைவனுக்கேதான்   என்பதுதான் சரி.

   ஆகவே புகழ் என்கின்ற சொல் ஏற்கனவே உள்ள நிலையில், வேதாத்திரியத்தில் மனிதனுக்காக உருவாக்கப்பட்டது ‘உயர்புகழ்’ எனும் சொல்.

   நடைமுறையில், இறைக்குரிய புகழை, அறியாமையில் மனிதன் தனது என நினைத்துக் கொண்டிருப்பதாலும், இருப்பினும், திருவள்ளுவர் புகழ் மனிதனுக்கு அவசியம் என கருதியதுபோல், மனிதனுக்கென்று புகழும் அவசியம் எனக்கருதி, ‘புகழ்’ என்கின்ற சொல்லோடு “உயா்” என்பதனைச் சேர்த்து ‘உயர்புகழ்’ என்கின்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது வேதாத்திரியத்தில்.

   உயா்புகழை, மனிதனுக்கு அவசியமான ஐந்து வளங்களில் ஒன்றாகக் கருதி நான்காவது வளமாகச் சோ்த்து  உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வேன் என்கின்ற  சங்கல்பத்தை தினந்தோறும் தவத்தின் முடிவில் இயற்றச் சொல்லியிருக்கிறார்  வாழ்வியலாளரும், மெய்ஞானியுமான வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

   மெய்ஞானத்தில் ‘மெய்ப்பொருள்’ ‘பொருள்’ என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது போல் வேதாத்திரிய மெய்ஞானத்தில் ‘புகழ்’ ‘உயர்புகழ்’ என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன.  ‘புகழும் உயர்புகழும்’ என்கின்ற நம்சிந்தனையில் மெய்ப்பொருள், பொருள் ஆகிய இரண்டும் குறுக்கிட்டு விட்டதால்,  இதனை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டு இப்போது ‘பொருள்’ ‘மெய்பொருள்’ பற்றியும் சிறிதளவு சிந்தித்துவிடுவோம்.   பொருள், மெய்ப் பொருள் பற்றியத் தெளிவு மனிதனுக்கு மிக மிக அவசியம்.  அதனை அடுத்த விருந்தில் – வருகின்ற ஞாயிறன்று(22-11-2015) சிந்திப்போம்.