அ.வி. 145-எல்லாப்புகழும் இறைக்கே –     9/9

வாழ்க மனித அறிவு                                                 வளர்க மனித அறிவு

எல்லாப்புகழும் இறைக்கே –     9/9

அ.வி. 145

                                            16-12-2015-புதன்

  ‘புகழ்’ பற்றி மகரிஷி அவர்கள் அருளியுள்ள கவிகளை நினைவு கூர்வோம்.

ffc-55- படம்- pugazh-உயர்புகழ்

மேலும் புகழ் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதாவது:

1  புகழ் என்பது தன்முனைப்புக்கு போடும் தூபமில்லை.

2  ஒருவரின் செயலின் நல்விளைவினால் மக்கள் கொடுக்கும் மதிப்புணர்வே புகழ்.

சுருக்கமாக அறிந்து கொள்ள வேண்டியது:

      இறையே எல்லாமாகவும், உயிர்களாகவும், அறிவாகவும், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் காரணமாகவும் இருக்கின்றது.  அப்படி இருக்கும்போது மனிதன் என்பவன் யார்?  அவன் உயிர் யாருடையது?  அவன் அறிவு யாருடையது?  அவன் கைகள், கால்கள் ஆகிய உறுப்புகள் யாருடையது?  இந்த எல்லா வினாக்களுக்குமே ஒரே பதில் இறையினுடையதுதான் என்பது.

     புகழ் ஏற்படும்படி மனிதன் செய்த செயல் யாரால் செய்யப்பட்டது.  அந்தச் செயலை செய்யும் சூழல் யாரால் ஏற்படுத்தப்பட்டது? அந்தச் செயல் புரிந்ததில் அவனது உடலாற்றலும், மனமும், அறிவும், ஒன்று சேர்ந்தது யாரால்?  எல்லாமே இறையினால்தானே!  இது சம்பிரதாய பதில் இல்லை.  இதுதானே உண்மை. இந்த உண்மையறிந்து விழிப்போடு இருப்பதுதானே பேரின்பம்.

    அஃதன்றி புகழ் தன்னுடையது என்று நினைத்தால் என்ன பொருள்? நினைப்பது ஒன்று, செய்வது வேறு.  தன்முனைப்புதான் மனிதனையும் இறையையும் பிரித்து வைக்கும் திரை.  தன்முனைப்பு என்கின்ற திரையை நீக்கவேண்டிய பயிற்சியில்,  புகழுக்கு ஆசைப்படுவது தன்முனைப்பு என்கின்ற திரைக்கு மேலும் மேலும் திரையை போர்த்துவதாகும்.  ஏற்கனவே விலங்கினப் பண்பான பிறர் வளம் பறித்தல் மனிதனிடம் கருமையத் தொடர்பாக நீடித்துக் கொண்டிருப்பதால் பிறருடைய புகழையும் மனிதன் அபகரிக்கத் தயங்குவதில்லை. 

      புகழ் இறையுணர் நோக்கத்தையே மறைத்துவிடும். மறக்கச்செய்துவிடும்.

      புகழை விரும்புவதுபிறவியின் நோக்கத்தை உறுதியும் செய்யாது, உறுதி செய்தாலும் பிறவியின் நோக்கத்தை அடையவும் விடாது.

      புகழ் தன்முனைப்பை ஊக்குவிக்கும்.

      புகழ், ‘இன்முகத்தையும், எளிமையையும்’ தனது செல்வமாக மகரிஷி அவர்கள் அனுபவித்ததை, ஒரு ஆன்மீக சாதகனை அனுபவிக்க முடியாதபடி  செய்துவிடும்.

      புகழ் ஆன்மீகத்தின் உச்ச நிலையானத் தெளிவினை ஏற்படுத்தாது.

      புகழ் ஏகவெளியான வீடு பேற்றினை அடையவிடாது.

  பொருளையும், புலன் இன்பத்தையும் இழப்பதற்கு வேண்டுமென்றாலும்கூட தயாராக இருக்கும் மனிதன், புகழையும், செல்வாக்கையும் இழக்கத் தயாராக இருப்பதில்லை. 

    மகரிஷி அவர்கள், மனிதனுக்கு வேண்டிய வளங்களில் ‘உயர்புகழை’ ஒன்றாகக் கருதி, அதனை மெய்ஞ்ஞானத்திற்கு முன்னா் நான்காவது வரிசையில் இணைத்துள்ளார்.  காரணம் என்ன?  புகழ் மனிதனுக்கு அவசியம் என்று கருதியா சோ்த்துள்ளார்?  பிறவியின் நோக்கம் மெய்ஞ்ஞானத்தின் உச்சத்தை அடைவது.   அந்த மெய்ஞ்ஞானத்திற்கு முன்னர் உயர்புகழை இணைத்துள்ளார்,

    மனிதன் சமுதாயத்தால் வளர்க்கவும், காக்கவும் படுகிறான்.  எனவே அந்த சமுதாயம் வளமாக இருக்க வேண்டும். அப்படியானால் ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்திற்கு திருப்பி செலுத்த வேண்டிய  ‘கடன்’ உள்ளது.(Man has due to the society. Due to the society becomes duty).  அந்த கடன்தான்  ‘கடமை’ எனப்படுகின்றது. அந்த வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதில் என்ன புகழ் உள்ளது?  அதனை புகழ் எனக்கருதினால் அங்கே தன்முனைப்பு வந்துவிடுகின்றது.  ஆனால் மனிதன் செய்யும் கடமையினால் பயன் பெறும் மக்கள் மனம் குளிர்ந்து வாழ்த்துவது தான் உயர்புகழ் என்கிறார் மகரிஷி அவர்கள்.

   புகழ் என்பது விரும்பிப் பெறுவதோ, ஏதேனும் ஒன்றைச்செய்து பெறுவதோ என்று நினைப்பதோ அல்ல என்கிறார் மகரிஷி அவர்கள். சமுதாயத்திற்கு நன்மையான காரியங்களைச் செய்து, அதனாலே மக்களின் துன்பங்கள் நீங்கி, அந்த மக்கள் பெறும் மனநிறைவுதான் புகழ்.  மனநிறைவால் வரும் வாழ்த்தே உயர் புகழ் என்கிறார்.   உதாரணம் மகரிஷி அவர்கள் செய்துள்ள அறிவுத் தொண்டேயாகும்.

    ஆகவே மனிதனுக்கு புகழ் அவசியம் எனக்கருதி  உயர் புகழை  சங்கல்பங்களில் ஒன்றாக சேர்க்கப்படவில்லை.  ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையை ஆற்ற வேண்டும் எனக்கருதி. நேரிடையாக கடமையை ஆற்றுங்கள் என வற்புறுத்தாமல் சொன்னது தான் உயர்புகழ்.

    மகான்கள் வரலாற்றில் தெளிவடைந்து இறையை உணர்ந்த பெரியோர்கள் அனைவருமே சமுதாயத்திற்கு சேவையைச் செய்ய முடியவில்லை.   அவ்வாறே மகரிஷி அவர்கள் இறையை உணர்ந்து விட்ட நிலையிலேயே இருந்து விட்டிருந்தால் ஆன்மீகத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டிருக்காது இன்று.  கல்விநிலையங்களில் ஒழுக்கப்பழக்க அறிவையும், இயற்கைத்தத்துவ அறிவையும் கொண்டுசென்றிருக்க முடியாது.   இப்போது செய்யப்பட்டுவரும் அறிவுத்தொண்டே இல்லாமல் போயிருக்கும்.    “சிலர் இறையுணர்வால் பேரின்பம் பெறுகிறார்கள்,  வேறுசிலர் தொண்டால்  மனநிறைவு பெறுகிறார்கள்.  ஒரு சிலர்  இறையுணர்வாலும், தொண்டாலும்  மனநிறைவு பெறுகிறார்கள்” என்று கூறும் மகரிஷி, தான் இறையுணர்வாலும், தொண்டாலும் சரிசமமாக மனநிறைவு பெற்றதாகக் கூறியுள்ளார்கள். மகரிஷி அவர்கள் தான் சமுதாயத்திற்கு இயற்கையைப்பற்றி கூறும் உண்மைகள் எல்லாம் இயற்கை தனக்கு அறிவித்தது.  எனவே அவர் அதனை சமுதாயத்திற்கு தெரிவித்து விடுவது தனது கடமையாகக் கருதினார்கள்.  இயற்கை தனக்கு தெரிவிக்கின்றது என்பதில் மனிதனுக்கு எங்கே புகழ்? 

   இயற்கை தெரிவிப்பதை எடுத்துச் சொல்வதால் மக்கள் பயன் அடைவதால் வரும் மனநிறைவும், அதைக் கண்டு தான் மனநிறைவு பெறுவது தான் உயர் புகழாகும்.  ஆகவே இயற்கை சமுதாயத்திற்கு  தெரிவிக்க மகரிஷி அவர்களை ஒரு கருவியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டது.  எல்லோரையும் கருவியாகத் தேர்ந்தெடுப்பதில்லை.  அதற்குரிய தகுதியுடையவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றது. ஆனால் மகரிஷி அவர்கள், தன்னுடைய மாணவர்களை இயற்கை கருவியாகத் தேர்ந்தெடுக்கும் வகையிலே உருவாக்கியிருக்கிறார்கள்.  ஆகவே இன்று சமுதாயம் உள்ள நிலையில் அறிவை மேம்படுத்தக் கூடிய அறிவுத்தொண்டு மிக, மிக அவசியமாக உள்ளது.  அந்த அறிவுத் தொண்டை செய்யவல்லவர்கள் வேதாத்திரி சிந்தனாப்பள்ளி மாணவர்கள்(Students of Vethathiri school of thoughts)  இவர்களை  ‘இறைத் தூதுவா்கள்’ என்கிறார் மகரிஷி அவர்கள்.

   தூதுவர் என்றால் என்ன?  தூது என்றால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குச் செய்தி அறிவிக்கும் பணி.  தூதுவர் என்றால் செய்தி அறிவிக்கும் பணியைச் செய்பவர்.  அப்படியானால் இறைத்தூதர் என்பவர்,  சிந்திப்பதன் மூலம், இறையிடமிருந்து செய்திகளை வாங்கி, விளங்கி, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கிணங்க அதனை சமுதாயத்திற்கு அறிவிப்பவராவார். இதன் மூலம் அறிவுத் தொண்டாற்றி, அதனால் சமுதாயம் பயன் பெற்று வாழ்வதை கண்ணுறும் நிகழ்ச்சியே உயர்புகழுக்கான செயலாகும். 

  பாராட்டு என்கின்ற சொல்லுக்கு மகரிஷி அவர்கள் கூறும் விளக்கமாவது:

ஒருவரது செயலால் பாரே (உலகமே) பயனடைந்து மகிழ்ச்சியால் ஆடி குலுங்குவதால் (பார்+ ஆடுவது = பாராட்டு) வரும் சொற்களே பாராட்டு என்பார்.

   ஆகவே இன்றைய சமுதாயச் சூழலில்  சமுதாயத்திற்கு தேவைப்படுவது அறிவுத் தொண்டு.  ஆகவே அறிவுத் தொண்டாற்ற இறைத்தூதுவர்களாக செயலாற்ற வேண்டியே மகரிஷி அவர்கள் பயிற்சி அளித்து  ‘அருள்நிதி’ என்கின்ற பட்டத்தை அளித்துள்ளார்கள்.  எனவே உயர்புகழ் என்கின்ற சங்கல்பம் நிறைவேறுவதற்கேற்றவாறு அறிவில்  நாளும், நாளும் மேம்பட்டு அறிவுத் தொண்டாற்றி இன்புற்று வாழ்வோம்.  வாழ்க வேதாத்திரியம்.  வளர்க வேதாத்திரியம்.  முற்றும்.

 

*****

முக்கிய அறிவிப்பு

வாழ்க வளமுடன்,                                                  

                     அடுத்த அறிவிற்கு விருந்தில் (20-12-2015 ஞாயிறு) ‘சிந்திக்க வினாக்கள்’ பகுதியில் வந்துள்ள வினாவிற்கான விடையை அறியலாம்.  படித்துவிட்டு தங்களின் மேலான கருத்துக்களை மற்ற சத்சங்க உறுப்பினர்கள் அறியும் வகையில் ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதி வழியாக இணைய தளத்திற்கு அனுப்பும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

 வாழ்க வளமுடன்