இறை அருள் பெற …….

வாழ்க மனித அறிவு                                                                                    வளர்க மனித அறிவு

இறை அருள் பெற …….

FFC – 29

26-11-2014

இறையே அறிவாக மனிதனிடம் உள்ளது. இறையையே மனிதன் தன்னிடம் வைத்துக் கொண்டு ஏன் துன்பத்துக்குள்ளாக வேண்டும்? .மனிதனின் செயலில் விளைவாக வருவது இறை என்கின்ற நியதியைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இறையே மனிதனிடம் அறிவாக இருந்தாலும், மனிதனுடையச் செயலைப் பொருத்து விளைவுகள் துன்பமாக வரும். இறையே, முதல் மனுநீதிச் சோழன்.

அறிவிற்கு விழிப்புணர்வு வேண்டும். ஒரு செயலைச் செய்யும் முன்னரே அதன் விளைவைக் கணித்து அச்செயலைச் செய்ய வேண்டும். ஏற்கனவே அச்செயலைச் செய்து அதன் விளைவை இன்பமாகவோ அல்லது துன்பமாகவோ அனுபவித்திருக்கலாம். மீண்டும் அச்செயலை செய்ய வேண்டிய சூழல் இப்போது வருமானால், ஏற்கனவே அச்செயலை செய்து அனுபவித்த அனுபவம் கவனத்திற்கு வந்து அச்செயலை செய்வதா செய்ய வேண்டாமா என்கின்ற முடிவை அந்த நொடியிலேயே அறிவு எடுக்க வேண்டும்(Quick insight of the mind). நுண்மாண் நுழைபுலன் (விரைந்துணர் அறிவாற்றல், அறிவின் தெளிவும் விரைவும் கூடிய தன்மை = perspicacity) வேண்டும். நுண்மாண் நுழைபுலன் மூன்று சொற்களை கொண்டது.
1) நுண்: – நுண் என்றால் நுட்பம் அல்லது நுண்ணியது, கூர்மையானது என்று பொருள்.
2) மாண்: – மாண் என்றால் மாண்புடையது என்று பொருள். அதாவது நுண்மாண் என்பது விரிந்த சிந்தனையால் உயர்ந்த ஒரு பெருந்தன்மை எனலாம்.
3) நுழைபுலன்: – நுழைபுலன் என்றால் ஊடுருவி அறியும் திறன்.

தவறு செய்வது. நாணத்தை(வெட்கத்தை) ஏற்படுத்த வேண்டும். திருவள்ளுவர் மனிதனுக்கு இருக்க வேண்டிய உடைமைகளை(சொத்து, உரிமையடையது) வலியுறுத்திக் கூற வந்தவர் அன்புடைமை, அடக்கம் உடைமை, ஒழுக்கம் உடைமை, பொறை உடைமை, அறிவு உடைமை, அருள் உடைமை, ஊக்கம் உடைமை, ஆள்வினை உடைமை, பண்பு உடைமை, ஆகிய ஒன்பது உடைமைகளைக் கூறி கடைசியாக நாண் உடைமை என்கின்ற உடைமையையும் சோ்த்து பத்து அதிகாரங்களை ஏற்படுத்தியுள்ளார். மனிதனுக்கு இருக்க வேண்டிய மற்றவைகளைக் கூறிவிட்டு கடைசியாக நாணம் இருக்க வேண்டும் என்கிறார்.
அப்போதுதான் மனிதன் முழுமை அடையமுடியும். எப்படி? தவறு செய்ய மாட்டான். ஆகவேதான் தவறுகளே செய்யாத சான்றோர்களுக்கு நாணம் என்பது அணிகலன் என்கிறார், நாணமுடைமையில்லை என்பதால்தான் குடும்பத்திலிருந்து சமுதாயம் வரைக் குற்றங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.. ஆகவே, வெட்கப்படவேண்டியிருக்கச் செய்கின்ற செயல்களாகிய தவறுகளைச் செய்யக் கூடாது,
அந்த சான்றோன்மையாகிய பெருந்தன்மை இருந்தால், அறிவு எந்தச் செயலையும் செய்வதற்கு முன்னர் நுணுகி ஊடுருவி அறிந்து முடிவு எடுக்கும். இதற்கு நினைவாற்றல் மிக மிகத் தேவை. அநேகர் நினைவாற்றல் குறைவுடையோர்களாக இருப்பதால் அவர்களுக்கு நுண்மாண் நுழைபுலன் என்கின்ற அறிவின் திறன் எவ்வாறு இருக்க முடியும்? அவா்களிடம் இறையே அறிவாக இருந்தும் என்ன பயன்? எவ்வாறு காப்பையும், இறையருளையும் பெறமுடியும்?
ஆறாம் அறிவு அறியும் திறனுடையது. எனவே ஆறாம் அறிவு தன்னுடைய எல்லாத்திறன்களையும் அறிந்து பயிற்சி செய்ய வேண்டும். வெறும் புலன்வழி வாழ்க்கையையே முக்கியமாகக் கருதி வாழ்ந்தால், அதாவது வெறும் அன்னமய கோசம் மற்றும் மனோமய கோசத்திலேயே மனிதனின் எண்ணம் செயல்பட்டுக் கொண்டிருந்தால் அறிவு தன்னுடைய முக்கியமான, தன்னிடம் மறைந்து இருக்கின்ற புதையலாக உள்ள திறன்களைப் பயன்படுத்த முடியாது. அதற்கு, புதையல்கள் என்னென்ன என்று தெரிந்து அவைகளைப் பயிற்சி செய்து பழைய பழக்கத்தை வென்று அறிவை முழுமைப் படுத்த வேண்டும். மனவளக்கலையின் நோக்கமே பேரறிவின் பின்னமாக மனித அறிவு இருந்தாலும் பரிணாமக் கசடுகளால் அது குறையுடையதாக இருப்பதால் அதனை முழுமையாக்கி முக்தி நிலையை அடையச்செய்வதாகும்.
”அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம்,
அறிவு முழுமை அது முக்தி.” என்கிறார் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
பேரறிவாகிய இறையே மனித அறிவாக இருந்தாலும் அது நேரிடையாக மனித அறிவாக வரவில்லை. அது விலங்கின அறிவாக வந்துதான் மனித அறிவாக வந்துள்ளதால் அறிவிற்கு பரிணாமக் கசடு வந்து விட்டது. (கசடு என்றால் பொருள் உற்பத்தியில் ஏற்படும் கழிவு). பரிணாமக் கசடுகள் என்றால் என்ன என்று நாளைய விருந்தில் பார்ப்போம். . . . . .நாளைத் தொடரும்
வாழ்க அறிவுச் செல்வம்.                                                                                  வளர்க அறிவுச் செல்வம்