இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும். 3/?

வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

 
அ.வி. 197

12-06-2016-ஞாயிறு

FFC-197-12-6-16-இறைநீதியின்-sub title

‘இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும்’ என்கின்ற தலைப்பில் கடந்த இரண்டு அறிவிற்கு விருந்துகளில் சிந்தித்து வருகிறோம். இன்று செயலுக்கு விளைவு உண்டு என்கின்ற தத்துவத்தை ‘கூர்தலறம்’ என்று பெயரிட்டு, அதனை இறைநிலையின் திறன்களில் மூன்றாவதாக ஏன் அழைக்கிறார் மகரிஷி அவர்கள் என்றும், கூர்தலற நெடிய – முடிவில்லாத் தொடர் பயணத்தின் மூன்றாவது பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு, மனிதன் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ற விளைவு எவ்வாறு இறையால்/இயற்கையால் கருமையப் பாலங்கள் வழியாக வழங்கப்படுகின்றது என்பதனை அறிய இருக்கிறோம்.
செயலுக்கு ஏற்ற விளைவைத் தருவது என்பதால், கூர்தலறம் என்பது பெரும்பாலும் மனிதனுடைய செயலுக்கு விளைவினைத் தருவது என்கின்ற கண்ணோட்டத்தில் மட்டுமே விளங்கிக் கொள்ளப்பட்டுவருகின்றது.
இறையின் மூன்று திறன்களில்(capabilities) ஒன்றாக இருக்கும் கூர்தலறம்,
தன்னுடைய பரிபாலனத்தை,
மனிதன் தோன்றிய பிறகுதானா,
அவனுடைய செயலுக்கு ஏற்ற விளைவினைத் தருவதில் மட்டுமா,
ஆரம்பித்திருக்கும்? அப்படி இருக்க முடியுமா?!

இறைமுழுவதுமாக வெளியாக இருந்தபோது, அதாவது முதல் துகள்கூட உருவாவதற்கு முன்னர், அதற்கு ஆட்சியோ, ஆளுகையோ தேவையில்லை. ஆனால் எப்போது முதல் துகள் உருவாக ஆரம்பித்ததோ அப்போதிலிருந்தே கூர்தலறம் செயலுக்கு வந்து விட்டது. ஏனெனில், இறைவெளியின் முதல் துகள் என்பது இறைவெளியின் முதல் செயலுக்கான விளைவு. இறைவெளியின் தன்னிறுக்கச் செயலால் உருவாகிய துகள்களை விளைவாகத்தானே கருதமுடியும்?
நொறுங்கியது மட்டுமல்ல நொறுங்கியவுடன் சுழலவும் ஆரம்பித்துவிட்டது. சுழல்வதும் விளைவுதான். சுழற்சி என்கின்ற விளைவிற்கு தொடர் விளைவும் ஏற்பட்டுள்ளது. அது எது?
தன்னுடைய செயலாகிய நொறுங்குதலால் துகளாகி, துகள் சுழன்றதன் விளைவாக விரிவலை தோன்றியது; அதன் தொடர் விளைவு தான் காந்தம். மேலும் பஞ்சபூதங்களாகி, காந்தத்தின் திணிவால், அழுத்தமாக, ஒலி, ஒளியாக, சுவையாக, மணமாக தன்மாற்ற தொடர் விளைவுகளாகியது. இந்த காந்த தன்மாற்ற விளைவுகளை உணா்வதற்காக ஓரறிவு உயிரினங்களிலிருந்து ஐயறிவு வரை சீவஇனங்களாகத் தன்மாற்றங்களாகியது. இப்போது நாம் சிந்திப்பதுபோல் தானே தன்னையே ரசிக்க, சிந்திக்க, ஆறாம் அறிவுடைய மனிதனாக வந்துள்ளது. இந்த தன்மாற்ற நிகழ்ச்சியில், சடப்பொருட்களாகியதும், உயிரினங்களாகியதும், இறையின் இயக்கம் தானே. எனவே, எவ்வாறு மனிதன், இப்போது தான் தயாரிக்கும் இயந்திரத்தில் அதன் இயக்கம் அதற்கான ஒழுங்கின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றானோ, அதுபோல்தான் இறையின் ஒவ்வொரு தன்மாற்ற நிலையிலும் ஒழுங்கு அவசியமாக இருக்கின்றது. அது இயல்பாக பேரறிவாகிய இறையில் இல்லை என்றால் தன்மாற்றமே வெற்றி அடைந்திருக்க முடியாது.

இயக்கம் என்றாலே அதில் ஒழுங்கு இருக்க வேண்டும். இயக்கத்தில் ஒழுங்கு இருந்தால்தான் அந்தந்த இயக்கத்திற்குரிய விளைவு வரமுடியும். ஆகவே இயக்க ஒழுங்கே அறமாகும்.வ்வொரு இயக்கத்திலும் ஒழுங்கை உறுதிப்படுத்தும் அறத்தில், கூர்ந்து கவனித்து நுட்பமாகவும், நிச்சயமாகவும், இம்மிகூட பிசகாமல் உரிய விளைவுகளைத் தரக்கூடிய இறைத் தன்மையை ‘கூர்தலறம்’ என்கிறார் மகரிஷி அவர்கள்.
தொடர் விளைவாகிய காந்தத்தை மலரச் செய்யக்கூடியத் திறமையைத்தான் மகரிஷி அவர்கள் இறைநிலையின் கூர்தலறம் என்கின்ற புனிதச்சொல்லால் அழைக்கிறார். தானே நொறுங்கியது. அது அதனுடைய செயல். நொறுங்கிய விளைவிக்குத் தொடர் விளைவாக காந்தமாக மலர்ந்ததும் இறையேதான். ஒன்றேதான் பலவாகியது என்பதால் செயல் புரிந்ததும், விளைவாக வருபவனும் அவனே என்றாகத்தானே இருக்க முடியும்! ஆகவே இறையின் கூர்தலறம் என்பது முதல் துகள் ஆனதிலிருந்தே ஆரம்பித்து விடுகின்றது. அது இன்றும் மனிதனுடைய 720 கோடி உலக மக்கள் வாழ்விலும் இடைவிடாது நொடிக்கு நொடி ஆளுகை புரிந்து கொண்டிருக்கின்றது. எப்போதும் மனிதர்களின் வாழ்வில் செயல்புரிந்து கொண்டே இருக்கும் தன்மையுடையது. அதாவது மனிதனுடைய ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ற விளைவினைத் தந்து கொண்டிருக்கின்றது.
ஆகவே கூர்தலறம் முதல் துகள் உருவானதிலிருந்து விளைவைக் கொடுக்க ஆரம்பித்து, இந்த நொடி வரை செயல்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றது. இனிமேலும், எப்போதும் தவறாது செயல்பட்டுக் கொண்டேதான் இருக்கும். இத்தகைய இறைவெளிக்கே உள்ள திறமையை ‘கூர்தலறம்’ என்கின்ற சொல்லை அறிமுகப்படுத்தி அழைக்கிறார் மகரிஷி அவர்கள். முதல் துகள் நொறுங்கியதிலிருந்து கூர்தலறத்தின் நெடிய பயணத்தை மூன்றாகப் பிரிக்கலாம்.

1) முதலாவது, முதல் துகள் உருவானதிலிருந்து பஞ்சபூதங்கள் உருவாகியது வரை.

2) இரண்டாவது, ஓரறிவு சீவனிலிருந்து ஐயறிவு சீவன்கள் தோன்றியது வரை.

3) மூன்றாவது, ஆறறிவு சீவனாகிய ஆதிமனிதனிலிருந்து இப்போது வரை.

இப்போது நாம் சிந்தனைக்கு எடுத்துக் கொள்வது முன்றாவது பகுதியாகும். ஏனெனில் மற்ற பகுதிகளைவிட மூன்றாவது பகுதி மனிதனோடு சம்பந்தப்பட்டு இருப்பதால் தன்னைப்பற்றி அறிய மனிதனுக்கு ஆவல் அதிகம் இருக்கும் என்பதாலும், மேலும் மனிதகுலத்தில் மட்டும்தான், மனிதனால் ஏற்படுத்தப்படும் சிக்கல்கள் பெருகி தனிமனிதனிலிருந்து சமுதாயம் வரை துன்பக்கடலில் மூழ்கி அல்லறுவதால், அதற்கு தீர்வு காண்பதற்கு வழிவகுக்கும் இந்த மூன்றாம் பகுதியை மட்டும் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். மற்ற இரண்டு பகுதிகளையும் மனிதன் அறிய வேண்டியதுதான். அதனை வேறொரு சமயத்தில் எடுத்துக் கொண்டு சிந்திப்போம். இறைநீதிதான் கூர்தலறம், செயல்விளைவுத்தத்துவம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த இறைநீதி எவ்வாறு பரிபாலனம் செய்கின்றது என்பதனை அறிந்து கொள்வோம். அதற்கு பரிபாலனம் என்றால் என்ன என்று அறிய வேண்டும்.

 பரிபாலனம் என்றால் என்ன?

பரிபாலனம் என்றால் ‘நிர்வாகம்’, ‘ஆட்சி’ ‘ஆளுகை’ ‘காவல்’ ‘பாதுகாப்பு’(protect)என்று பொருள். உதாரணத்திற்கு: — அரசர் ராஜ்யத்தை நீதி தவறாமல் பரிபாலனம் செய்தார். ஆட்சி பரிபாலனம் என்றால் பாதுகாப்புடன் செய்தல் என்று பொருள். நீதிபரிபாலனம் என்றால் நீதிதவறாமல் ஆட்சிசெய்தல் என்று பொருள். நீதிதவறாமல் ஆட்சி செய்தாலே அது பாதுகாப்பான ஆட்சியாகத்தானே இருக்கும். ‘ராஜ்யபரிபாலனம்’ என்றால் ‘to reign well’ என்று பொருள். ‘இறையின் நீதிபரிபாலனம்’ என்றால் ‘செயலுக்குரிய விளைவை’த் தரக்கூடிய நீதி, நோ்மை உடைய செங்கோலாட்சி இறையால் நடத்தப்படுகின்றது என்று பொருள்.
இதுவரை தலைப்பிலுள்ள சொற்களான, இறை, நீதி – கூர்தலறம், பரிபாலனம் ஆகியவற்றிற்கான பொருட்களை அறிந்து கொண்டோம். கருமையம் என்பதனை ஏற்கனவே அறிவோம். கருமையம் என்பது மனிதனின் பெருநிதி. மனிதனின் செயலுக்கேற்ற விளைவைத் தரும் தெய்வீக நீதி மன்றம். வங்கியில்(bank) பணம் செலுத்தும் போதும், எடுக்கும் போதும் குறிக்கப்படும் Pass Book ஐப் போன்றது கருமையம். வங்கியில் ஒருவர் செலுத்தும் பணத்தை செலுத்துபவரின் கணக்குப்புத்தகத்தில்(Pass Book) குறிப்பதோடு மட்டுமல்லாது, வங்கியின் பதிவேட்டிலும் (ledger) குறிக்கப்படுவதுபோல் வான்காந்தத்திலும் ஒரு தனிமனிதனின் செயல்பதிவுகள் கருமையத்தில் பதிவாவது போல் பதிவாகின்றது. கருமையப்பதிவு பற்றியும், வான்காந்தப் பதிவுபற்றியும் எளிதில் புரிந்து கொள்வதற்காக இந்த உதாரணம் எடுத்துக் கொள்ளப்பட்டது, இதற்கு மேலும் சிந்தனையில் ஆழ்ந்து சென்று, இவ்விரண்டு மறைபொருட்களைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.

பாலம் என்றால் என்ன?

இப்போது ‘பாலங்கள்’ என்கின்ற சொல்லிற்கு வருவோம். பாலம் என்றால்  இரு பகுதிகளை இணைப்பதற்கானப் பாதை(bridge). செயலுக்குரிய விளைவைத் தருவது இறைநீதி – செயல் விளைவு நீதி. மனிதன் செய்யும் செயல்களுக்குரிய விளைவு இன்பமாகவும் இருக்கலாம். அல்லது துன்பமாகவும் இருக்கலாம். இன்பம், துன்பம் என்பது செயலின் தன்மையைப் பொருத்திருக்கும். செயலுக்கான விளைவு கருமையப்பாலங்களின் வழியாகத்தான் வருகின்றன. எவ்வாறெல்லாம் இறை நீதி பரிபாலனம் செய்கின்றதை அறிய கருமையப் பாலங்கள் பற்றிய சிந்தனை உதவியாக இருக்கும். மனிதனின் செயலுக்குரிய விளைவுகள் ஒன்று இன்பமாக இருக்க வேண்டும். அல்லது துன்பமாக இருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் கருமையப் பாலங்கள் வழியாகத்தான் (channels) மனிதனை வந்தடைய வேண்டும். கருமையம் நான்கு வகையிலே, மனிதனின் செயல்களையும் அதற்கான விளைவுகளைத் தருவதில் மனிதனை இணைக்கின்றது. அந்த கருமையப் பாலங்கள் என்னென்ன?
1) உடலுக்கும் – மனதிற்கும் இடையே உறவாக ( ஒத்த உறவு – co-ordination)
2) தனிமனிதனுக்கும் – சமுதாயத்திற்கும் இடையே நட்பாக (நட்புநலம்)
3) மனிதனுக்கும் – பூமி முதலான நவகோள்களுக்கும் இடையே இனிமையாக(இனிமை காத்தல்)
4) மனிதனுக்கும் – அருட்பேராற்றலுக்கும் இடையே அருட்பாலமாக ( அருளைப் பெறுதல்)
இவ்வாறாக இணைப்புகளாக, பாலங்களாக அமைந்து மூன்று மறைபொருட்களான, இறை, உயிர், மனம் ஆகியவற்றின் இருப்பிடமாக (Store House) அமைந்ததுதான் கருமையம். இருந்தாலும் மனிதனுள் மற்ற உறுப்புகள் போல் அல்லாமல் கருமையம் மறைந்தே இருப்பதால், இதனை மறைபொருள் என்றும், அதுவும் மகாமறைபொருள் என்றும் கூறலாம். ஏனென்றால் அது ஒரு தெய்வீக நீதிமன்றமல்லவா?
இந்த நான்கு பாலங்கள் வழியாகத்தான் மனிதனுடைய செயல்களுக்குரிய விளைவுகளான இன்பமோ, துன்பமோ, அமைதியோ, பேரின்பமோ வருகின்றது.

செயலின் விளைவு துன்பமாக இருந்தால் அச்செயல் பாவம் என்றும், இன்பமாக இருந்தால் அச்செயல் புண்ணியம் என்றும் கூறுகிறோம். பாவப்பதிவுகளின் சின்னம் உடலில் நோய், உள்ளத்தில் களங்கம். உடலைப் பேணிக்காக்காமல் அலட்சியத்தாலோ, அறியாமையாலோ உடலை இயக்கினால் வருவது துன்பமாகிய நோய். உதாரணம் — அதிக உணவு துன்பமாகிய அஜீரணத்தை ஏற்படுத்தும். உள்ளத்தில் களங்கம். களங்கம் என்றால் அவப்பெயர்; ஒழுக்க நடத்தையில் கெட்டப் பெயர். உடலுக்கும் மனதிற்கும் இடையே ஒத்தஉறவு இருக்க வேண்டும். நல்வாழ்விற்கு உடலுக்கும் மனதிற்கும் இணக்கம் வேண்டும்.

தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையே இனிமை காக்க வேண்டும். மனிதன் தனித்து வாழ்வதில்லை. சமுதாயத்தில் இருந்துகொண்டு, சோ்ந்துதான் வாழ்கிறான். அப்போது தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் சுமுக உறவு இருக்க வேண்டும். வாழ்க்கை வள உயர்வுப் படிகளில் ஒன்றான நட்பு நலம் அவசியம். நட்புநலம் மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படுகின்றது. காரணம், அவரவர்களின் கருமையப் பதிவுகளே. நட்புநலம் இல்லை எனில் பகை, வெறுப்பு, பிணக்கு ஆகியவை ஏற்பட்டு, அவற்றின் விளைவுகளாகத் துன்பங்கள் உண்டாகும். கருமையப் பதிவுகளுக்கு ஏற்பதான் நட்புநலம் இருக்கும்.

மனிதனுக்கும் கோள்களுக்கும் தொடர்பு உள்ளது. ஒவ்வொரு கோள்களிலிருந்தும் வரும் காந்த அலைகள் மனிதனை வந்தடையும் போது சில மாற்றங்களை உடலிலும், உள்ளத்திலும் ஏற்படுத்துகின்றது. நல்ல கருமையப்பதிவுகள் இருப்பின் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி இன்பத்தையும், தீய கருமையப்பதிவுகள் இருப்பின் துன்பங்களையும் ஏற்படுத்தும். இவ்வாறாக மூன்றாவது வழியாக கருமையப்பதிவுகளுக்கு ஏற்ப துன்பமோ அல்லது இன்பமோ வருகின்றன.

மேற்கூறிய மூன்றின் வழியாக துன்பத்தையோ அல்லது இன்பத்தையோ விளைவுகளாக தருவதோடு மட்டுமல்லாது மனித வாழ்வு சிறப்புற்று வாழ்வாங்கு வாழ்வதற்கு அவசியமான இறையருளைத் தருவதற்கும் நான்காவது இணைப்பை பயன்படுத்திக் கொள்கின்றது கருமையம். கருமையப் பதிவுகளுக்கு ஏற்ப இறையருளுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு தகுந்த குருவை தரிசிக்க வைப்பதுகூட கருமையப்பதிவுகளே. அதனால்தான் குருவை தரிசிப்பதுகூட பூர்வபுண்ணியத்தால்தான் என்பர் பெரியவர்கள்.

பூர்வபுண்ணியம் திடீரென்று எங்கிருந்து வருகின்றது?

கருமையத்திலிருந்து வருகின்றது. ஏற்கனவே செய்துள்ள நற்காரியங்கள் ஒவ்வொன்றும் கருமயத்தில் பதிந்துள்ளன.  நற்காரியங்களில் சிலவற்றிற்கு பயன் உடனேவும் வரலாம். அல்லது சில நேரங்களில் நற்காரியங்கள் செய்த அன்றே, விளைவுகள் உடனே வராமல், ஏற்கனவே பதிந்துள்ள கருமைய–நற்பதிவுகள் பின்னர், உரிய நேரத்தில் நல்விளைவுகளை ஏற்படுத்தும்.  அப்போது இப்போது வரும் நல்விளைவை ஏற்கனவே செய்துள்ள நற்செயல்களோடு இணைத்துப்பார்க்க முடியாமலும் இருக்கலாம். காரணம் இப்பிறவியில் செய்துள்ளதாக அந்த நற்செயல்கள் இருந்தாலும் அவை மனிதனின் ஞாபகத்தில் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அல்லது இப்பிறவியில் அந்நல் வினைகள் செய்யாதிருந்து நம்முடைய முன்னோர்கள் செய்திருந்து கருமையத் தொடர்பாக நம்மிடம் வந்து, விளைவுகள் இப்போது நம் வழியாக வரலாம். இந்த நேரத்தில்தான் நல்விளைவுகள் வரும்போது ‘பூர்வபுண்ணியத்தால் வந்தது’ எனப்படுகின்றது.

அடுத்த விருந்தில் (15-06-2016-புதன்) குருதரிசனத்தையும், அதன் பின்னர் சீடனிடம் ஏற்படும் மாற்ற விளைவுகளையும், முன்னேற்றங்களையும், கருமையம் தன்னிடம் பதிந்துள்ள பதிவுகளுக்கேற்ப, தனது நான்காவது பாலத்தின் வழியாக நிறைவேற்றுவது பற்றி அறிவோம்.

வாழ்க அறிவுச் செல்வம்                    வளர்க அறிவுச் செல்வம்