இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும் 4/?

வாழ்க மனித அறிவு                            வளர்க மனித அறிவு

இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும் 4/?

FFC 84

20-05-2015—புதன்

கருமையப்பதிவே குருவுடன் இணைத்து வைக்கின்றது.

சென்ற அறிவிற்கு விருந்தில் அறத்தை நிலைநாட்டுவதில், இம்மிகூட பிசகாமல், கூர்ந்து கவனித்து உரிய விளைவுகளைத் தருவதால், அத்தகைய இறைத் தன்மையை ‘கூர்தலறம்’ என்கிறார் மகரிஷி அவர்கள் என்று அறிந்தோம். கூர்தலறம், துகள்கள் உருவானதிலிருந்தே பரிபாலனம் செய்ய ஆரம்பித்து, கருமையப் பாலங்கள் வழியாக மனிதனுடைய செயல்களுக்கு ஏற்ற விளைவுகளை தந்துகொண்டிருக்கின்றது என்றும் அறிந்தோம். இன்று கருமையத்தின் நான்காவது பாலம் வழியாக தன்னிடம் பதிந்துள்ள பதிவுகளுக்கேற்ப, தனிமனிதனுக்கும் இறையருளுக்கும் இணைப்பைக் கொடுப்பதை விரிவாக அறிய இருக்கிறோம்.

“மாதா, பிதா, குரு தெய்வம்” என்கின்ற ஆன்றோர் மொழியின்படி குருவை அறிமுகப்படுத்தும் வைபவமே மறக்கபட்டுவிட்ட நிலையில், இறை/இயற்கை மீண்டும் அதனை, இரண்டாம் உலகப் பொது மறைநூல் — திருவேதாத்திரியத்தை அருளிய வேதாத்திரி மகரிஷி அவர்களின் வழியாக புனருத்தாரணம் (revive) செய்துள்ளது. ஒன்றே பலவாகியது என்கின்ற அத்வைதத்தை வேதங்களிலிருந்து தெளிவாக்கிய ஆதிசங்கரா், குருதரிசனத்தின் பயன் பற்றிக் கூறுவதனை நினைவு கூர்ந்து சிந்தனையைத் தொடங்குவோம்.

“க்ஷணமிஹ ஸஜ்ஜன ஸங்கதி ரேகா I வதி வார்ணவ தரணே நௌகா II”

                                                                                 —–மோஹமுத்கரம் –ஆதிசங்கரர்.

பொருள்:— “கணநேரமானாலும்கூட தூயவர்களுடன் கொள்ளும் தொடர்பு வாழ்க்கைப் பெருங்கடலை கடக்க உதவுகிறது.”

ஒரே குடும்பத்தில் பிறந்தவர்களில் எல்லோருமே குருவை அடையும் பாக்கியம் பெறுவதில்லை. அப்படியே குரு கிடைத்தாலும், திருமூலர் கூறும் அறியாமையை நீக்கும் பக்குவர் குருவாக கிடைக்க வேண்டும். இதுவும் அவரவா் கருமையப்பதிவுகளைப் பொருத்திருக்கின்றது.

கிடைக்கும் குரு பரிபக்குவராக இருக்க வேண்டுமென்று, ‘அபக்குவன்’ என்கின்ற தலைப்பில் திருமூலர் கூறுவதனை இப்போது அறிவோம். ஏன் ‘அபக்குவன்’ என்று அப்பாடலின் தலைப்பிற்கு பெயரிட்டுள்ளார் என்பதனை அறிவோம். ‘பக்குவன்’ என்கின்ற சொல்லின் எதிர்ச்சொல். ‘அபக்குவன்’ பக்குவன் என்கின்ற சொல்லிற்கான பொருளைத் தெரிந்து கொண்டால் அபக்குவன் என்பதற்கான பொருள் தெரிந்துவிடும். பக்குவம் அடைந்தவன் பக்குவன். பக்குவம் என்றால் தகுதி, முதிர்ச்சி, ஆத்மபரிபாகம். ஆத்மாவை அறிந்தவன் என்று பொருள். பக்குவன் என்றால் ஆத்மாவை அறிந்த பக்குவன். ஆத்மாவை அறிந்து ஞானக்கண் திறந்தவன். ஆத்மாவை அறிந்து ஞானக்கண் திறந்தவன்தான் மற்றொருவரின் ஞானக்கண்ணைத் திறக்க முடியும் என்பதால், குருவினால் எவ்வாறு நான்கு வழிகளில் தெளிவை அடைய முடியும் என்று தனது திருமந்திரம் 139 ல் கூறியுள்ள திருமூலர், அத்தகையத் தெளிவினை உண்டாக்கக் கூடிய குருவைத் தேர்ந்தெடுப்பதில் எவ்வாறு கவனமாக இருக்க வேண்டும் என்பதனையும் திருமந்திரம் 1680 ல், பக்குவமில்லாத குரு கிடைத்தால் என்னவாகும் என்றுகூறி ஆன்ம சாதகனை எச்சரிக்கிறார்.

அபக்குவன்
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழி விழுமாறே.                           திருமூலர் திருமந்திரம் 1680

பொருள்:– ‘குருட்டினை’ என்று திருமூலர் குறிப்பிடுவது ‘அறியாமை’. குரு என்பவா் அறியாமையைப் போக்கக் கூடியவராக இருக்க வேண்டும். அறியாமையைப் போக்கும் நல்லாசிரியரைத் தேடிப் போகமாட்டார்கள் சிலர். அறியாமையை நீக்க முடியாத ஒருவரை குருவாகக் கொண்டு அவரிடம் செல்வர். இவ்வாறாக அறியாமையில் உள்ளவரும், அறியாமையை நீக்க முடியாதவரும் ஒன்று சேர்வது குருடுக்கு குருடு வழி காட்டுவது போன்றது. விளைவு இருவரும் துன்பக்குழியில் விழுந்து துயருறுவதைப் போன்றதேயாகும். ஆகவே துன்பக்குழியில் வீழ்வதால், குருட்டினை நீக்கா குரு கிடைப்பதுகூட பாவப்பதிவுகளால் தானே?

ஆகவே எத்தகைய குரு கிடைப்பார் என்பது கூட அவரவா் எண்ணிய எண்ணங்கள் மற்றும் செய்துள்ள செயல்களின் கருமையப் பதிவுகளைப் பொருத்தது. எண்ணியுள்ள எண்ணங்கள் என்பது ஒருவா்

 • இப்பிறவியிலோ அல்லது தனக்கு முந்தைய பாட்டன்-பூட்டன்(பாட்டனின் தந்தை- கொள்ளுத்தாத்தா) வம்சாவளியிலோ யாராவது எண்ணியதாகக்கூட இருக்கலாம்.
 • எண்ணியது என்ன?
 • இறை உணர் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு, அந்நாட்டத்தால் இறை என்பது என்ன, இறைவனை நம்மாலும் பார்க்க முடியாதா,
 • அதற்கென பிரத்யேகப் பிறவி எடுத்து, பிறந்து வரவேண்டுமா, என்கின்ற வினாக்கள் உள்ளத்தை அரித்திருக்க வேண்டும். அல்லது
 • ஒரு முறையாவது அக்கேள்வி உள்ளத்தில் எழுந்திருக்க வேண்டும்.
 • ஒரு வேளை அவ்வாறு எண்ண நாட்டம் இருந்து, அந்நாட்டம் முந்தைய தலைமுறைகளில் நிறைவேறாமல் தேக்கமுற்று,
 • கருமையத் தொடர்பினால், இப்போது நம்கருமையத்திற்கு கொண்டு வரப்பட்டு (carried forward to this birth),
 • நிறைவேற்றி வைக்கப்பட்டதே, நம்முள் இறைஉணர்வையும் அறவுணர்வையும் ஏற்படுத்தியுள்ள மகரிஷி அவர்களின் தரிசனம்.

ஆகவே, தீருமூலரை மானசீகக் குருவாகக் கொண்டு, தனது ஞானக்கண் திறக்கப் பெற்ற ஞானியான வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு சீடராகியவர்கள் எத்தகைய புண்ணியவான்கள், பாக்கியசாலிகள், அதிர்ஷ்ட சாலிகள் என்பதனை

 • நினைந்து, நினைந்து,
 • மகிழ்ந்து, மகிழ்ந்து,
 • பரவசம் அடைந்து,
 • இறையிடம் சரண் அடைந்து, நன்றி செலுத்தி,
 • நம்குருமகராஜ் அவர்களைப் போற்றிப் போற்றி,
 • அவரையும், அவரது உயா்வையும் எண்ணி எண்ணி மதித்து,
 • அவர் கூறும் அறம் செறிந்த அறவுரை—அறிவுரைகளை,
 •  பூரண மனதோடு ஏற்று (with implicit obedience)நடந்து,
 •  “உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது” என்று கனிவோடு உறுதி அளித்துள்ளதை,
 • செயலாக்கி, பிறவியின் நோக்கமான ‘அவன் நாம் ஒன்றாக, அறிந்த அறிவின் முழுமையான முக்தி’ யினை அடைவோம்.

திருமூலர் கூறியுள்ளபடி, அப்படியே அறியாமையை நீக்கக்கூடிய குரு கிடைத்தாலும், கிடைக்கப் பெற்றவர் அனைவரும் அறியாமை நீங்கப் பெறுகிறார்களா என்பது ஐயமே! இங்கே பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் ஏழாவது அத்தியாயமான ‘ஞானவிக்ஞான யோகம்’ மூன்றாவது ஸ்லோகத்தில் கூறுவதனைக் கவனிப்போம்.

மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித்யததி ஸித்தயே I

யததாமபி ஸித்தானாம் கஸ்சின்மாம் வேத்தி தத்வத: II    பகவத் கீதை 7. 3

“ஆயிரக்கணக்கான மனிதர்களுள் யாரோ ஒருவன் மனநிறைவின் பொருட்டு முயலுகிறான். முயலுகின்ற பெருவாய்ப்புள்ளோர்களுள்ளும் யாரோ ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான்.”

மரத்தில் உருவாகும் ஆயிரக்கணக்கான விதைகளில் பெரும்பகுதியை உயிர்கள் உண்கின்றன. விதைக்கப்பட்டவை, அத்தனையும் முளைப்பதில்லை. தரிசு நிலத்திலோ, பாறையிலோ, விழுந்தவைகள் சரியாக முளைப்பதில்லை. எனவே வளர்வதில்லை. நல்ல விருட்சமாவது ஒன்றிரண்டேதான். அவ்வையார் கூறும் இந்த மானுடப்பிறவி இறைஉணர்வு பெறுவதற்காக அமைந்ததுதான் என்றாலும், அதுதான் வாழ்வின் நோக்கம் என்று அறிந்து கொள்பவர் வெகு சிலரே. பிறகு அதற்கு ஏற்ற சூழ்நிலை முறையான பயிற்சி, தளரா விடாமுயற்சி ஆகியவைகளின் வாயிலாகக் கடைத்தேறுவது என்பது அரிதிலும் அரிதாக உள்ளது. பிறவியின் நோக்கம் இறைஉணர்வு பெறுவது என்பது எவ்வளவுக்கெவ்வளவு உயா்ந்ததோ அதை அடைதலும் அவ்வளவுக்கவ்வளவு துர்லபமாக இருக்கின்றது என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

இத்தருணத்தில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவதை நினைவுபடுத்திக் கொள்வோம். காசியில் ஸ்ரீஅன்னபூரணியின் கோயிலுக்குள் நுழைந்தவர்கள் எல்லோருக்கும் பிரசாதம் கிடைக்கும். பிரசாதம் கிடைக்காமல் வெளியில் வரமுடியாது. என்ன வித்தியாசம் என்றால் சிலருக்கு பிரசாதம் உடனே கிடைத்துவிடும். சிலர் காத்திருந்து பெற வேண்டும். நெடு நேரம் காத்திருந்தும் பெறவேண்டியதாகவும் இருக்கும். கோயிலினுள் நுழைந்தவர்கள் யாருக்காவது பிரசாதம் இல்லை என்பதே கிடையாது. அதுபோல் மனிதப் பிறப்பெடுக்கும் அனைவருக்கும் மனிதப்பிறப்பிற்கான பிரசாதமான முக்தி என்பது உண்டு என்கிறார் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர். சிலர் இப்பிறவியிலேயே முக்தியை அடைகிறார்கள். சிலர் இன்னும் இரண்டு, மூன்று பிறவிகளில் முக்தியடைகின்றனர். வேறு சிலர் கணக்கற்ற பிறவிகள் எடுத்து, பிறகு முக்தியடைபவர்களாக உள்ளனர். ஆனாலும் எல்லோருக்கும் முக்தி என்பது முன்னது, பின்னதாக இருக்கலாம் என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

ஸ்ரீராமகிருஷ்ணருக்கு இளையவரான நம் குருதேவர் கூறுவதனைக் கவனிப்போம்.

meyviLakkam

விளக்கம்: பல ஆயிரம் பிறவிகளில் சேர்த்து வைத்துள்ளப் பாவப்பதிவுகளை எப்படி ஒரு பிறவி காலத்தில் மாற்ற முடியும் என்கின்ற ஐயம் எழலாம். நம் குருதேவரின் வாக்கில் முதலில் நம்பிக்கை வைத்தாலே போதும். இறையுணர்வு பெற வேண்டும் என்று முடிவெடுத்த அடுத்த க்ஷணமே ஒருவன் புனர்ஜென்மம் எடுக்கிறான். மனிதனாகித் தெய்வமாகி உய்ய, நிலஉலகில் மனிதரிடம் நல்வாய்ப்பு மற்றும் ஆற்றலை இயற்கை நமக்களித்துள்ளது என்கின்ற வரிகள் சத்தியம் என்பதனை அனுபவத்தில் உணர்ந்து விடுகிறான். சிந்தனை மலர்கின்றது. எண்ணம் ஆராய்ச்சியிலேயே இருக்கிறது, தனக்கோ பிறருக்கோ நன்மையே தரும் எண்ணம் மட்டுமே மேலோங்குகிறது. வைராக்கியம் நிலைக்கிறது. அறத்தின் பாதையிலே ஒத்துதவி வாழும்முறையில் வாழ்வாங்கு வாழ்கிறான்.

இத்துடன் இன்றைய சிந்தனையை முடித்துக் கொள்வோம். இதன் தொடர்சியாக, அடுத்த விருந்தில், முக்தி அடையமுடியும் என்று அவ்வையார் கூறுவதையும், குருகிடைத்தும் சீடர்களின் முன்னேற்றம் மூன்று வகையில் உள்ளது என்பது பற்றியும் அறிவோம். தொடரும்.—–24-05-2015