இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 7/?

இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 7/?

FFC – 75

19-04-2015—ஞாயிறு

‘அறிவுடையோரை கனவிலும் நனவிலும் காண்பது இனிதினும் இனிது’ என்று அவ்வையார் கூறுவது போல், மகரிஷி அவர்களை, அன்றாடக் கடமையோடு கூடிய வாழ்விலும், எப்போதும் நினைவில் கொண்டு மகிழ்வது பற்றி ஆராய்ந்து வருகிறோம். இதற்காக மகரிஷி அவர்களின் இந்த ஆண்டு (28-03-2015) நினைவு தினத்திலிருந்து ‘இனிதினும் இனிது அறிவுடையோரைக் கனவிலும் நனவிலும் காண்பது’ என்கின்ற தலைப்பின் கீழ் சிந்தித்து வருகிறோம். இப்போது இச்சிந்தனையின் இறுதி கட்டத்தில் உள்ளோம். இந்த விருந்தில் மனிதப் பிறவியின் நோக்கமானப் பிறவிப்பயன் அடைவது பற்றி சிந்திக்க இருக்கிறோம்.

நம்மோடு நேரிடையாகப் பேசும்போதும், இப்போது கவிகள் வழியாக மகரிஷி அவர்கள் பேசும் போதும், மனிதனாகப் பிறந்தவன், தான் எடுத்துள்ள மனிதப் பிறவியின் பயனான இறை உணர்வு பெறுவது சாத்தியம் என்றும், அது எவ்வாறு சாத்தியம் என்று பல இடங்களில் எடுத்துரைத்து, நம்பிக்கையையும் உறுதியையும் அளிக்கிறார். நாம் சிந்தனைக்கு எடுத்துக் கொண்டுள்ள ‘குருவின் சேர்க்கை’ என்கின்றக் கவியின் முதற் பகுதியில் இயல்பூக்க நியதியைப் பயன்படுத்தி பண்பில் ஏற்றம் பெறுவது எவ்வாறு என்பதனை சென்ற விருந்தில் ஆராய்ந்தோம். அக்கவியின் பிற்பகுதியில் அவ்வாறு பண்பேற்றம் பெற்று வருபவர், பிறவிப்பயன் எய்துவது, தப்பாது நடக்கும் என்று உறுதி அளிப்பதை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம்.

அக்கவியின் பிற்பகுதி வரிகளை மீண்டும் நினைவிற்குக் கொண்டு வருவோம்.

FFC-75-எவரோருவா குரு வழ to post on 19-4-15.png-1

பிறவிப்பயன் நல்குவது பற்றிக் கூறுகிறார். அதற்குரிய நிபந்தனைகள் இரண்டு
1) குருவை மதித்தல்
2) ஒழுகுதல்

இந்த இரண்டு நிபந்தனைகளையும் ஆன்மீக சாதகன் பூர்த்தி செய்யும் பட்சத்தில் அதன் பிறகு நடக்கும் நிகழ்வு பற்றிக் கூறுகிறார். அதாவது குருவினுடைய அறிவின் இருப்பிடம் அறிந்த உயர்வு, மதிப்பவரின் தரத்தை உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும் என்கிறார். தரம் உயர்ந்தால்தான் பிறவிப்பயன் தப்பாமல் கிட்டும் என்கிறார். பிறவிப்பயன் கிட்டுவதற்கான தேவைகள்(requirements)

1) குருவை மதிக்க வேண்டும்.
2) குரு கூறும் ஒழுக்க நெறிகளை ஆராய்ந்து, எதனையும் தளா்த்தாமல் (without any relaxation), பூரண மனத்தோடு(implicit obedience)ஏற்றுக் கொண்டு பின்பற்ற வேண்டும்.
3) அதன் பயனாக ஆன்ம சாதகனின் தரம் உயரும்.

இந்த மூன்று தகுதிகளைப் பெறுவதில் ஆன்ம சாதகனுக்கு என்ன சிரமங்கள் உள்ளன? அவற்றைத் தெரிந்து கொள்வதற்க முன், பிறவிப்பயன் என்றால் ‘இறைஉணர்வு பெறுவது’ என்று கருத்தியலாகத் தெரிந்திருந்தாலும் அதனை எதார்த்தமாக என்ன என்று அறிந்து கொள்வோம்.

இந்த பரபரப்பான, விஞ்ஞான, நவீன உலகத்தில் பண்டைய முறையான குருகுலமுறை சாத்தியமில்லை என்பதால், அதனை மகரிஷி அவர்கள் முழுஅளவில் நடைமுறைப்படுத்தவில்லையாயினும்,

மகரிஷி அவர்கள் கருவில் திருவில்லாத ஒரு சாதாரண, ஆன்மீக சாதகனுக்கும்,

இறைஉணர்வு என்பது, தனது வாழ்க்கையின் நிகழ்வுகளில் முக்கியமானதும், சிறப்பானதும், மற்றும் இறுதியானதும் (ultimate) என ஆன்மீக சாதகனே விளங்கிக் கொண்டு,
ஆன்மீகத்தில் வெற்றி பெறுவதற்குத் தேவையான அனைத்தையும் கூறியதோடு கூடவே,
தான் வெற்றி பெற்ற வகையில் அனைத்து அனுபவங்களையும் சேர்த்துத் தொகுத்து,
ஆரம்பத்திலிருந்து முடிவு வரை, மிக மிகத் தெளிவாக எல்லாக் கருத்தியல், மற்றும் செய்முறை பாடங்களையும் அருளியுள்ளார் திருவேதாத்திரியத்தில்.

அதனை ஆராய்ச்சி செய்து, பிறகு நம்புவது, கடைபிடிப்பது என்பது ஆன்ம சாதகனின் முதற்கடமையும் பொறுப்புமாகும். இவ்வளவு கூறியுள்ள மகரிஷி அவர்கள் தனது பிறவிப்பயன் எய்துவது பற்றிய தனது அனுபவங்களை உரைநடையாகவும் கவிகள் வடிவிலும் கூறியுள்ளார். அவற்றில் ஒரு சில கவிகளைக் கவனிப்போம்.
அதற்கு முன்னா் இணையதள ஆசிரியர் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை நினைவு படுத்திக் கொள்வோம். 40 வயதான ஒரு பெண்மணியிடம்  “உங்கள் தந்தையார் ஞானம் பெற்றால் உங்களுக்கு மகிழ்ச்சிதானா?” எனக் கேட்டதற்கு, முதலில்  “மகிழ்ச்சிதான்” என்று பதில் கூறினார். சில வினாடிகள் கழித்து, தன்னுடைய பதிலை மாற்றிக் கொண்டு விட்டார் அப்பெண்மணி. அதாவது  “தந்தையார் ஞானம் அடைவதில் எனக்கு மகிழ்ச்சியில்லை” எனக்கூறினார். ஏன் என வினவியதற்கு, அப்பெண்மணி,  “ஞானம் அடைந்துவிட்டால் அப்பா குடும்பத்தை விட்டு வெளியே சென்றுவிடுவார். அதனால் அப்பா ஞானம் அடைவதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை” என்றார் அப்பெண்மணி. அப்பெண்மணி, அப்போதும், இப்போதும் ஒரு வார காலத்(one week) தவச்செல்வியே. இப்போது எந்தவித ஆன்மீக பயிற்சியினையும் அவர் செய்வதில்லை. இருந்தாலும் ஆன்மீகக் கருத்துக்களை, திருவள்ளுவர் கூறுவது போல், செவி வழியாகக் கேட்டுப் பெறும் செவிச்செல்வம் சோ்க்கும் பாக்கியம் பெற்றவர் அப்பெண்மணி.
‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்கின்ற பழமொழி போன்று, ஞானத்தைப் பற்றி இந்த மனித சமுதாயத்தின் பெரும்பான்மையோர் கொண்டுள்ள கருத்து என்ன என்பதற்கு விடை, அந்தப் பெண்மணியின் பதிலே போதுமானதாக இருக்கும்.
ஞானத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லை. விளைவாக
ஞானம் என்பது எட்டாக்கனி,
தீயவைகளைத் துறக்க வேண்டும். நல்லவைகளை நாட வேண்டும். என்பதனைப் புரிந்து கொள்ளாமல், ஞானம் பெறுவதற்கு குடும்பத்தையே புறக்கணித்து துறவு மேற்கொள்ள வேண்டும் என்கின்ற தவறான புரிதல் பரவலாகப் பரவிவிட்டது.
புலன் இன்பங்களை, அளவும், முறையுடனும் அனுபவிக்க வேண்டும் என்பதனை விடுத்து, ஞானம் பெற, புலன் இன்பங்களைத் துறக்க வேண்டும் என்கின்ற தவறானக் கருத்து பரவியுள்ளது.
அறிவின் தெளிவு ஞானம், என்பதனை புரியாததால், ஞானம் வாழ்க்கையில் புறக்கணிக்கப்படுகின்றது. விளைவு அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற வழி தெரியாமல் அல்லலுறுகின்றது மனித சமுதாயம். இந்த அல்லல்களை நீக்கும் தொண்டினைச் செய்வதற்கே உலக சமுதாய சேவா சங்கத்தின் தோற்றம். அறிவின் தெளிவில்லாமல் செய்யும் செயல்களால், இயற்கையில் இல்லாத, பல்வேறு துன்பங்கள் மனதகுலத்தால் செயற்கையாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. உண்மையில், இயற்கையில் துன்பங்கள் கிடையாது. மனிதனின் தவறான செயல்களே, இன்றைய மனிதகுலம் அனுபவிக்கும் சொல்லொணாத் துன்பங்களுக்குக் காரணம். அதற்கு தீர்வுகள் கூறுகின்றது திருவேதாத்திரிய 1851 மந்திரங்கள்.
‘இல்லாத ஊருக்கு வழி சொல்வது போன்றதன்று ஞானம் பெறுவதற்கான வழிகள். இருக்கின்ற ஞான வாசலுக்குள் செல்வதற்கான வழிகளை திருவேதாத்திரியம் கூறுகின்றது. இந்த சமுதாயச் சூழலில், பிறவிப்பயன் என்பது என்ன என்று எதார்த்தப்புரிதல் வேண்டும்.
தான் பிறவியின் நோக்கத்தை அறிந்ததும், பின்னர் அதனை அடைவதற்கு அவர் செய்த முயற்சியும் முடிவாக தான் அடைந்த பேரின்பத்தையும்  ஒரு கவியின் வாயிலாக, நமக்கு கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

FFC-75 -பிறவி நோக்கத்தை- to post on 19-4-15

மகரிஷி அவர்கள் தான் பேரின்ப அடைந்ததை நான்கு படிகளாக தன்னுடைய சீடர்களுக்குக் கூறுகிறார், எனவே அடுத்த அறிவிற்கு விருந்தில் இப்பாடலின் ஒவ்வொரு வரிகளுக்கும் விளக்கம் காண்போம். …. தொடரும் 22-04-2015.