68-இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

 

இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

FFC- 68 (7/7)

25-03-2015 – புதன்

     கடந்த அறிவிற்கு விருந்துகளில் அருளாளா்கள் எவ்வாறு மகரிஷி அவர்களுக்கு உறுதுணையாக இருந்தனர் என்று பார்த்து வந்தோம். இன்றைய விருந்தில் நாமும் அது போன்று அருளாளர்களிடம் எவ்வாறு ஆசி பெறுவது என்று பார்க்கலாம்.

மகரிஷி அவர்கள் அருளியுள்ள குருவணக்கப்பாடலில் கூறியவைகள் சம்பிரதாயத்திற்கான வார்த்தைகள் அல்ல. சடங்கிற்காகவும் எழுதியதல்ல அந்த குருவணக்கப்பாடல். சம்பிரதாயமாக இருக்குமானால், மகரிஷி அவர்கள் அருளாளர்களை நினைவு கூறுவதற்காக அப்படியொரு குருவணக்கப் பாடலை இயற்றி இருக்கமாட்டார். அருளாளர்களை நினைவுகூர்ந்து எழுந்தருளிச் செய்து பயன் பெறுவதன்பது இயற்கையின் இயல்பூக்க நியதிப்படி நடப்பதால் தான், அருளாளர்களை நம்முடன் எழுந்தருளி இருக்கச் செய்யும் யுக்தியினைக் கவியின் மூலம் தெரிவிக்கிறார்.
மேலும் பூதஉடலை உதிர்த்த மகான்கள் அனைவருமே சமுதாய நலனில் அக்கறை கொண்டவர்கள். இவ்வுலகம் உய்ய வேண்டும் என்ற ஆதங்கம் கொண்டவர்கள். இந்த எண்ணங்களெல்லாம் அவர்களது ஆன்மாவில் பதிந்துள்ளதால், ஆன்மா அழியாததாக உள்ளதால், ஆன்மாவில் பதிந்துள்ள அச்சமுதாயநல எண்ணங்கள், செயலாவதற்கு வேட்கையுடன் வான்காந்த களத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் (as Akashik Records)இருக்கும். அவ்வெண்ணங்கள், செயலாக்கிக் கொள்வதற்கு வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒத்த எண்ணங்கள் உள்ள ஆன்மாவைத் தேடிக் கண்டுபிடித்து, அச்சமுதாயநல எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள ஆயத்தமாக இருக்கின்றன.
“அறிவில் அறிவாய் நிலைத்து, அறம் வகுத்து வாழ்ந்து காட்டிய” அருளாளா்களை நினைவு கூர்ந்து,
அவர்களையெல்லாம், நம்முடைய இணைய தள சத்சங்கத்தில் எழுந்தருளிச் செய்து,
நம்முடனே இருந்து கொண்டு நம்முடைய இணைய தள சத்சங்கத்தை நடத்திக் கொடுக்க வேண்டும் என்று கருதி,
வேதங்களில் ஏற்கனவே ‘ஒன்றே பலவாகியது’ என்பது சொல்லப்பட்டு இருந்தாலும், அதற்கு பாஷ்யம்(விளக்கவுரை) அருளிய ‘ஆதிசங்கரர் சத்சங்கம் நடத்துகின்ற அருட்காட்சி’ இந்த இணையதள வாயிலில்(Home page) அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது, மானசீகமாக ஆதிசங்கரர் அவர்கள் எழுந்தருளியுள்ளார்கள்.
மேலும் திருவள்ளுவர், அவ்வையார், இராமலிங்கர், இராமகிருஷ்ணர், விவோகனந்தர், பாரதியார், உலகப்புகழ் விஞ்ஞனானி ஐன்ஸ்டின், நம் குருதேவர் ஆகியவர்கள் எழுந்தருள வேண்டும் என்பதற்காக அவர்களும் இணையதள வாயிலில் பிரசன்னமாகி உள்ளனர்.
மேலும் உலகப் புகழ் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் அவர்களை அழைத்ததற்குக் காரணம் இருக்கின்றது. அவர் விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைய வேண்டும் என்கின்ற எண்ணம் கொண்டவர். அதனால் தான் “Science without Religion is lame and Religion without Science is blind” என்று கூறியுள்ளார். இந்த இணைய தள சத்சங்கத்தில் இனி வரும் காலங்களில் விஞ்ஞானமும் மெய்ஞானமும் பற்றி சிந்திக்கப்பட இருப்பதால் அருளாளர்களைப் போன்றே, அதே பேரறிவின் அம்சமான அறிஞர் ஐன்ஸ்டீன் அவர்களையும் துணைக்கு அழைத்திருக்கிறோம். விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும் வேறு வேறன்று. ஒரு நாணயத்தின் இருபக்கங்களே. நாணயத்தின் (currency/coin) ஒரு பக்கம் அச்சிடப்படாமல் இருந்தால் அந்த நாணயம் செல்லாது. அதுபோல் இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக்கும் விஞ்ஞானமும், இயற்கையின் வளமான பூர்வீகச் சொத்தான அமைதியை வாழ்வின் வளமாக்கும் மெய்ஞ்ஞானமும் இணைந்தே கைகோர்த்துச் செல்ல வேண்டும். இரண்டின் வளர்ச்சியும் ஒன்றுக் கொன்று உதவியாக இருக்க வேண்டும். .

தன்மாற்ற சரித்திரத்தில் பேரறிவு ஐன்ஸ்டீனின் அறிவாக அவதரித்தப் பிறகு(1879-1955), வேதாத்திரி மகரிஷி அவர்களின் (1911-2006) அறிவாக அவதரித்தது தெரிய வருகின்றது. ஐன்ஸ்டடீன் அவர்களின் தோற்றத்திற்கு பின்னர் 32 ஆண்டுகள் கழித்து வேதாத்திரி மகரிஷி அவர்களின் தோற்றம் நடந்தேறியுள்ளது. இருவருமே சம காலத்தில் 44 ஆண்டுகள் வெவ்வேறு இடங்களில், இப்புவி வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். இந்த 44 ஆண்டுகளில் இருவர் வழியாக பேரறிவு வெவ்வேறு கோணத்தில் சிந்தித்திருந்தாலும், சிந்தித்தப் பொருள் ஒன்றுதான். அது மெய்ப்பொருள் – தன்னைப்பற்றியது. முதலாமவர் வழியாக விஞ்ஞான ரீதியாகத் தன்னை வெளிப்படுத்த முயன்றுள்ளது. அடுத்தவர் வழியாக ஆன்மீகரீதியாக முயன்றுள்ளது பேரறிவு.
ஆன்மீகத்தை விஞ்ஞானரீதியாகவும், ஆன்மரீதியாகவும் எளிமையாக்கி விளக்கப்பட வேண்டியுள்ளதால்,
இரு ஆன்மாக்களின் பூவுலக வாழ்க்கை நிகழ்வுகளும் சம காலத்தில்,  44 ஆண்டு காலம் நடந்துள்ளதால் வேதாத்திரி மகரிஷியின் மெய்ஞான விஞ்ஞான இணைப்பை மிகச் சிறப்பாக நடத்தியுள்ளது இயற்கை.
ஆகவே நம்முடைய இனி வரவிருக்கின்ற சத்சங்கத்தில் விஞ்ஞான மெய்ஞான இணைப்பு பற்றிய சிந்தனைக்கு உறுதுணையாக இருக்க விஞ்ஞானி ஐன்ஸ்டீனை அழைத்துள்ளோம்.

மகரிஷி அவர்கள் விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம்பற்றி 15 கவிகள் அருளியுள்ளதில் ஒரு சிலவற்றை இப்போது அறிவது பொருத்தமாக இருக்கும்.
FFC-68- IMAGE- விஞ்ஞானமும் மெய்ஞானம்மகரிஷிக்கு மூத்தவா்களான உலகப்புகழ் சுவாமி விவேகானந்தர், மற்றும் உலகப்புகழ் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் அவர்கள் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் இணைய வேண்டும் என எண்ணியதை அவா்களுக்கு பின்னர் அவதரித்த மகரிஷி அவர்கள் வழியாக இயற்கை நிறைவேற்றியுள்ளது. இதுதான் Fraction demands Totality supplies” என்பதாகும். விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் இணையும் போதுதான் உண்மையில்லாத மூடப்பழக்கங்கள் மறையும். செயல்களுக்கு காரணம் அறிந்து செயல்கள் ஆற்றப்படும். விஞ்ஞானம் நேர்வழியில் (constructive ways) பயன்படுத்தப்படும். விஞ்ஞானத்தை நேர் வழியில் பயனாய்க் கொள்வதை நெறிமுறைகள் என்று கூறி, அதனை சங்கல்பமாக்கி, பின்னர், போரில்லா நல்லுலகம் வேண்டும் என்கின்ற எண்ணத்தை விதைத்த ஆன்மாவிற்கு, விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் ஏன் இணைய வேண்டும் என்கின்ற அவசியத்தை சொல்வதில் என்ன சிரமம் இருக்க முடியும்? ஆகவே தான் 15 கவிகள் இயற்றியுள்ளது வேதாத்திரிய ஆன்மா.

மேலும் ‘அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து, அதனை வாழ்ந்து காட்டிய அத்துனை மகான்களின் ஆன்ம ஆற்றலும், அறிவாற்றலும், நாம் பதமடைந்து இறையுடன் ஒன்றாவதற்கு துணை நிற்கட்டும்’ என்கின்ற சங்கல்பத்துடன் இந்த இணைய தள சத்சங்கத்தில் கலந்து கொள்கிறோம் என்கின்ற நினைவிற்காக, இந்த சங்கல்பமும் எழுத்து வடிவில் இந்த இணையதள வாயிலில் இடம் பெற்றுள்ளது. இது வரை குருவணக்கப்பாடலில் இறுதி வரிகளிலுள்ள அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டினோரை நினைவுகூரும் யுக்தி எவ்வாறு செயலாகின்றது என்பதனை அறிந்தோம். தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர், இராமலிங்க சுவாமிகள் ஆகிய அருளாளர்கள் மகரிஷி அவர்களுக்கு அருட்துணையாக இருந்துள்ளனர். பெயர் சொல்லி அழைக்கப்படாத அருளாளர்களையும் அழைக்கும் யுக்தியினையும் பார்த்தோம். மகரிஷியின் அருட்கூட்ட மரபினில் வந்துள்ள நாம் இனிமேல் குருவணக்கப் பாடலின் யுக்தியை கடைபிடிக்க வேண்டும்.
சிறுவர் முதல் எல்லோருக்கும் தெரிந்த மற்றொரு அருளாளர் அவ்வையார் அவர்கள், ஆத்தி சூடி மற்றும் கொன்றை வேந்தனில் மொழிந்துள்ள சிலவற்றை நினைவு கூர்வோம்.

ஆத்தி சூடி
1) இயல்பு அலாதன செய்யேல் — நல்லொழுக்கத்திற்குப் புறம்பான காரியங்களைச் செய்யாதே.
2) குணமது கைவிடேல் – நல்ல குணங்களை கைவிடாதே.
3) உத்தமனாய் இரு – நல்ல குணங்களைக் கொண்டவனாக இரு.
4) நூல் பல் கல் — பல நூல்களையும் கற்றுக் கொள்.
கொன்றை வேந்தன்
5) மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம்
6) வீடு பெற நில் — முக்தியை பெற நில்.
ஆத்தி சூடி
7) சான்றோர் இனத்து இரு –சான்றோர்களிடம் சேர்ந்து இரு.
8) சேரிடம் அறிந்து சேர்— நீ சேரக்கூடிய நல்ல இடத்தை ஆராய்ந்து சேர்.
9) பெரியாரைத் துணைக் கொள் — அறிவில் சிறந்த பெரியவர்களை உனக்குத் துணை வைத்துக்கொள்.
10) மேன்மக்கள் சொல் கேள் – உயர்ந்தவர்களுடைய சொல்லைக் கேட்டு நட.

மேலே உள்ள அவ்வையார் பொன்மொழிகளில் ஒன்றுமுதல் ஆறுவரை அறிவுரைகள் உள்ளன. ஏழிலிருந்து பத்து வரை அறிவுரையில் சொல்லப்பட்டதைச் செய்ய வேண்டியவைகள் உள்ளன. எந்த வயதிலிருந்து மனிதன் இதனை செய்ய வேண்டும்? இந்தப்பாடல் ஒன்றாம் வகுப்பில் பாடமாக வைக்கப் பட்டுள்ளதால் ஐந்து வயதிலிருந்து இதனை அறிந்து அதன்படி அவன் நடக்க சூழல்களை சமுதாயம் அமைத்துக் கொடுக்கவேண்டும். ‘மாதா பிதா குரு தெய்வம்’ என்பதுபோல் தந்தை தன் மகனிற்கு குருவைக் காண்பிக்கும் நிகழ்வே நடப்பதில்லை. பண்டைக் காலத்தில் குருகுலக் கல்வி முறையில் குருவிடம் சென்று மாணவன் கல்வியைக் கற்றான். அங்கே அரசனின் மகனும், ஆண்டியின் மகனும் ஒன்றாகவே கல்வி கற்க வருவார்கள். அந்த முறை இப்போது இல்லை. அப்போது மக்கள் தொகை குறைவு. விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட நிலையில், பரபரப்பான உலகத்தில், மக்கள் தொகை பெருகிவிட்ட நிலையில் குருகுலக் கல்வி என்பது சாத்தியமில்லை. ஆகவே எழுத்தறிவு, தொழிலறிவு, ஒழுக்கப்பழக்க அறிவு, இயற்கைத் தத்துவ அறிவு ஆகிய நான்கு அங்கங்களைக் கொண்டதாக கல்வி இருக்க வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள். மேலும் மகரிஷி அவர்கள் “அறநெறியைப் போதிக்க புதிய நூல்களே அவசியமே இல்லை” என்று கூறும் கவியினை நினைவு கூர்வோம்..

FFC-68- image-சாதனையே அறநெறிஏற்கனவே, அறிஞர்கள் பலா், அறநூல்கள் பல அளித்துள்ளதால், இனி அறநெறியைப் போதிக்கப் புதிய நூல்கள் அவசியமில்லை என்கிறார் மகரிஷி அவர்கள். வேண்டியதெல்லாம் அவைகளை பயிற்சி செய்து சாதனைக்குக் கொண்டு வருவதுதான் அறநெறி என்கிறார்.

வேதாத்திரியம் சாதனை மார்க்கமான மனவளக்கலையைத் தந்துள்ளது. மேலும் கல்வி என்பது எழுத்தறிவு, தொழிலறிவு, ஒழுக்கப்பழக்க அறிவு, இயற்கைத் தத்துவ அறிவு ஆகிய நான்கு அங்கங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்கின்றது வேதாத்திரியம். கல்வி எந்த வயதில் ஆரம்பிக்கின்றது? ஐந்து வயதில் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆரம்பிக்கின்றது. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ மற்றும் ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’ என்கின்ற பழமொழியைக் கவனத்தில் கொண்டும், கல்வி ஆரம்பிப்பது ஐந்து வயதில் என்பதால், ஒழுக்கபழக்க அறிவை வளர்க்கக் கூடிய கல்வியை ஒன்றாம் வகுப்பிலிருந்து 12 வகுப்பு வரை கட்டாயப் பாடமாக்கவேண்டும் என்பதே சரியாகவும், அவசியமாகவும் இருக்கும்.

இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்கின்ற வினாவிற்கான பதில்:
1) அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்,

அவர்கள் எண்ணிய எண்ணங்கள் வாயிலாக,
அவர்கள் அருளியுள்ள அறநூல்களின் வாயிலாக,

2) அவர்கள் நம்முடன் பேசிக் கொண்டிருக்கின்றனா்,

அவர்கள் எண்ணிய எண்ணங்கள் வாயிலாக
அவர்கள் அருளியுள்ள அறநூல்களின் வாயிலாக,

3) மகரிஷி அவர்களைப் போன்று, அவ்வப்போது அவதரிக்கும் அருளாளா்களின் வழியாக இந்த சமுதாயத்திற்கு அருட் தொண்டு ஆற்றி கொண்டிருக்கின்றனா் பூதஉடலை உதிர்த்த மகான்கள்.

இது போன்றே மகரிஷி அவர்களின் அறிவாற்றலும் இந்த சமுதாயத்தில் விழிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. எந்த தொலைக் காட்சி நிலைய நிகழ்ச்சிகளைக் காண விரும்பி தொலைக்காட்சிப் பெட்டியை tune செய்யப்படுகின்றதோ, அதுபோல் அருளாளா்களின் அலைக்கு (wave) நம் மனஅலையை இணைக்க வேண்டும். (one must tune to the frequency of enlightened soul and reap the benefits)
What is that tuning? அருளாளர்களுடன் இணக்கம் பெறவேண்டும்.
இணக்கம் பெற வேண்டும் என்றால்,
1) மனத்தூய்மை வேண்டும். அல்லது
2) மனத்தூய்மையில் ஆர்வமும் அக்கறையும் வேண்டும். அல்லது
3) இறையை செய்முறைப் பயிற்சியில் உணரவேண்டும் என்கின்ற தீராத தாகம் வேண்டும்.
4) அருளாளர்களின் வாழ்க்கை சரித்திரங்களைக் கேட்க வேண்டும், அல்லது நூல்கள் வாயிலாக அறிய வேண்டும். பொருத்தமான உதாரணம், நம்முடைய குருபிரான் அவர்களே எழுதியுள்ள எனது வாழ்க்கை விளக்கம் என்கின்ற நூலையும் மற்றும் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி – இந்த நூற்றாண்டு தந்த மகான் என்கின்ற நூலையும் கட்டாயம் பல முறை படிக்க வேண்டும். ஆன்ம வெற்றி என்பது மனிதன் பண்பேற்றம் பெறுவதே என்பதால், தரமாற்றப் பயிற்சியில்(மனவளக்கலை) இயல்பூக்க நியதிப்படி இது ஒரு யுக்தியாகும்.

‘இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன?, அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?’ என்கின்ற இரு வினாக்களுக்கு சுருக்கமான விடை, ‘உடலுக்குத்தான் மரணம், ஆன்மா அழிவதில்லை, எனவே அவர்களின் ஆன்மா வாழ்ந்து கொண்டிருக்கின்றது’ என்கின்ற விடை எல்லோருக்கும் தெரிந்ததே. இந்த விடையையே பதிலாகக் கூறியிருக்கலாம். இரண்டாவது வினாவிற்கு விடையாக ‘அருளாளர்களின் ஆன்மா, ஆன்மீக பயிற்சியில் பரிபக்குவ நிலையில் உள்ளவா்களுக்கு உறுதுணையாக இருக்கின்றன’ என்று மட்டும் கூறியிருக்கலாம். ஆனால் இவ்விரண்டு வினாக்களுக்கான விடையை, மூன்று வாரங்களாக, ஏழு வகுப்புகளில் சிந்தித்திருக்கிறோம். சுருக்கமான பதிலுக்கும் விரிவான பதிலுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்திருப்பீர்கள். இக்கேள்விகளுக்கான விடைக்குச் சான்றாக நம்முடைய குருபிரான் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்கள் இருப்பதால் அதனை எடுத்துக் கொண்டு விரிவாக சிந்தித்தோம்.
குறிப்பாக இந்த சிந்தனை விருந்து (FFC- 62 லிருந்து 68 வரை) பற்றி உங்கள் கருத்துக்களை இணையதள சத்சங்கம் அறிய விரும்புகின்றது. சத்சங்க உறுப்பினர்கள் இடையே கருத்து பரிமாற்றங்களில் நல்ல புரிந்துணர்தல் நிலவட்டும். Let there be good rapport between us. எனவே உங்களது கருத்தை எளிதாக தெரிவிக்கும் வகையில் ஓட்டு அளிக்கும் முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
FFC 62 லிருந்து 68முடிய

1 சுருக்கமாகவே முடித்திருக்கலாம்.
2 விரிவாக சொன்னது நன்றாக உள்ளது.
3 விரிவாக சொன்னது மிகவும் நன்றாக உள்ளது.
4 நன்றாக உள்ளது. விரிவாக சொன்னதால் ஆன்மீக வாழ்க்கையில் வெற்றி பெற பயனுள்ளதாக இருக்கின்றது.

மேலே நான்கு options களில் கருத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த நான்கில் எது உங்களுக்கு பிடித்திருக்கின்றதோ, அக்கருத்தால் நீங்கள் பயனடைந்தீர்களோ (like) அக்கருத்தின் வரிசை எண்ணை கருத்துரைக்கும் பகுதிக்குச் சென்று எண்ணை மட்டும் தட்டச்சு செய்து அனுப்பி வைக்கவும். செய்வீர்களா அன்பர்களே! வாழ்க வளமுடன்.

வாழ்க வையகம். வாழ்க வளமுடன்
வாழ்க வேதாத்திரியம் வளர்க வேதாத்திரியம்
வாழ்க உலக அமைதி. வருக விரைவில் உலக அமைதி!
வாழ்க மனித அறிவு வளா்க மனித அறிவு
வாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச் செல்வம்.