67-இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

இதுவரை,  பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

FFC- 67 (6/?)

22-03-2015 – ஞாயிறு

6. வேறு எந்த அருளாளர்களாவது மகரிஷிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்களா?

கடந்த ஞாயிறு, புதன் கிழமைகளில், அறிவிற்கு விருந்தில், தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர், அருட்பிரகாச வள்ளலார் ஆகிய நான்கு அருளாளர்கள் மகரிஷி அவர்களுக்கு எவ்வாறு உறுதுணையாக இருந்துள்ளனர் என்று பார்த்து வந்தோம். அந்த நான்கு அருளாளர்களைத் தவிர, வேறு எந்த அருளாளர்களாவது மகரிஷி அவர்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்களா என்பதனை இந்த அறிவிற்கு விருந்தில் அறிய இருக்கிறோம்.

நான்கு அருளாளர்களை வணங்குவதோடு மட்டுமல்லாது, அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டினோர் அனைவரையும் நினைவு கூர்கிறார் மகரிஷி அவர்கள். இதற்கு என்ன பொருள்? திருக்கூட்ட மரபினில், இதுவரை அவதரித்துள்ள எண்ணிலடங்கா அருளாளா்களின் பெயர்கள் நினைவு கூறுவது இயலுமா? இயலாது என்பதால் இயலாது என்பதால், ஒட்டுமொத்த அருளாளர்களின் அறிவாற்றலையும், (அதாவது இறையின்) ஒட்டுமொத்த அருளையும் சாதுரியமாக வேண்டி, அவர்களை சூக்குமாக எழுந்தருளச் செய்கிறார் மகரிஷி அவர்கள்.

தாயுமான சுவாமிகள், திருவள்ளுவர், அறிஞர் திருமூலர், இராமலிங்க சுவாமிகள், அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அருளாளர்கள் அனைவரும் யார்? யார் அவர்கள்! மக்கள் அனைவருமே தெய்வத்தின் அம்சங்களாக இருந்தாலும், அருளாளர்கள் அனைவருமே, இறை அருளை முழுமையாகப் பெற்ற மனிதவடிவத் தெய்வங்கள். அரூபமாகிய தெய்வமே, தன்னை, அருளாளர்களின் வடிவில் உலக மக்களுக்கு, வெளிப்படுத்திக் கொள்கின்றது. இந்த ஆராய்ச்சியில் நமக்கு மற்றுமொரு செய்தி கிடைக்கின்றது. மகரிஷி அவர்களின் வாழ்வில் நடந்துள்ள மற்றொரு சம்பவத்தை நினைவு கூர்வோம்.

மகரிஷி அவர்கள் இறையிடம் 14-11-1985 அன்று வைத்த வேண்டுகோளை கவனிப்போம்.

Ffc-67-Image- வேண்டுகோள்-22-3-15

இக்கவியிலுள்ள ஒவ்வொரு வைரவரிகளுமே, ஏன் ஒவ்வொரு வைர சொற்களுமே, பேரின்பத்தில் மூழ்கச் செய்கின்றன. இப்பாடலில் நற்கர்ம யோகம், உலகசமயம் ஆகிய எண்ணங்களை ‘மண்ணுலகில் மக்களிடம் பரவவிடல் வேண்டும்’ என்கின்ற வேண்டுதலை இறையிடம் வைக்கிறார். தனக்கு வேண்டியவைகளைப் பெறுவதற்கு சங்கல்பம் செய்யச் சொல்கிறார். உதாரணத்திற்கு அருட்காப்பு, மற்றும் வாழ்க்கை நலச் சங்கல்பங்கள், உலகநல வாழ்த்து ஆகியன. ஆனால் இங்கே கூறப்படும் வேண்டுகோளோ, உலக நலத்தைக் கருதி, உலக மக்கள் சார்பாக வைக்கப்படும் வேண்டுகோளாகும். எனவே இறையிடமே நேரிடையாக வேண்டுகோளை வைக்கிறார்.

தலைவர்கள், அறிஞர்கள் இணைந்து,
மனிதகுலம் முழுமையாக உணர்ந்து,
கர்மயோகம், உலகசமயம் ஆகிய இரண்டையும் ஏற்றுக் கொண்டு,
நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதால்,
‘வாழ்க வையகம், வாழ்க வளமுடன்’ என்கின்ற உலக நலச் சங்கல்பம் இயற்றிக் கொண்டிருந்தாலும்,

இறையிடமே நேரிடையாக வேண்டுகோளை வைக்கிறார்.

ஏனெனில் தலைவர்கள், அறிஞர்கள் உள்பட எல்லோரிடமும் பேரறிவே, அறிவாக இருப்பதால் பேரறிவிடம் வேண்டுகோள் (fraction demands) வைத்தால், பேரறிவு,

மகரிஷி அவர்களின் மனதில், கர்மயோகம், உலக சமயம் ஆகியவை எழுப்பியது போல் அவர்கள் மனதிலும் எழுப்பி, அறிவுறுத்தி,
அவர்கள் அனைவரையும் இசையச் செய்து, திரட்டி, ஒன்று கூட்டி,
மனிதகுலம் உய்வதற்கு, சமுதாயத்தில் நன்மாற்றங்களைக் கொண்டு வருவது இறைக்கு எளிதாகிவிடும்
என்கின்ற நோக்கத்தில், வேதாத்திரி மகரிஷி அவர்கள் இறையிடம் அந்த வேண்டுகோளை வைக்கிறார்.

அவ்வாறு பேசியதை/பேசுவதை சக மக்களும் அறிந்து, அந்த பேரின்ப யுக்தியை அவர்களும் பயன்படுத்திக் கொள்வதற்காக எழுதுவதுதான் அருட்கவிகள். இதுவரை இறையிடம் வைத்த ‘வேண்டுகோள்’ கவியைப் பற்றி சிந்தித்தோம். அடுத்ததாக இறையிடம் வைத்த வேண்டுகோள் நிகழ்விற்குப் பிறகு நடந்ததென்ன என்பதனை இப்போது அறிவோம்.

இறையிடம் வேண்டுகோள் வைத்தது 14-11-1985 அன்று. ஒரு மண்டலத்திற்குள், ஐந்து வாரங்களில், 35 (17+18=35)வது நாள் நடந்த இறையின் திருவிளையாடலின் வாயிலாக மகரிஷி அவர்கள் பெற்ற பயனை அறிந்து கொள்வோம். வேண்டுகோள் 35 நாளில் பலித்தது என்றால், அந்த வேண்டுகோள் விடுத்தவர் அத்தகையவர். இறைவனாகி பாடுபவா். அவர் விடுத்த வேண்டுகோளின் தன்மையும் அத்தகையது. (Hence his request was conceded immediately) அந்த திருவிளையாடல் நிகழ்ச்சியினை நாமும், பின்வரும் சமுதாயமும் பயன் பெறுவதற்காக கவியின் வழியாக தெரியப்படுத்திய மகரிஷி அவர்களின் கருணை உள்ளத்தை நினைந்து பூரிப்படைவோம்.

FFC-65- கனவில் ஒரு சித்தர்

ஒருநாள் இரவில் நடந்துள்ளது இச்சம்பவம். தூங்கவுமில்லை. விழித்துக் கொண்டிருக்கவும் இல்லை. ஆனால் துரியதவத்தில் ஆழ்ந்திருக்கிறார் மகரிஷி அவர்கள். அப்போது ஒரு சித்தர் தோன்றி நான்கு பணிகளுக்கு உதவுவதாகக் கீழ் வரும் நான்கு உறுதிகளை அளித்துள்ளார். மகரிஷி அவர்களுடைய உடல் நலத்திற்கும், அவர் செய்து வரும் அருட் தொண்டிற்கும் உதவியாக இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

1) ‘கா்மயோகம் பரவிடல் வேண்டும்’ என்று மகரிஷி அவர்கள் ஏற்கனவே 35 நாட்களுக்கு முன்னா், இறையிடம் வைத்த வேண்டுகோள்கள் நிறைவேறுவதற்கு உதவுதல்,
2) அடுத்ததாக அப்போது கட்டி முடிக்காது இருந்த அறிவுத்திருக்கோயிலை கட்டி முடிப்பதற்கு உதவுதல்,
3) மகரிஷி அவர்களின் வயிற்றுப் புண்ணை ஆற்றுவதில் உதவி புரிதல்,
4) ஊக்கமுடன் தொண்டாற்றும் மகரிஷி அவர்களுக்கு உலகப் பரிசு வர உதவுதல்.

ஒரு மண்டலத்திற்குள், அதாவது 35 நாளில் மகரிஷி அவர்களின் கனவில் சித்தர் வந்து, நான்கு உறுதி மொழிகளை அளித்ததோடு – அவர் இறையிடம் விடுத்த வேண்டுகோளின் பலன் அத்துடன் முடிந்து விடவில்லை. ஒரு மண்டலம் முடிந்ததும் 01-01-1986 அன்று உலக சமய ஆண்டு பிறந்தது.

இந்த நிகழ்வுகளெல்லாம் தற்செயலானதன்று. இயற்கையில் எதுவுமே தற்செயலாக நடப்பதில்லை. ஏனெனில் இயற்கை ஒழுங்காற்றலாகிய பேரறிவாக இருப்பதினால் இயற்கையில் நடப்பனவெல்லாம் காரணமில்லாமல், முன்பின் யோசனை (நுண்மாண் நுழைபுலன்) இல்லாமல் மனிதர்கள் செய்வது போன்று நடக்காது.

‘When fraction demands Totality supplies’ என்கின்ற கண்டுபிடிப்பிற்கு இந்த நிகழ்வு ஒரு நிரூபணமாகின்றது. இந்த கண்டுபிடிப்பை உயிரின பரிணாமத்தில் ஒன்றிலிருந்து ஆறாம் அறிவு வரை காணமுடிகின்றது. இதே போன்று மகரிஷி அவர்களின் கண்டுபிடிப்புகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், நிரூபணங்களோடு ஏற்றுக் கொள்வோம். நிரூபித்து ஏற்றுக் கொள்ளும் பழக்கம் வந்து விட்டால் சிந்திக்கிறோம் என்று பொருள். ஒரு சிந்தனையை நிரூபிக்கச் சிந்திக்கும்போது வேறு பல உண்மைகளும் வெளிப்படலாம். இவ்வாறு இயற்கையை, எந்த அளவிற்கு மனிதன் ஆழ்ந்து சென்று விளங்கிக் கொள்கின்றானோ, அந்த அளவிற்கு இயற்கையை/இறையை விட்டு விலகி இருக்கச் செய்துள்ள மனோபாவமாகிய தன்முனைப்பு நசிந்து கொண்டே வரும். முடிவில் தன்முனைப்பு முழுவதும் கரைந்து போய் இறையை முழுமையாக உணர முடியும். இயற்கையை ஆராய்வது 1911 பிறகு எளிதாகிவிட்டது. எந்த கோணத்தில் இயற்கையை வாழ்வியலுக்கு உதவும்படி ஆராய வேண்டுமோ அதனை தெரிவித்து விட்டார் மகரிஷி அவர்கள். இயற்கையின் ஆரம்பம், இயற்கையின் இயக்க நிலை, இயக்க நிலையில் உயிரினங்கள் தோன்றியவிதம், மீண்டும் ஆறாம் அறிவு இவற்றையெல்லாம் அறிந்து முழுமை பெறுவது வரை வேதாத்திரியம் கூறுவதால் சாதாரண மனிதன் கூட தன்னளவில் வாழ்க்கை விஞ்ஞானி ஆகிவிடலாம்.

இந்த கனவில் ஒரு சித்தர் வந்த நிகழ்வின் மூலம்,

“அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்தோர்,
அதை வாழ்ந்து காட்டினோர், நினைவு கூர்வாம்.”

என்கின்ற தான் இயற்றிய வரிகளுக்கான பலனை மகரிஷி அவர்களே பெற்றதை அறியும்போது நாமும் அவ்வாறே பயன் பெறலாம் என்கின்ற உந்துதல் ஏற்படுகின்றதல்லவா? அதற்காகத்தானே அருளாளர்கள் கவிகள் எழுதுகிறார்கள். அதற்காகத்தானே மகரிஷி அவா்கள் கடைசி இரண்டு வரிகளில் இந்த யுக்தியைக் கொடுத்துள்ளார்கள். இதுவரை தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர், இராமலிங்கர் மற்றும் அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து வாழ்ந்து காட்டிய மற்ற அருளாளர்கள் எவ்வாறெல்லாம் மகரிஷி அவர்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றனர் என்று பார்த்தோம். அடுத்த விருந்தில் நம் குருபிரான் அருளாளர்களிடம் பெற்ற அருளாசிகள், போன்று நாமும் எவ்வாறு மகரிஷி அவர்கள் உள்பட அனைத்து அருளாளர்களிடமும் அருளாசிகள் பெறுவது பற்றிச் சிந்திப்போம். வாழ்க வளமுடன்.     … தொடரும் (25-03-2015)