66-இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

இதுவரை,  பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

FFC- 66 (5/?)

18-03-2015 – புதன்

வள்ளலார் அவர்களின் ஆன்மா, மகரிஷி அவர்களின் பூதஉடலுக்குள் பிரவேசம் செய்வதற்கு முன்னரே, மகரிஷி அவர்கள் இறை உணர்வு பெற்றிருக்கலாம் எனத் தெரிவதாக ஆராய்ந்தோம். ஏன் மகரிஷி அவர்கள் இறை உணர்வு பெறுவதற்கு முன்னரே, வள்ளலார் அவர்கள், மகரிஷி அவர்களின் பூத உடலில் பிரவேசம் செய்து, இறை உணர்வு பெறுவதற்கும் உதவியிருக்கலாமே என்கின்ற ஐயம் எழலாம் என்பதோடு சென்ற அறிவிற்கு விருந்தை முடித்திருந்தோம். இப்போது அங்கிருந்து தொடர்வோம்.
“அவனருளாலே அவன் தாள் வணங்கி” என்று அருளாளர்களின் அருளனுபவம் தெரிவிப்பது போல், எப்போது, எந்த ஆன்மீக சாதகரை, எந்நிலையில் தடுத்தாட்கொள்ள வேண்டும் என்பது இறையின் திருவுள விருப்பம் என்பதால், வள்ளலார் அவர்களை, மகரிஷி அவர்கள் இறை உணர்வு பெற்ற பிறகு, அவரது பூதஉடலில் பிரவேசிக்கச் செய்திருக்கலாம்.
மேலும், இறை உணர்வு பெற்று விட்டதுடன்/விடுவதுடன் பிறவியின் நோக்கம் முடிவடைந்து விட்டது ஆகாது. வள்ளுவரின் வாயிலாக, இறை விரும்பி, மொழிந்துள்ளவற்றைக் கவனத்தில் கொண்டவர்; திருவள்ளுவரை சாதுரியமாக, மானசீக குருவாக்கிக் கொண்ட மகரிஷி அவர்கள்.
சிறு வயதிலிருந்தே மகரிஷி அவா்களிடம் எழுந்த ‘மகானாக்கும் நான்கு மகோன்னத கேள்விகளுக்கு’ (அறிவிற்கு விருந்தில் ஏற்கனவே, 18-11-2014 முதல் 25-11-2014 வரை இது பற்றி சிந்தித்து இருக்கிறோம்) விடைகள் கிடைத்தாகி விட்டன. பொருள் வறுமை, ஒழுக்க வறுமை, அறஉணர்வின் வறுமை, மொத்தத்தில் மனித நேய வறுமை(அன்பின் வறுமை) ஆகிய எல்லா வறுமைகளுக்கும் காரணமான அறிவின் வறுமையால் வாடும் இந்த மனித குலத்தினை, ‘அறிவின் இருப்பிடம் அறியும் ஆன்மீகத்தால்’ மட்டுமே உய்விக்க முடியும் எனக் கண்டறிந்தவா் மகரிஷி அவர்கள். ஆகவே, மகரிஷி அவர்கள் தன்னை உலக நலத் தொண்டனாக்கி, உலக சமுதாயத்திற்கு சேவை புரிய வேண்டும் என்ற மகோன்னத எண்ணத்திற்கு, உறுதுணையாக இருக்க பல அருளாளர்களை அனுப்பி வைத்தது இயற்கை. அந்த வகையில், மகரிஷி அவர்கள் இறைதத்துவத்தில் தெளிவினும் தெளிவு அடைந்த பின்னர், அறிவுத் தொண்டு புரிய மகரிஷி அவர்களுக்குத் தானே -உறுதுணையாக இருப்பதற்கும், இராமலிங்க வள்ளலார் அவர்களின் வழியாக வந்தது இறை.
தேர்வு எழுதியதும் விடைத்தாள்களை திருத்தி மதிப்பெண்கள் வழங்கி, அறிவிக்கப்பட்ட தினத்தில் முடிவு(Result) தெரிவிப்பதுபோல், ‘இறை உணர்வு’ என்பது, நீண்ட நாள் பயிற்சியில், திட்டமிட்டு ஒரு நாள் நடக்கும் நிகழ்வு அன்று. அறிவிற்கு தொடர்ந்து தெளிவு ஏற்பட, ஏற்பட, ஒரு கணப்பொழுதில் (momentarily) ஏற்பட்டுவிடும்/ஏற்படக்கூடிய நிகழ்வு. இறை உணர்வு என்பது அறிவிற்கு ஏற்படவேண்டிய இறுதியான, உறுதியான தெளிவு. கல்வித் தேர்வில் தோ்ச்சி பெற்றதும், அந்தப்படிப்பு முடிந்து விடுவது போன்றதல்ல இறை உணர்வில் தேர்ச்சி பெறுவது என்பது. இறை உணர்விற்குப் பின்னர்தான், இறை உணர்வு பெற்றவரின் வாழ்க்கையே முக்கியத்துவம் பெறுகின்றது. குறள் எண் 236 ல் உள்ள ‘புகழொடு தோன்றுக’ படலமும், ‘உயா்புகழ் பெறுவதற்கான’ படலமும் ஆரம்பிக்க உள்ளது.
இறை உணர்வு பெற்றவரின் தாய், தந்தையா் கொடுத்துள்ள கருமையப் பதிவுகளுடன், தான் இந்த பிறவியில் எண்ணி, சேர்த்து வைத்துள்ள வினைப்பதிவுகளின் படி, அவர்கள் ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதற்கிணங்க இந்த சமுதாயத்திற்கு அருள் நிறைந்த அறிவுத் தொண்டு செய்கின்ற படலம் ஆரம்பிக்கின்றது. மகரிஷி அவர்கள் இறை உணர்வு பெற்ற பிறகுதான், வள்ளலார் அவர்கள், மகரிஷி அவர்களின் பூதஉடலில் பிரவேசித்ததாகத் தெரிகின்றது. ஆகவே, இறை உணர்வு பெற்ற மகரிஷி அவர்கள், அதன் பிறகு (post enlightenment period) சமுதாயத்திற்கு இன்றியமையாத் தேவையான அறிவுத் தொண்டு ஆற்றுவதற்கு, வள்ளலார் அவர்கள் பெருமளவில் உறுதுணையாக இருந்திருக்கிறார் எனத்தெரிகின்றது.
இறை, 1330 குறட்பாக்களின் வாயிலாக தன் விருப்பங்களையும், எண்ணங்களையும் தெரிவித்துள்ளதில், 236 ஆவது குறளில் உள்ள இறையின் விருப்பம் என்ன? அக்குறளை நினைவுக்குக் கொண்டு வருவோம்.
“தோன்றின் புகழொடு தோன்றுக; அஃது இலார்
தோன்றலின் தோன்றாமை நன்று” …. குறள் எண் 236
இக்குறளுக்கு இரண்டுவிதங்களில் கருத்து கூறப்படுகின்றது.

1) மக்களாய் பிறந்தவர் புகழுக்குக் காரணமான குணத்தோடு பிறக்க வேண்டும். அக்குணம் இல்லாதவர் பிறக்காமல் இருப்பதே நல்லது என்பதாகும்.
2) ஒரு துறையில்(சபையில்) முற்பட்டுத் தோன்றுவதானால் புகழொடு தோன்ற வேண்டும். அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்கு தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.
முதல் கருத்து — ஒரு மனிதன் பிறப்பதற்குக் காரணம் அவனன்று. பிறப்பு என்பது வினைப்பயனை அனுபவிக்கும் தொடா் நிகழ்ச்சியாகும். அதனால் தான் ஒரு மகான் “வினைப்பயனே தேகம் கண்டாய்” என்கிறார். இதே கருத்தினைக் கூறும் மகரிஷி அவர்களின் பாடலின் சில வரிகளை நினைவு கூர்வோம்.

FFC-66-பேரின்ப-ஊற்று

பெற்றோர்களே ஒரு மனிதன் பிறப்பதற்குக் காரணிகளாவர். அந்தப் பெற்றோர்கள் பிறப்பதற்கு அவர்களுடைய பெற்றோர்கள் காரணிகளாவர். ஆகவே பிறந்தால், புகழுக்குக் காரணமான குணத்தோடு பிறக்க வேண்டுமென்றால், அந்தப் புகழுக்குக் காரண குணத்தோடு குழந்தைப் பிறப்பதற்கு யார் காரணமாக அல்லது பொறுப்பாக இருக்க முடியும்? பிறந்த இந்தக் குழந்தையா காரணமாக இருக்க முடியும்? குழந்தையின் ‘புகழுக்குக் காரணமான குணத்திற்கு’ பெற்றோர்களின் குணம் காரணமாகின்றது. இவ்வாறிருப்பதினால், பிறந்த ஒவ்வொருவருமே ‘என் குணத்திற்குக் காரணம் என் பெற்றோர்கள் தான்’ எனச் சொல்லிக் கொண்டே, தான் திருந்துவதற்குப் பொறுப்பேற்காமல் வாழ்நாளை வாழாமல் கடத்தி விடக் கூடாது. அவ்வையார் கூறும் அரிதான மானுடப் பிறவி வீணாகிவிடுமன்றோ!
WHO IS TO BELL THE CAT? இவ்வாறாக ஒவ்வொருவருமே ‘என் குணத்திற்குக் காரணம் என் பெற்றோர்கள்’ என சொல்லிக் கொண்டே, தன்னை இப்பிறவியிலேயேத் திருத்திக் கொள்கின்ற பொறுப்பை தட்டிக் கழித்தால் ‘யார் தான் பூனைக்கு மணி கட்டுவது?’ அதாவது, தொடா் நிகழ்ச்சியாகிய இந்த ஒரு பிறிவியிலாவது ஆன்மா, குருவை அடைந்து தன்னைத்திருத்திக் கொள்ளும் முயற்சியில் முனைப்போடு ஈடுபட்டு தன்னைத் திருத்திக் கொள்ள முற்படவேண்டாமா? மனிதன் மனிதனாக வாழவேண்டாமா? மனிதன் தன்னிடம் உள்ள தெய்வீக மொட்டை மலரச் செய்து, மணம் வீசச் செய்து, தானும் வாழ்வாங்கு வாழ்ந்து உலக சமுதாயத்தையும் உய்விக்க ஆவன எண்ண வேண்டாமா? ஆவன செய்ய வேண்டாமா?
வினைப்பதிவுகளோடுப் பிறந்த மனிதனுக்குத் திருத்தம் வேண்டியிருப்பதால், இப்பிறவியிலேயே அவன் திருந்தவும் வேண்டும். திருந்திய பிறகு, அவ்வழியை சமுதாயத்திற்குத் தெரிவித்து, வழிகாட்டும் அறிவுத் தொண்டினையும் ஆற்ற வேண்டும். இப்படி தொண்டாற்றுபவர்களை எதிர்பார்த்தே, தோன்றினால் புகழொடு தோன்றுக என்கின்றது இறை.
1) ‘புகழுக்குக் காரணமான’ குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்குமுன் தான் அந்தக் குணநிலையில் ஏற்றமடைவதற்கான காலமும், வாய்ப்பும் வந்துவிட்டது.
2) அந்த குணநிலையில் இல்லாத பெற்றோர்களுக்குப், பிறந்த குழந்தை, தான் வாழும் காலத்திலேயே ‘புகழுக்குக் காரணமான குணத்தை’ப் பெறுவதற்கும் வழி பிறந்துவிட்டது.
3) புகழுக்குக் காரணமான குணத்தை எடுத்துச் சொல்லி வழிகாட்டும், அறிவுத்தொண்டு செய்யவும் வழி பிறந்துவிட்டது.
அதுதான் வாழ்வியல் கல்வியான மனவளக்கலையாகும்.
குறளுக்கான இரண்டாவது கருத்தும் சரிதான். தான் பங்கேற்கும் ஒரு சபை நிகழ்ச்சியில் பங்கு கொள்ள நேர்ந்தால் அதற்குரிய சிறப்பில்லாமல் அங்கு பங்கு கொள்ளக் கூடாது என்கின்றது இரண்டாவது கருத்து. இது நியாயம் தானே? முதல் கருத்தில் கவனம் கொண்டால் இரண்டாவது கருத்திற்கே இடமில்லை.
‘புகழுக்குரிய குணத்தை’ இப்பிறவியில் அடைவதே இறை உணர்வாகும். பின்னர் அதற்கு இலக்கணமாக, ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதனை செயலுக்குக் கொண்டுவருவதே அறிவுத்தொண்டாகும். எனவே, இறை உணர்வு பெற்றவருக்கு, இறையின் 236 வது விருப்பத்திற்கிணங்க, இந்த சமுதாயம் உய்வதற்கான அறிவுத் தொண்டினை செய்வதற்கான படலம் காத்துக் கொண்டிருக்கின்றது.
வள்ளலார் வாழ்ந்த காலத்தில் மகரிஷி அவர்கள் அவதரிக்கவில்லை. வள்ளலார் அவர்கள் அருட்பெருஞ்ஜோதியான (1874) பிறகுதான் 1911 ல் மகரிஷி அவர்கள் அவதரித்துள்ளார். வள்ளலார் அவர்கள் அருட்பெருஞ்ஜோதியான இடம் வடலூர். மகரிஷி அவா்கள் பிறந்து வாழ்ந்த இடம் கூடுவாஞ்சேரி. தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர் ஆகியவர்களை நினைந்திருக்கிறார் மகரிஷி அவர்கள். இருப்பினும், வள்ளலார் அவர்கள் மகரிஷி அவர்களின் உடலில் தங்கி அருட்தொண்டாற்றியது வள்ளலாரின் விருப்பமாகத்தான் தெரிகின்றது.
சுமார் 80 வருடங்களுக்குப் பிறகு, பொருத்தமான, சரியான ஆன்மாவை அடையாளங்கண்டு, முன்பின் தெரியாத மகரிஷி அவர்களின் பூதஉடலில் பிரவேசம் செய்துள்ளார். வள்ளலார் அருட்பெருஞ்ஜோதியாவதற்கு முன்னர் இச்சமுதாயத்திற்கு உறுதிமொழிகளை இறையின் சார்பாகக் கொடுத்துள்ளார். எல்லா உடம்பிலும் புகுந்து கொண்டு, திருத்திடுவோம் என்றும், அகவினத்தாருக்குச் சாகா வரமும், ஏனையோர்க்கு பரிபாக நிலையும் அளிப்பதாக உறுதி கூறியுள்ளார். ஆகவே மகரிஷி அவர்கள் ஆற்றவேண்டிய அருட்தொண்டிற்கெல்லாம் உதவியாக இருக்கவேண்டும் என எண்ணி மகரிஷி அவர்களைத் தேடி வந்திருக்கிறார். மகரிஷி அவர்களிடம் வருவதற்கு முன்னர் இருந்த எண்பது ஆண்டுகளில் அவர் எந்தெந்த அருளாளர்களிடம் தங்கி இருந்து அருள்பாலித்தார் என்றோ அல்லது அவ்வப்போது வழிகாட்டி வந்தார் என்பதோ தெரியவில்லை. ஆனால் நாமும், இனிவரும் உலக சந்ததியெல்லாம் பயன் பெறுவதற்காக, நம்குருதேவரிடம் பத்து வருடங்கள் இருந்து அருள் பாலித்துள்ளார். அந்த பத்து ஆண்டு காலத்துக்குள், எழுதிய கட்டுரைகள், கவிகள் அனைத்தும் தத்துவ மயமாக இருந்தது என்று மகரிஷி அவர்களே கூறுகிறார்கள். வள்ளலார் அவர்கள், தான் எண்ணி, ஆனால், தன் சொந்த உடல் மூலம், முடிக்காமல் விட்டுவைத்த செயல்களையெல்லாம், மகரிஷி அவர்களின் உடல் வழியாக முடித்தார் என்று, தான் எண்ணுவதாக மகரிஷி அவர்கள் தன் வாழ்க்கை விளக்கத்தில் கூறியுள்ளார். வள்ளலார் பல சந்தர்ப்பங்களில், தன்னோடு இருந்து வழிகாட்டி செயலாற்றினார் என்று மகரிஷி அவர்களே கூறுகிறார்கள். இவ்வனுபவத்தைத் தெரிவிக்கும் பாடலை நினைவு கூர்வோம்.

FFC-65-வள்ளலார்-என்று-15-03-2015

மனித குலம் உய்வதற்காக செய்ய வேண்டிய தொண்டில், வள்ளலார் அவர்கள் மகரிஷி அவர்களுக்கு, பேருதவியாக இருந்திருக்கிறார். மேலும் எந்தெந்தச் செயலை செய்யச் சொன்னாரோ, அதனை நன்று எனக்கருதி செய்து முடிப்பதை பேறாகக் கருதினார் மகரிஷி அவர்கள். ஆகவே இவர் அருட்தொண்டை சிறப்பாக செய்து முடித்துக்கொண்டு வருவதை அறிந்த மற்ற நல்லறிஞர் பலர் மற்றும் கொடையாளர்கள், அவருக்கு நட்பை அளித்து உதவியிருந்ததை இப்பாடலில் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.
குருவணக்கப்பாடலில் “அவ்வறிவில் ஆழ்ந்து ஆனந்தக் கவியாத்தார் இராமலிங்கர்” என்று வள்ளலாரை நினைவு கூர்கிறார். அவ்வறிவு என்றால் எவ்வறிவு? பேரறிவில் ஆழ்ந்து ஆனந்தக் கவியாத்தார். மகரிஷி அவர்கள் எப்போது முதல் கவி எழுதினார் என்று தெரியவில்லை. ஆனால் மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து எனும் நூலின் மூலம், அவர் 1953 லிருந்து கவிகள் எழுத ஆரம்பித்திருக்கலாம் எனத் தெரிகின்றது. இங்கே ஓர் ஒற்றுமைத் தெரியவருகின்றது. வள்ளலார் அவர்கள், மகரிஷி அவர்களின் பூதஉடலில் பிரவேசம் செய்த ஆண்டு 1953 ஆக இருக்கலாம். வள்ளலார் அவர்கள் மகரிஷி அவர்களின் பூதஉடலில் பிரவேசித்ததிலிருந்து பத்து வருடத்துக்குள் எழுதிய கட்டுரைகள், பாடல்கள் எல்லாம் தத்துவமயம் எனக் கூறியதிலிருந்தும், ஆனந்தக் கவியாத்தார் என்று குருவணக்கப்பாடலில் கூறியுள்ளதிலிருந்தும், 1953 லிருந்து மகரிஷி அவர்கள் எழுதிய பாடல்கள் வள்ளலாரே கூறியதாகவும் கொள்ளலாம். வள்ளலார் அவா்களின் அறிவாற்றலும், மகரிஷி அவர்களின் அறிவாற்றலும் அந்த ஒரே பேராற்றலின் அம்சங்கள் தானே! ஆகவே பூதஉடலை உதிர்த்த மகான்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்கின்ற வினாவிற்கான விடை இந்நிகழ்வுகளேயாகும். இந்த நான்கு அருளாளர்களைத் தவிர, வேறு எந்த அருளாளர்களாவது மகரிஷி அவர்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்களா என்பதனை அடுத்த விருந்தில்(22-03-2015 ஞாயிறு) பார்ப்போம். ………தொடரும்.