65 -இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

 

இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

FFC- 65 (4/?)

 

15-03-2015 – ஞாயிறு

சென்ற அறிவிற்கு விருந்தில் அகமே மெய்ப்பொருள் என்று உறுதிப் படுத்துவதற்கு மகரிஷி அவர்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கக் கூடிய குறட்பாவைப் பார்த்தோம். இப்போது மெய்ப்பொருள்தான் அறிவு என்று உறுதிப் படுத்த, உறுதுணையாக இருந்திருக்கக் கூடிய குறட்பாக்களைக் கவனிப்போம்.

அதிகாரம் – மெய்உணர்தல்

“எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு” …குறள் எண்.355
அதிகாரம் – அறிவு உடைமை
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.” … குறள் எண். 423

அறிவைப்பற்றிக் கூறும் இரண்டு குறட்பாக்களின்(குறள் எண். 355. 423) வழியாக அறிஞர் திருவள்ளுவரின் அறிவாற்றலுக்குள் நுழைவோம். இரண்டு குறட்பாக்களுமே அறிவிற்கான இலக்கணத்தைக் கூறுகின்றன. மேலும், ‘அறிய வேண்டியதை அறிந்தால்தான் அது அறிவு’ என்கின்ற உண்மையை, வேதாத்திரியம் உறுதியுடன் தெளிவுபடுத்துவதற்குக் காரணமாக இருந்தது. திருவள்ளுவர் இயற்றிய இவ்விரண்டு குறட்பாக்களில் படர்ந்துள்ள அவரது அறிவாற்றல், அறிவு எவ்வாறு இருக்க வேண்டும் எனக் கூறுகின்றது.

அடுத்ததாக மெய்ப்பொருளல்லவற்றை பொருள் எனக் கொள்வதால் துன்பம்தான் ஏற்படும் என்று கூறும் குறட்பாவைக் கவனிப்போம்.

அதிகாரம் – மெய்உணர்தல்

பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு. … குறள் எண். 351

வேதாத்திரியத்தின் பல சிறப்புகளில் ஒன்று ‘பொருள் நிலை, நிகழ்ச்சி நிலை’ என்கின்றக் கண்டுபிடிப்பு. இக்கண்டுபிடிப்பால், வேதாந்தத்தில் கூறப்பட்டு வந்த “இவ்வுலகம் மாயை, கானல் நீரைப் போன்றது, இவ்வுலகம் கனவு போன்றது, கனவு எவ்வாறு நிஜமில்லையோ, அதுபோல் இவ்வுலகம் பொய்யானது” என்று பாமரனுக்குப் புரியாத புதிராக, நம்பமுடியாமல் இருந்து வந்த, ஆனால் இறையுணர்வு பெறுவதற்குத் தடையாக இருந்து வந்த ‘சரியானப்புரிதல் இல்லாத நிலையை’ நீக்கி, வேதாந்தக் கூற்றிற்குச் சரியான பார்வையைக் கொடுத்து, புரியவைத்து, ஆன்மீகத்தில் இருந்து வந்த அச்சத்தை நீக்குவதற்கு, 351 வது குறட்பாவில் உள்ள அறிஞர் திருவள்ளுவரின் அறிவாற்றல், 1911 க்குப் பிறகு உதவியாக இருந்திருக்கின்றது.

இந்த நான்கு குறட்பாக்களிலுள்ள அறிவாற்றல் மட்டுமே மகரிஷி அவர்களின் தெளிவிற்கு தெளிவு சேர்த்ததாகக் கொள்ள முடியாது. ஐம்பது குறட்பாக்களுக்கு உட்பொருள் விளக்கம் எழுதியுள்ளார் மகரிஷி அவர்கள். திருக்குறளுக்குப் பலர் உரை எழுதியுள்ளார்கள். ஆனால் எவ்வாறு ‘பொருள், மெய்ப்பொருள்’ என்று இரண்டு உள்ளதோ அதுபோல் திருக்குறளுக்கும் ‘பொருள், உட்பொருள்’ என இரண்டு தேவையிருப்பதால், மகரிஷி அவர்கள் உட்பொருள் விளக்கம் எழுதியுள்ளார். ‘உட்பொருள்’ என்றால் வெளிப்படையாக அல்லது மேலோட்டமாகத் தெரியாத பொருள் என்று பொருள். ஆழ்ந்து உள்ளே சென்று பொருள் அறியப்படுவதால் அது உட்பொருள் எனப்படுகின்றது.

அந்த ஐம்பது குறட்பாக்களுக்கும் மேலோட்டமாக இல்லாமல், திருவள்ளுவர் இப்போது இருந்திருந்தால். அக்குறட்பாக்களுக்கு நேரிடையாக வாய் மொழியாக என்ன விளக்கம் கூறியிருப்பாரோ, சாக்ஷாத் அதனையே மகரிஷி அவர்கள் கூறியிருப்பதால் அதனை ‘உட்பொருள் விளக்கம்’ என்கிறார். அவர் கூறிய விளக்கம் அறிவுப்பூர்வமாக, ஏற்றுக் கொள்ளும்படி உள்ளது. ஆகவே திருவள்ளுவரின் அறிவாற்றல் மகரிஷி அவர்களுக்கு, உறுதுணையாக இருந்ததால், திருவள்ளுவரை குருவணக்கப் பாடலில் இரண்டாவதாக நினைவு கூர்கிறார்.

அடுத்ததாக திருமந்திரம் அருளிய திருமூலரை வணங்குவோம். குருவணக்கப் பாடலில் “அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார் அறிஞர் திருமூலர்” என்று கூறி திருமூலரை வணங்குகிறார் மகரிஷி அவர்கள்.
அறிவே தெய்வம் என்று கருத்தியலாக அறிந்து கொண்டால் மட்டும் போதுமா. மருத்துவப் படிப்பில் வெறும் கருத்தியல் பாடங்களை மட்டுமே படித்தால் போதுமா? உதாரணத்திற்கு, மருத்துவராக இருக்கும் மாணவர், இதயத்தை, படத்தின் (SKETCH) மூலமாகவோ அல்லது மாதிரி வடிவத்தின் (MODEL) மூலமாகவோ அறிந்து கொண்டால் மட்டுமே போதுமா? நேரிடையாக இதயத்தை பார்க்க வேண்டாமா? அதன் இயக்கத்தை அறிய வேண்டும். படித்ததை செய்முறை பயிற்சியின் வாயிலாக உறுதிபடுத்தி, அப்பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும்.

அதுபோல் ‘அறிவே தெய்வம்’ என்று கருத்தியலாக அறிந்து விட்டவர், அறிவாகிய தெய்வத்தைக் கொண்டிருப்பதால், அன்றிலிருந்தே அவர் தெய்வப் பண்பு நிலைக்கு உயர்ந்து விட முடியுமா? முடியும் என்றால் ‘அறிவே தெய்வம்’ என்று அறியாததற்கு முன்பிருந்தே அவர் தெய்வப்பண்பு நிலையில் அல்லவா வாழ்ந்திருக்க வேண்டும். ஆகவே அறிவே தெய்வம் என்று கருத்தியலாக அறிந்து கொண்டாலும், அப்பயனை நடைமுறையில் அனுபவிக்க செய்முறைப் பயிற்சியில் அதனை உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் ‘அறிந்தது சிவம். மலர்ந்தது அன்பு’ என்கின்ற ஆன்றோர் மொழி செயலுக்கு வரும். இதுதான் மனிதகுலத்திற்குத் தேவையான ஒன்று.

பேரறிவாக இருந்ததே உயிர்களாகி, கடைசியாக மனித அறிவாக வந்திருப்பதை அறிந்து கொண்டாலும், அறிந்து கொண்டதை உறுதிப்படுத்துவதற்கான, மனிதனை பண்புள்ளவனாக்க, அறிவை அறிவதற்கான செய்முறை–வழிமுறைகள் இருக்க வேண்டும்.

கல்வித் தேர்வில், அப்பாடத்திட்டத்தில் மாணவர் என்ன தெரிந்து வைத்திருக்கிறாரோ அதனை மட்டும் கருத்தில் கொண்டு நூறு மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றது. அங்கே மாணவரின் பண்பையோ ஒழுக்கத்தையோ கணக்கில் எடுத்துக் கொண்டு அப்பாடத்திற்கு மதிப்பெண்கள் வழங்கப்படுவதில்லை.

மனவளக்கலையை ஒரு சாதனை மார்க்கமாக்கி, அதற்கான உளப்பயிற்சி முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த முறைகள்தான் பல தவமுறைகளும், தற்சோதனையுமாகும். அதற்கான வழிகளைச் சொன்னவர் அறிஞர் திருமூலர் என்கிறார் மகரிஷி அவர்கள்.

அறிஞர் திருமூலர், தான் இயற்றியுள்ள மூன்றாம் தந்திரத்தில் யோகத்தைப் பற்றிக் கூறியுள்ளார். இப்பாடல்களிலுள்ள அறிஞர் திருமூலரின் அறிவாற்றல், மகரிஷி அவர்கள் குண்டலினி யோகத்தை எளிய முறையில் வடிவமைக்க உதவியாக இருந்துள்ளதை நன்றியுடன், நினைந்து வணங்கி, அவரது அறிவாற்றலை குருவணக்கத்தின் போது பிரார்த்திக்கச் (INVOKE) சொல்லியிருக்கிறார்.

அடுத்ததாக மகரிஷி அவர்கள் குருவணக்கப்பாடலில் நான்காவது அறிஞராக நினைவு கூர்வது அருட்பிரகாச வள்ளலார் அவர்கள். இது வரை கூறிய மூன்று அறிஞர் பெருமக்களும் மகரிஷி அவர்களுக்கு நேரிடையாகவோ, அதாவது, பூதஉடல் இருக்கும் போதோ, அல்லது பூதஉடலை உதிர்த்த பிறகு ஆன்மத் தொடர்பாகவோ உதவி செய்யவில்லை. அவர்கள் அருளியுள்ள பாடலில் படர்ந்துள்ள அறிவாற்றலே உதவியாக இருந்திருக்கின்றன. அதற்காகத்தானே இயற்கை, அருளாளர்களை, அருட்பாக்களை இயற்றச் செய்கின்றது. ஆனால் இவ்விரண்டிற்கும் மாறாக உள்ளது அருட்பிரகாச வள்ளலார் மகரிஷி அவர்களுக்கு உதவியது.

அருட்பிரகாச வள்ளலார் பூத உடலை உதிர்த்த பிறகு, எண்பது வருடங்கள் சென்ற பிறகு, நேரிடையாக மகரிஷி அவர்களின் பூதஉடலுக்குள் பிரவேசம் செய்திருக்கிறார். 30-01-1874 அன்று வள்ளலார் அவர்கள் அருட் பெருஞ்ஜோதியானார். இது நடந்து (1953-1874=79) சுமார் எண்பது ஆண்டுகள் கழித்து மகரிஷி அவர்களின் பூத உடலுக்குள், மகரிஷி அவா்களின் அனுமதியுடனும், வள்ளலார் விரும்பியும் பிரவேசம் செய்துள்ளார். வள்ளலார் பத்து ஆண்டுகள் தன்னிடம் வசித்து(இருந்ததாக) வந்தார் என மகரிஷி அவர்களே கூறியுள்ளார். இந்த நிகழ்வு நடந்ததைக் கூர்ந்து கவனித்தால் வேறு பலவற்றையும் அறியலாம். மகரிஷி அவர்கள் 1953 ற்கு முன்னரே, அவரது 35 வயதிற்குள், அதாவது கி.பி. 1946 க்குள் (1911+35=1946) இறை உணர்வு பெற்று விட்டார் என அறிய முடிகின்றது.

ஆகவே வள்ளலார் அவர்கள், மகரிஷி அவர்கள் இறை உணர்வு பெற்ற பிறகு தான்  அவர் உடலுக்குள் பிரவேசம் செய்திருக்கிறார்.  ஏன் மகரிஷி அவர்கள் இறை உணர்வு பெறுவதற்கு  முன்னர் வள்ளலார் அவர்கள், மகரிஷியின் பூதஉடலில் பிரவேசம் செய்யவில்லை என வினா எழலாம்.

தொடரும் …18-03-2015