64-இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

FFC- 64 (3/?)

11-03-2015 — புதன்

       கடந்த அறிவிற்கு விருந்தில், வேதாத்திரி மகரிஷி அவர்கள், தான் இயற்றிய குருவணக்கப்பாடலில், தாயுமான சுவாமிகளை, நினைவுகூர்ந்தது பற்றி ஆராய்ந்தோம். முடிவில்லா ஆன்மீகத் தொடர் ஓட்டத்தில்(NEVER ENDING SPIRITUAL RELAY RACE) ஒவ்வொரு ஞானியுமே, ‘தொடர் ஓட்ட விளையாட்டுப் பந்தயத்தில்(SPORTS)’ பங்கு பெரும் விளையாட்டு வீரர்களைப் போன்றவர்கள் என்று பார்த்தோம். அவர்களை ஏன் ஞானவீரர்கள் என்று அழைக்கலாம் என்று இப்போது பார்ப்போம்.

விளையாட்டில் தன்னுடைய திறமைகளைக் காட்டுபவர்களை விளையாட்டு வீரர் என்று அழைக்கிறோம். எல்லோருக்கும் விளையாட்டில் ஆர்வம் இருப்பதில்லை. ஆர்வம் இருந்தாலும் எல்லோராலும் விளையாட்டில் திறமை காட்டமுடிவதில்லை. விளையாட்டில் திறமை காட்டுவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு ஆர்வமும் பயிற்சியும் அவசியம். அது போல் ஞானம் அடைவது என்பது அவ்வளவு எளிதல்ல. இருந்தாலும் எளிதானதுதான். ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல், ஞானம் என்கின்ற வைர நாணயத்திற்கும் இரு பக்கங்கள் உள்ளன.
சாதாரண நாணயத்தின் இருபக்கத்தை தலையென்றும், பூ என்றும் (HEAD, TAIL) சொல்வது போல, ஞானம் என்கின்ற வைர நாணயத்தின் ஒரு பக்கம் ‘ஞானம் அடையமுடியும், அது எளிது’, என்பதும், மற்றொரு பக்கம் ‘ஞானம் அடைய முடியாது, அது எளிதானதல்ல’ என்பதுமாகும்.

சாதாரண நாணயத்தின் ஒரு பக்கமான ‘பூ-TAIL’ பக்கத்தை மட்டும் பார்த்துக் கொண்டு, ‘தலை-HEAD’ பக்கம் தெரியவில்லையே என்றால் எப்படி? அந்த நாணயத்தை ஒரு நொடியில் திருப்பிப்பார்த்தால் ‘தலை-HEAD’ தெரியும். REALISATION IS SIMPLE. BUT AT THE SAME TIME IT IS DIFFICULT. ஞானிகள் இவற்றிற்கு விதி விலக்கு. ஏனெனில் அவர்கள் பிறவியின் நோக்கத்தை அறிந்தவர்கள். அதாவது ஞானிகள் அனைவரும் வைரநாணயத்தின் ‘ஞானம் அடைவது, முடியும், எளிது’ என்கின்ற பக்கத்தைப் பார்த்தவர்கள். இது, அவர்களின் மாதா, பிதா கொடுத்த கருமையச்சொத்தால் நடக்கின்றது. மற்றவர்களோ வைர நாணயத்தின் மற்றொரு பக்கமான ‘ஞானம் அடைய முடியாது, அது எளிதானதல்ல’ என்கின்ற பக்கத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

சாதாரண மனிதனைப் போன்றில்லாமல், தெய்வீகத்தன்மைகளில் முக்கியமானதான, தளரா விடாமுயற்சியினைக் கொண்டு (தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். — குறள் எண் 619) சலிப்பில்லாமல், விளக்கத்திற்கு மேல் விளக்கம் பெற்று, புலன்களுக்கு சமாதானம் கூறி, மனதை திருப்திப் படுத்தி, மாயை விரித்துள்ள புலன்மயக்க வலையிலிருந்து சாதுரியமாகத் தப்பித்து, மாயவலைக்கு வெளியே வந்து விடுதலையாகி, பயம் நீங்கி, மீண்டும் தூயவெளிக்குள்ளே தனது பூர்வீக வீட்டிற்குள் நுழைந்தவர்கள் அவர்கள். அறிவை அறிந்த தெளிவினை அடைந்தவர்கள். ஞானம் அடைவதில் தங்களது திறமைகளைக் காட்டியவர்கள்.

உலகியல் வாழ்க்கை மட்டுமேதான் வாழ்க்கை என நினைத்துக் கொண்டு, ஆன்ம நலனைப் புறக்கணித்துக் கொண்டிருக்கும் சமுதாயத்தில், உலகியல் வாழ்க்கையை, ஆன்மீக நலனுக்காகத் தியாகத்துடன் அர்ப்பணித்தவர்கள். அவ்வாறு அவர்கள் வாழாமல் இருந்திருந்தால், சமுதாயத்திற்கு வழி காட்டும் அரிய அறநூல்கள் கிடைத்திருக்காது. உதாரணத்திற்கு நம்முடைய மகரிஷி அவர்கள். பகல் முழுவதும் உழைப்பு. இரவு நேரங்களில் சிந்தனை; ஆராய்ச்சி செய்வது. சிந்தனை திரண்டு வரும்போது, படுக்கையிலிருந்து எழுந்து, மண்ணெண்னை விளக்கின் ஒளியில் அதனை எழுதி, அவற்றை நூல்களாக்குவது. எழுதி விட்டு மீண்டும் உறங்குவதற்குச் செல்வது. ஆனால் உறங்க முடியாமல் தவிப்பது, எழுதிய எழுத்துக்கள் அவரிடம் வந்து பேசுவது, மீண்டும் எழுந்து எழுதியதை வாசிப்பதில் இன்புறுவது…. இப்படி பல இரவு நேரங்களைக் கழித்திருக்கிறார். இவர்கள் எல்லாம் ‘வீரர்’ என்கின்ற சொல்லின் இலக்கணத்திற்குள் வரவில்லையா? எனவே ஞானிகளும் வீரர்களே. அவர்கள் ஞான வீரர்கள்.

தொடர் ஓட்டப் பந்தயத்தில் ஒரு குழுவின் வெற்றி, அந்தக் குழுவில் பங்கு பெறும் எல்லா (நான்கு என்று வைத்துக்கொள்வோம்) வீரர்களின் கூட்டு முயற்சியே. வெற்றி பெற்ற குழுவிலுள்ள அனைவருக்குமே பரிசு வழங்கப்படுகின்றது. அது போன்று தான் இப்போது ஒரு ஞானி அவதரித்திருக்கிறார் என்றால் (உதாரணத்திற்கு வேதாத்திரி மகரிஷி), அந்த முடிவில்லா ஆன்மீகத் தொடர் ஓட்டத்தில் வந்தவர்தான் இப்போது வந்தவரும். இன்னும் பலர் வர இருக்கின்றனர். அவர்களின் வருகை என்பது சமுதாயத்தின் தேவையை இயற்கை பூர்த்தி செய்யும் புனித ஏற்பாடுதான். அவ்வப்போது அவதரிக்கின்ற ஒரு ஞானி மட்டும் முடிவில்லா ஆன்மீகத் தொடர் ஓட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டார் என்று சொல்ல முடியாது.

ஞானியும் தாயின் வயிற்றில் பத்து மாதம் இருந்துவிட்டுத்தான் வந்திருக்கிறார். முயற்சி செய்து வினைப்பதிவுகளைப் போக்கி ஒரு பிறவியிலேயே ஞான ஒளியைப் பெற்றவர்கள். வழிப்பறி கொள்ளையனாக இருந்த ரத்னாகர், ஒரு பிறவியிலேயே தரமாற்றம் அடைந்து பண்பேற்றம் பெற்று வால்மீகி முனிவராகவில்லையா? அவர்களுக்குத் தெளிவு கிடைக்கின்றது, தெளிவின் ஒளியில் வாழ்க்கையை நடத்துகின்றனர். அதே வேளையில் தான் வாழும் சமுதாயத்திற்கு வழிகாட்டியாக இருந்து, உதவியும் வருகின்றனர்.

ஞானம் என்பது எட்டாக்கனி அல்ல. எட்டிய கனியாக்கி விட்டது இயற்கை, வேதாத்திரியத்தின் வாயிலாக. ஞானம் என்பது பொருளல்ல. ஒரு பொருளை அடையலாம். அல்லது அடையமுடியாமலும் போகலாம். ஆனால் ஞானம் என்பது ஆறாம் அறிவு இருக்க வேண்டிய உச்சகட்ட தெளிவு நிலை அது. மரணம் சம்பவிக்கும் வரையில் ஆறாம் அறிவு இருக்கப் போகின்றது. முயற்சியிருந்தால் ஞானம் பெற்று விடலாம் இப்பிறவியிலேயே. ஞானம் என்றால் அறிவின் தெளிவு என்பது பொதுவான விளக்கம் என்றும், அறிவையறிந்த தெளிவு என்பது சிறப்பான விளக்கம் என்றும், ஞானம் அடைவதற்கு முன்னரே ஞானம் என்பது என்ன என்று கூறி ஞானதாகத்தை ஏற்படுத்தி, உலக மக்கள் எல்லோரையும் ஞான வாழ்விற்கு அழைக்கிறார். அறிவை அறிவதற்கான கருத்தியல் பாடங்களையும், சாதனைக்கான செய்முறை பாடங்களையும் வகுத்துக் கொடுத்துள்ளார். ‘கொடுத்துள்ளார்’ என்பது முடிவில்லா ஆன்மீக தொடர் ஓட்டத்தில் இறையாகிய பேரறிவு இந்த நூற்றாண்டில் செய்துள்ள புதுமையான, கருணையோடு கூடிய கடமை என்றே கொள்ள வேண்டும்.

ஆகவே தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர், இராமலிங்க சுவாமிகள் ஆகிய நான்கு ஞானிகள் மற்றும் அறிவில் அறிவாய் நிலைத்து அதில் வாழ்ந்து காட்டிய மற்ற அறிஞர்களின் பாடல்களில் பரவியிருந்த அறிவாற்றல், மகரிஷி அவர்கள் செய்த பயிற்சிகளுக்கு அப்பாலும், பெரும்பங்கு உதவி செய்ததாக அறிய முடிகின்றது.
மேலும் மகரிஷி அவர்கள், தாயுமான சுவாமிகளின் வேறு பாடல்களையும், ஏன் அனைத்துப் பாடல்களையும், ஊன்றிப் படித்ததால் தான், குருவணக்கப் பாடலில் முதலில் தாயுமான சுவாமிகளை நினைந்து “அறிவேதான் தெய்வம் என்றார் தாயுமானார்” என இயம்புகின்றார்.

டுத்ததாக திருவள்ளுவரை தரிசிப்போம். திருவள்ளுவர் நாமம் வாழ்க. 2046 ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்தவர் திருவள்ளுவர். பத்தொன்பது நூற்றாண்டுகளுக்கு பின்னர் ஒரு ஆன்மாவிற்கு, மானசீக குருவானவர். அந்த ஆன்மாதான் வேதாத்திரி மகரிஷி அவர்களாவார். நிச்சயமாக திருவள்ளுவர் பூதவுடலுடன் வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு குருவாகவில்லை. இருப்பினும் அருட் பிரகாச வள்ளலாரைப் போன்று, நேரிடையாக திருவள்ளுவரின் ஆன்மா மகரிஷி அவர்களுக்கு ஆன்மீக அறிவு பெற உறுதுணையாக இருந்ததாகவும் தகவல் இல்லை. இருந்தாலும் மகரிஷி அவர்கள் திருவள்ளுவரை நினைவு கூர்கிறார். திருவள்ளுவர், மகரிஷி அவர்களுக்கு எவ்வாறு அருட்துணையாக இருந்திருக்கிறார்?

மகான்களின் பூதவுடல் இறக்கிறதே தவிர, அவர்களது எண்ணங்கள், அவர்களின் அறிவாற்றல் என்றும் இப்புவி உள்ளவரை வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அருளாளர்களின் எண்ணமும், அறிவாற்றலும் எப்போதும் இறவாமல் இருக்கின்றன என்பதற்கு வேறு எங்கும் சான்றைத் தேட வேண்டியதில்லை. அருளாளர்கள் அருளியுள்ள நூல்களே அவர்களின் எண்ணங்களையும், அவா்கள் அறிந்த மறைபொருள் உண்மைகளையும் எடுத்து இயம்புகின்றன. சமுதாயத்திற்கு அவை விளங்கவில்லை. அந்த அளவிற்கு, சமுதாயம் ‘புலன்மயக்கத்தில் மூழ்கி, மாய வலையில் சிக்கிக் கொண்டிருக்கின்றோம்’ என்று கூடத் தெரியாமல் அவதியுறுகின்றது. தெரிந்தாலும் அலட்சியப்படுத்தி, ‘மூத்தோர் சொல் அமிர்தம்’ என்று அவ்வையார் கூறியிருந்தும், அதனை நம்புவதற்கு முயற்சி செய்யாமலும், சான்றோர்களின் அறநெறி அறிவுரைகளை மதிப்பதும் இல்லை.

குருவணக்கத்தில், திருவள்ளுவரை நினைந்து, வணங்கி, அவர் எவ்வாறு தனக்கு உதவியிருக்கிறார் என்று மகரிஷி அவர்கள் கூறும் வைர வரிகளை நினைவு கூர்வோம்.

“அகத்ததுதான் மெய்ப்பொருள் என்று எடுத்துக்காட்டி,
அறிவதனை அறிவித்தார் திரு வள்ளுவர்”. என்கிறார் மகரிஷி அவர்கள்.

ஆனால் மகரிஷி அவர்களுக்கு, எந்தக் குறளின் வழியாக திருவள்ளுவரின் அறிவாற்றல் துணை செய்ததாக தகவல் இல்லை. ஆனால் மகரிஷி அவர்கள் ஐம்பது குறட்பாக்களுக்கு உட்பொருள் விளக்கம் எழுதியுள்ளார். மகரிஷி அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள குறட்பாக்கள், அவருடைய சிந்தனாப் பள்ளி (students of Vethathiri School of Thoughts) மாணவர்களுக்கு உதவும் வகையிலே அமைந்துள்ளது என்பது உண்மை. அதாவது அவர் கண்டுபிடித்துள்ள ஆன்மீக உண்மைகளுக்கு சான்றாக உள்ள குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் மகரிஷி அவர்கள்.

“அகத்ததுதான் மெய்ப்பொருள் என்று எடுத்துக்காட்டி
அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்” என்பதால் எந்தக்குறள் இந்த உண்மையைத் தெரிவிக்கின்றது என்கின்ற வினாவிற்கு வருவோம்.

அகம் மெய்ப்பொருள் என்றும், அதுவே அறிவு என்றும் கூறியுள்ள குறள் ஒன்றா அல்லது அதற்கும் மேலா என வினா எழுகின்றது. மகரிஷியின் கூற்றில் இரண்டு கண்டுபிடிப்புகள் உள்ளன. முதலாவது கண்டுபிடிப்பு – மெய்ப்பொருள் மனிதனின் அகமாக(உள்ளம்) உள்ளது. அந்த மெய்ப்பொருள் வேறு ஏதுமில்லை அறிவேதான் என்கிறது இரண்டாவது கண்டுபிடிப்பு. தாயுமான சுவாமிகள் நேரிடையாகக் கூறாமல், தூயவெளியே தெய்வம் என்று மகரிஷி அவர்களுக்கு பாடல் வழியாகக் கூறிவிட்டார். மேலும் சில பாடலின் வாயிலாக தாயுமான சுவாமிகள் அறிவே தெய்வம் என்றும் மகரிஷி அவர்களுக்கு கூறிவிட்டார். அந்த உறுதிப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்பு, மேலும் திருவள்ளுவர் வாயிலாகவும் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. அந்தக் குறட்பாக்கள் என்னென்ன?

”ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்” குறள் எண் 702

குறட்பாவின் விளக்கம் என்ன? இக்குறள் அகத்தை மெய்ப்பொருள் என்று – தெய்வம் என்று சந்தேகமின்றி உணர்ந்து கொண்டவர் இறைவனாகவே மதிக்கப்படத்தக்கவர் என்கிறார் திருவள்ளுவர். மெய்ப்பொருளை சந்தேகமில்லாமல் உணர்ந்து கொண்டவர் தெய்வமாக மதிக்கப்படத்தக்கவர் மட்டுமல்ல, அவரே சமுதாயத்தை நல்வழிபடுத்தும் குருவுமாவார். குரு என்பவா் யார் என்று கூறும் சமஸ்கிருத ஸ்லோகத்தை நினைவு கூர்வோம்.

குருர் பிரம்மா குருர் விஷ்ணு
குருர் தேவோ மஹேஸ்வர:
குருர் சாக்ஷாத் பரம்பிரம்மா
தஸ்மைஸ்ரீ குரவே நம:

குருவைக் ‘கடவுள்’ என்று ஒரு முறை மட்டும் சொல்லாமல், பிரம்மா, விஷ்ணு, மஹேஸ்வரன் என்று மூன்று முறை, மூன்று கடவுளர்களின் பெயர்களைச் சொல்லி உறுதிபடுத்துகிறார் இந்த ஸ்லோகத்தை அருளியவர். அதோடு, கேட்பவருக்கு எங்கேயாவது சந்தேகம் வந்துவிடப் போகின்றதே என எண்ணி, இறுதியாக, சத்தியமாக/நிச்சயமாக குரு கடவுளேதான் என மீண்டும் கூறுகிறார் இச் ஸ்லோகத்தின் ஆசிரியர். இறைநம்பிக்கை உள்ளவருக்கு, இறை நிச்சயமாக உள்ளது என்பதில் சந்தேகம் இருக்காது. ஆனால் புலன்களுக்கு காணப்படாத இறை எவ்வாறு இருக்கின்றது என சந்தேகம் மட்டும் இருக்கலாம். அந்த சந்தேகத்தை வேதாத்திரியம் அவருக்கு, இறை அரூபமாக உள்ளது என்று நிரூபித்து விட்டது.

இறைக்கு உருவமில்லை, இறை அரூபமாக உள்ளது என்று தெளிவாக விளங்கிவிட்ட பிறகு இறை ஒரு பக்தனுக்கு எந்த வடிவில் வந்து உதவி செய்ய முடியும்? அரூபமான இறை, பக்தனுக்கு உதவி செய்வது என்பது, வேறு யாரும் கேட்க முடியாத, பக்தன் மட்டுமே கேட்கும் படி வார்த்தைகளில் சொல்வது ஒரு முறை. இதனை ஆன்றோர்கள் ‘கேளாஒலி, அசரீரி’ என்றும் சொல்கின்றனர். மற்றும் இறைவனைத் தோன்றாத் துணைவன் என்றும் கூறுகின்றனர். அல்லது மனதின் மறுமுனை தெய்வமாக இருப்பதால், தன்னுடைய தூய்மையான, கடவுள் ஏக்கம் உள்ள அடிமனம் உரைப்பது கூட இறைவன் பேசுவதாகவேக் கொள்ள வேண்டும்.

ஒருவருக்கு, தெரிந்தவரோ, முன்பின் தெரியாதவரோ உரிய நேரத்தில், யாரேனும் உதவி செய்தால் இறை அவர் வடிவத்தில் வந்து உதவி செய்ததாகத்தானே பொருள். தெய்வம் அரூபமாகவும், அறிவாகவும் உள்ளது என்பதனை மறந்துவிட்டு, மனித வடிவத்தில் வந்து உதவி செய்தது தெய்வம் என்று நினைக்க மறந்துவிடுவது வழக்கம். உதவி செய்தவரும் தெய்வத்தின் அம்சம்தானே! அவருடைய அறிவும் தெய்வம் தானே! உதவி செய்ய வேண்டும் என்று அவருடைய அறிவு எண்ணியதால்தானே, அவரது உடல் உதவி செய்தது. தெய்வம் எல்லோருக்குள்ளும் அறிவாக உள்ளதால், உதவி செய்தவரின் அறிவாகவும் இருப்பதால், இறைவனே சாக்ஷாத் மனித வடிவில் வந்து உதவியிருக்கிறான்.

மீண்டும் குரு ஸ்லோகத்திற்குள் வருவோம். அறிவை அறிந்த ஒரு ஆன்மா மற்றொரு ஆன்மாவிற்கு, அவ்வறிவை அறிவதற்கான வழிகளைச் சொல்லும் போது, அறிவை அறிந்த அந்த ஆன்மா யாராக இருக்க முடியும்? வேதாத்திரிய சுத்த அத்வைத தத்துவத்தின்படி ‘எல்லாமே தெய்வம்’ என்கின்ற நியதியில், எல்லோருமே தெய்வம் என்கின்ற போது, தெய்வத்தையே சுட்டிக் காட்டும் ஆன்மா யாராக இருக்க முடியும்? சாக்சாத் அந்த ஆன்மா தெய்வமேதான். எனவே தெய்வமே குருவாக வருகிறார்; பேசுகிறார்; விளக்கம் அளிக்கிறார். இந்த புரிதல் ஏற்பட்டால்தான் குருவிற்கும், ஆன்மீக சாதகனுக்கும் இடையே நம்பிக்கையும், இணக்கமும் ஏற்படும். அப்போதுதான் குருவிற்கும் சாதகனுக்கும் இடையே நல்ல தொடர்பு(RAPPORT) இருக்கும். திருவள்ளுவர் அகத்தை ஐயமில்லாமல் உணா்ந்தவரை தெய்வமாகக்கொள்ள வேண்டும் என்கிறார். அகத்தை உணர்ந்த தெய்வம் யாராக இருக்க முடியும்? சாக்ஷாத் குருவேதான். ஆகவே குரு ஸ்லோகம் கூறுவது சரிதானே?

… தொடரும்