இணையதள சத்சங்கம் பற்றிய அறிமுகம்

வாழ்க மனித அறிவு                                       வளர்க மனித அறிவு

lotus FFC – 265 அ.வி. 265

08-11-2017-புதன்

அறிவுத்தேனீக்கள்

இணையதள சத்சங்கம் பற்றிய

அறிமுகம்

வணக்கம். வாழ்க வளமுடன். இயற்கையின் அருளால், உலக நல விருப்பத்தால், உங்கள் அனைவரின் நல்லெண்ண ஆதரவுடன் இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை சுமார் 6.74 இலட்சம் முறை பார்வையிடப்பட்டுள்ளது. வேதாத்திரி மகரிஷி அவர்கள், மற்றும் இறையை அறிந்து, ஒழுக்கம், கடமை, ஈகை என்னும் அறத்தை வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அத்துனை அறிஞர்களின் ஆசிகளுடனும் இந்த இணைய தளம் ஒரு சத்சங்க அமைப்பைப் பெற்றுள்ளது.

தொலை நோக்குப் பார்வை:

    உலக மக்கள் அனைவரும், ஒன்றே பலவாகிய ஒருமை தத்துவத்தையும் உலக சகோதரத்துவத்தையும் விளங்கிக்கொண்டு, ஆன்மசெழிப்புடன் எல்லா வளங்களும் பெற்று, தங்கள் பூர்வீகச் சொத்தான (hereditary wealth)அமைதியை அனுபவித்து, இன்புற்று வாழ, அறிவிற்குத் தெளிவினை ஏற்படுத்துதல்.

இணைய தள சத்சங்கத்தின் குறிக்கோள்:

1. இந்த இணையதளத்தை சத்சங்கமாகப் பயன்படுத்துதல்.

2. ஆன்மிகத்தின் மீது தவறாக கொண்டுள்ள வெறுப்பையும், அச்சத்தையும் நீக்கி ஆன்மிகத்தை வாழ்வியலாக்குதல்.

3. மனிதஅறிவின் சிந்தனையைத் தூண்டுதல்.

4. மனிதஅறிவை வளரச் செய்தல்.

5. மனிதஅறிவினை முதன்மைச் செல்வமாக்குதல்.

6. ஏற்கனவே மேற்கொண்டு வரும் ஆன்மிகப் பயிற்சிக்கு மேலும் வலிவு சேர்த்தல்.

7. ஆன்மிகப் பயிற்சியில் எல்லோருக்கும் ஏற்படும் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் வெற்றி பெறச் செய்தல்.

8. அத்வைத தத்துவத்தின் நுட்பங்களைத் (subtleties of Advaida Philosophy) தெரிவித்து, ஆன்ம தேடுதலையும், தாகத்தையும் (spiritual quest /spiritual thirst) அதிகப்படுத்துதல்.

9. சமுதாய நல அக்கறையை ஏற்படுத்துதல்.

10. மொத்தத்தில் மகரிஷி அவர்கள் கூறியபடி  அறிவை முழுமை அடையச் செய்து, தெளிந்த நல்லறிவைப் பெற்று  முக்தியடைதல்.

பூர்வீகச் சொத்து எது?

அமைதி ஒவ்வொருவரின் பூர்வீகச் சொத்து. ஆனால் அப்பூர்வீகச் சொத்தை அனுபவிக்க முடிகின்றதா? இல்லையே! இன்று தனி மனிதனிடத்தில், குடும்பத்தில், ஊரில், நாட்டில், மற்றும் உலகத்தில் அமைதி இல்லை. உத்திரவாதமில்லாத(insecured life) வாழ்க்கைதான் உலகில் நடந்து கொண்டிருக்கின்றது. சண்டை, சச்சரவு, போர், பிணக்கு, வறுமை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடிய குற்றங்கள் மலிந்து கிடக்கின்றன. இதற்கெல்லாம் காரணம், ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் உணர்வைத் தன்னுணர்வு போல் மதிப்பதில்லை. இந்த அவல நிலையை சமுதாயத்தில் மாற்றி அமைப்பதற்கு,

1) நான் எனது வாழ்நாளில், யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.

2) துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்”

என்கின்ற இரண்டொழுக்கப் பண்பாட்டினைச் (அன்பும், கருணையும்) சங்கல்பமாக(auto suggestion) அகத்தவப் பயிற்சியில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

அமைதி ஒவ்வொருவரின் பூர்வீகச் சொத்து. எவ்வாறெனில் இயற்கையின் ஆதிநிலை அமைதியானது. ஆதிநிலைதான் இப்பிரபஞ்சம் மற்றும் மனிதன் உள்பட எல்லா உயிரினங்களுக்கும் மூலநிலை. ஆவே மனிதனின் பூர்வீகம் அமைதியான இயற்கையின் ஆதிநிலை. எனவே அமைதி மனிதனின் பூர்வீகச் சொத்தாகின்றது(hereditary wealth). தங்கள் பூர்வீகச் சொத்தான அமைதியை அனுபவிக்க, ஒவ்வொருவரும் ஆன்மாவை உள்ளுணர்வாக உணர்ந்து கொள்ள வேண்டும். இரண்டொழுக்கப்பழக்கம் நிலவினால்தான் பூர்வீகச்சொத்தினை சமுதயாம் அனுபவிக்க முடியும்.

தத்துவஞானி டாக்டர் இராதாகிருஷ்ணன் கூறுவது …….

இங்கே முன்னாள் இந்திய ஜனாதிபதியும் தத்துவஞானியுமான டாக்டர் இராதாகிருஷ்ணன் “பரிணாமம் இன்னும் பூர்த்தியாகவில்லை– Evolution is still incomplete” என்று கூறுவதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மனிதஇனப் பரிணாமம் உருவத்தில் பூர்த்தியாகிவிட்டது. ஆனால் பரிணாமம் மனிததரத்தில் இன்னமும் பூர்த்தியாகவில்லை என்தனை ஆதங்கத்தோடு கூறுகிறார்

அன்பையும் கருணையையும் வெளிப்படுத்தும் வகையில் மனித நேயம் மலரவில்லை. மனித நேயம் மலர மனிதன், வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் “உயிரறிவை  உள்ளுணர்வாக” ப்  பெறவேண்டும். இல்லாவிடில், மனிதகுலம் விலங்கினத்திலிருந்து தோன்றியுள்ளதால், விலங்கினப் பண்பு செயலிழக்காமல் மீண்டும் மீண்டும், செயலுக்கு வந்து வந்து மனித நேயம் முழுவதுமாக வெளிப்படாத நிலை ஏற்பட்டு விடும்.

இயற்கையின் எதார்த்தம்:

பெரியவர்கள் வாழ்த்தும் போது ‘செழிப்புற்று வாழ்(prosperous new year, prosperous wedded life)’ என வாழ்த்துகின்றனர். செழிப்பு என்பது எதனைக் குறிக்கின்றது? உலகில் வாழப் பிறந்தாகிவிட்டது. ஆனால் உலகில் வாழ்வது தற்காலிகத் தங்குதல்தான்(Temporary stay). மரணம் காத்துக் கொண்டிருக்கின்றது. இது எதிர்மறைச் சிந்தனையல்ல (not a negative thought). இதுதான் இயற்கையின் எதார்த்தம். உடல் அழிந்து விடக்கூடியது. ஆனால் ஆன்மா அழியாதது. உடல் வாழ்வதில்லை. உடலிலுள்ள உயிர்தான் வாழ்கின்றது. ஆகவே “செழிப்புடன் வாழ்” என்றால் உயிர் (ஆன்மா) செழிப்புடன் வாழ வேண்டும் என்றுதான் பொருள்.

மனிதன் வாழ்வது என்பது ஆன்மா செழிப்புற்று வாழ்வதைத்தான் குறிக்கின்றது. ஆன்மா எந்த அளவிற்கு தூய்மையாக இருக்கின்றதோ அந்த அளவிற்குத்தான் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். அதாவது வாழ்க்கை என்பது ஒன்றுதான். உலகியல் மற்றும் ஆன்மிகம் என இரண்டு தனித்தனியாகக் கிடையாது. உலகியல் மற்றும் ஆன்மிகம் ஒன்றோடொன்று பிணைந்த(inter-woven), வாழ்க்கைதான் மனிதவாழ்க்கை(man’s life). வாழ்க்கைத் தூய்மையற்று இருக்குமளவிற்குத் துன்பங்கள் இருக்கும். ஆன்மா செழிப்புற்று வாழ ஆன்மாவைத் தூய்மைப் படுத்த வேண்டும். காரணம் மனிதன் விலங்கினத்திலிருந்து வந்ததால், விலங்கினக் குணங்கள்(பண்பு) மனிதனின் தன்மையாக உள்ளன. விலங்கினப் பண்பைப் போக்குவதுதான் ஆன்மாவைத் தூய்மைப் படுத்துவது என்பது. இந்த ஆன்ம தூய்மைக்குத்தான் மனிதன் பிறந்திருக்கிறான்.

ஆன்மாவிற்கு குறைந்த பட்ச உணவாவது வேண்டாமா?

அழியக்கூடிய உடலுக்கு மட்டுமே உணவையும், விருந்தையும் கொடுத்துக் கொண்டு, அழியாத உயிருக்கு/ஆன்மாவிற்கு, விருந்து இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் உணவுகூட அளிப்பதில்லை மனிதன். ஆன்மா ஒன்று உள்ளதே என்கின்ற கவலையும் கிடையாது. முன்வினைப்பயனை அனுபவிக்க, ஆன்மாவால்தான் (உயிரால்தான்) உடல் வந்தது. “வினைப் பயனே தேகம் கண்டாய்” என்கிறார் அறிவை அறிந்த பட்டிணத்தார் சுவாமிகள். வினைப் பயனால்தான் ஆன்மா உடல் எடுத்தது. ‘மனிதன் வாழ்கிறான்’ என்று சொல்வதைவிட ‘வினை வாழ்கின்றது’ என்று சொல்வதுதான் பொருத்துமாக இருக்கும். அதாவது அவன் ஆன்மாதான் வாழ்கின்றது. முன்வினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டிய வழிகளை ஆராய்ந்து அதற்குரிய பயிற்சிகளை முறையாகத் தகுந்த வழிகாட்டியுடன்(அறிவை அறிந்த அறிவினர்-குரு) செய்து வெற்றி பெற்று, ஆன்மா தனது பூர்வீகச் சொத்தான அமைதியை அனுபவிக்க வேண்டும். இதைத்தான் ஆன்மா செழிப்புற்று வாழ்கின்று என்று நாம் கருதுவது. ஆகவே மனித ஆன்மா செழிப்புற்று வாழ்வதற்கு:

1) நல்ல உடல் நலம்,

2) நீண்ட ஆயுள், 3) நிறைந்த செல்வம், 4) தன்னலமற்றத் தொண்டு செய்வதால் வருகின்ற உயர்புகழ், 5) இறைஞானம்(இயற்கையைப் பற்றிய தெளிந்த அறிவு)ஆகிய வளங்கள் தேவையாக உள்ளன.

ஆன்ம வளம் என்பது, அன்றாடம் உயிர் பிழைத்து வாழ்வதற்கு வேண்டிய உலகியல் வாழ்க்கைக்கும் (temporary stay on earth) அழியாத ஆன்மா வாழ்வதற்கும் வேண்டிய எல்லாவளங்களையும் உள்ளடக்கியதுதான்.

உலகியல் வாழ்க்கை ஆன்மிக வாழ்க்கை என இரண்டு தனித்தனியாகக் கிடையாது. விரும்புபவா்கள் ஆன்மிக வாழ்க்கை வாழலாம். விரும்பாதவர்கள் ஆன்மிக வாழ்க்கையை கைவிட்டுவிடலாம் என்பதல்ல. இரண்டும் ஒன்று சோ்ந்ததுதான் வாழ்க்கை. உலகியல் வாழ்க்கை, ஆன்மிக வாழ்க்கை இரண்டும் சோ்ந்ததை “வாழ்வியல்” (Science of Living)என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.

வாழ்வியல் கல்வி அல்லது ஒழுக்கவியல் கல்வி:

மனிதன் வாழத் தெரிந்து வாழ வேண்டியிருப்பதால் எவ்வாறு வாழ வேண்டும் என்கின்ற வாழ்க்கை முறையை இயலாக்கிய, வாழ்வியல் கல்வி அல்லது ஒழுக்கவியல் பாடம் பள்ளியிலிருந்தே ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும். பல தலைமுறைகளாகக் கருத்தொடராக சீர்கெட்டுப்போன ஒழுக்கத்தைப் பழக்கமாக்கிட, பன்னிரண்டு வருடங்கள் நடத்தப்பட வேண்டிய பாடங்களுக்கான கருத்தியல் மற்றும் செய்முறை பாடத்திட்டங்கள்(syllabus) உள்ளன. “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” மற்றும் “தொட்டில் பழக்கம் சுடுகாடுமட்டும்” என்கின்ற பழமொழிகள் எதனைத் தெரிவிக்கின்றன என்பது யாவருக்கும் தெரிந்ததே. ஆகவே நற்பழக்கங்களை சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு கல்வியுடன் கட்டாயப் பாடமாகக் கற்றுக் கொடுக்கப்படவேண்டும். அப்போதுதான், “ EDUCATION IS THE MANIFESTATION OF PERFECTION ALREADY PRESENT IN MAN” என்று ஸ்வாமி விவேகானந்தர் கூறியுள்ள கல்வியினைக் கொண்டுவர முடியும்.

இணையதள ஆங்கிலப் பெயரின் பொருள்:

வாழ்வது ஆன்மா. அப்படி இருக்கும்போது ஆன்மா செழிப்புறுவதற்கு, வளம் சோ்க்காமல் இருப்பது தான் இன்றைய தனிமனித துன்பத்திற்கும் சமுதாயத் துன்பத்திற்கும் காரணம். ஆன்மாதான் (மனிதன்) வாழ்கின்றது. எனவே மனிதன் ஆன்ம வாழ்வு வாழவேண்டும். இதனைக் கருத்தில் கொண்டுதான், ஆன்மா செழிப்புற, ‘Prosper Spiritually’ என்கின்ற இந்த இணையதள-சத்சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, இணையதள ஆங்கிலப் பெயரின் தமிழாக்கம் “ஆன்மசெழிப்புறு’ என்பதாகும்.

ஆன்மாவை உணரும் ஆன்மிகத்திற்கு முறையான பயிற்சி தேவை. பயிற்சி மட்டுமல்லாது பயிற்சிக்கு வலிவு சேர்க்கக் கூடிய சத்துள்ள சத்சங்கம் அமைத்துக் கொள்ள வேண்டும். அல்லது சத்சங்கத்தில் சோ்ந்து கொள்ள வேண்டும்.

இயற்கையின் இனிமையைக் கெடுக்காமல் (without disturbing Natural Rhythm) வாழ்வதற்கு, இயற்கையிலுள்ள வழிவகைகளை ஆராய்ந்து அவ்வழி நடப்பதற்கான ஆலோசனைகளை அன்பர்களுடன் அன்றன்று பகிர்ந்து மகிழவே, இயற்கை கருணையோடு ஏற்படுத்தியதுதான் இந்த இணையதள சத்சங்கம்(Satsangh through Web Site).

திருவள்ளுவரும் ஆதிசங்கரரும்:

இந்த இணைய தளம், ஆதிசங்கரர் கூறும் சத்சங்கத்தின் பயன்பாட்டினைக் கொண்டதாக இருக்கும். சத்சங்கம் என்பது சத்(இறை) என்கின்ற உண்மையை அறியும் நோக்கத்திற்காக ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்திக் கொள்கின்ற சத்துள்ள ஓர் உன்னத அமைப்பு.

ஆதி சங்கரர் பஜகோவிந்தத்தில் ஒன்பதாவது ஸ்லோகத்தில் சத்சங்கத்தைப்பற்றிக் கூறுவதைப் பார்ப்போம்.

“ஸத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்.

நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம் I நிர்மோஹத்வே நிஸ்சலதத்வம் நிஸ்சலதத்வே ஜீவன் முக்தி: II …… என்று சத்சங்கத்தின் அா்த்தத்தையும், அவசியத்தையும், பயனையும் அறிவுறுத்துகிறார் ஆதிசங்கரர். இதன் பொருள்: —

1) திருவள்ளுவர் 349* மற்றும் 350* ஆம் குறளில் மொழிந்துள்ளது போல் நல்லோர்களுடன் சோ்ந்திருப்பதால், நீக்க வேண்டியத் தேவையற்ற பற்று நீங்கி பற்றில்லா பற்றாக (undue attachment becomes detached attachment) மாறும். அதாவது தாமரை இலை தண்ணீரிலேயே இருந்தாலும் தாமரை இலை தன் மீது நீரை ஒட்டச் செய்வதில்லையோ அது போன்று உலகியல் வாழ்க்கை நடத்த முடியும்.

* பற்றற்றே கண்ணே பிறப்புஅறுக்கும், மற்று

நிலையாமை காணப்படும். …… குறள் எண் 349

* பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு ……. குறள் எண் 350 2)

திருக்குறள் எண் 355* மற்றும் 423* ன்படி தேவையற்ற பற்று நீங்கினால் மாயையிலிருந்து விடுபடலாம். பொய்யை மெய் என நம்பிக்கொண்டிருத்தல் மாயையாகும்.

* எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

 மெய்ப்பொருள் காண்பது அறிவு. ….. குறள் எண் 355

* எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்

அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. ….. குறள் எண் 423

3) மாயையிலிருந்து விடுபட்டால் விடுதலை(liberation) ஏற்படும். விடுதலை வேண்டாமா? விடுதலை இல்லை என்றால் தன்வாழ்நாள் முழுவதும் ஆயுட்கால கைதியாகவே வாழ்ந்து விட்டு போக வேண்டியதுதானா?

4) விடுதலை கிட்டினால் என்றும் மாறாத உண்மை(மெய்ப் பொருள் –The Truth) விளங்கும். என்றும் மாறாத உண்மையை உணரும்போது நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் அறிவு முழுமை – ஜீவன் முக்தி ஏற்படும். இவ்வளவு பயன்களையும் ஆன்மிகப் பயிற்சியால் பெற வேண்டும்.  ஏற்கனவே, ஆன்மீகப் பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்னர் வாழத் தெரியாமல் வேறு ஏதேதோ முறையில் வாழ்ந்து விட்டோம். இப்போது ஆன்மிகப் பயிற்சியைத் தொடங்கிய பிறகு வாழத்தெரிந்து வாழ ஆரம்பித்துள்ளோம்.

தரமாற்றம் ஏற்படவிருக்கின்ற இடைவெளி(transitory period):

முன்பு வாழ்ந்ததற்கும் இப்போது வாழ்வதற்கும் வித்தியாசம் உள்ளது. இது ஒரு தரம் மாற்றம் ஏற்படுத்தும் இடைவெளி (transitory period).  எனவே இந்த இடைவெளிக்காலத்தில், பயிற்சியில் சலிப்பும், தொய்வும் ஏற்படலாம். ஆகவே, ஆன்மீகப் பயிற்சியாளர்கள் சலிப்பும், தொய்வும்; பயிற்சியில் ஏற்படாதவாறு மேலும் மேலும் ஆர்வத்தை ஆர்வத்துடன் ஏற்படுத்திக் கொண்டே (ardent desire) இடைவிடாது, ஆன்மீக பயணமாகிய வாழ்க்கையில் அன்றன்று வெற்றி பெற்று முடிவில் அப்பேரின்பத்தை அடைந்துவிட வேண்டும் என்பதே இந்த இணையதள–சத்சங்கத்தின் (Satsangh through Website) நோக்கமாகும்.

இனியது எது?

பொதுவாக மனிதன் இன்பம் அனுபவிப்பது ஐந்து புலன்களின் வழியாக. அந்த இன்பத்தை அதிகமாக நுகரவேண்டும் என்பது பெரும்பாலும் மனிதனின் விருப்பமாக இருக்கும். ஆனால் இன்பமே துன்பமாக மாறும் திருவேதாத்திரியத்தின் கண்டுபிடிப்பினை அறிந்தானில்லை. புலன்கள் இல்லாமல் இன்பத்தை அதிகமாக அதாவது பேரின்பத்தை அனுபவிப்பது பற்றி அவ்வைத்தாய் மொழிவதனை அறிவோம். இங்கே அவ்வைத்தாய் இனியவைப் பற்றிக் கூறுவதைக் கூர்ந்து நோக்க வேண்டும்.

இனியது எது?

“இனிது! இனிது! ஏகாந்தம் இனிது!

அதனினும் இனிது! ஆதியைத் தொழுதல்.

அதனினும் இனிது! அறிவினர்ச் சேர்தல்

அதனினும் இனிது! அறிவுள்ளோரைக்

கனவிலும் நனவிலும் காண்பது தானே!”  என்கிறார் அவ்வைத்தாய்.

ஆகவே ஆன்மா விழிப்புற்று வாழ்வதற்கு, அதற்கான பயிற்சிகளைச் செய்வதோடு அறிவினருடன் சேர்ந்திருத்தலும், அவரைக் கனவிலும் நனவிலும் காணவேண்டும் என்கிறார் அவ்வையார்.

அறிவினருடன் சேர்ந்திருத்தலும் அவரைக் கனவிலும் காண்பதுதான் சத்சங்கம்.

சத்சங்கம் ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பில்லாத போது அறிவினரின் அறநூல்களின் வாயிலாக அறிவினருடன் மானசீகமாக சத்சங்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

அப்படியும் வாய்ப்பில்லை என்றால் தனக்குத் தானே சத்சங்கம் நடத்திக் கொள்ளலாம். அதுதான் சுயசிந்தனை. இதற்குப் பழகவேண்டும். சுயசிந்தனையைப் பயில இந்த இணையதள–சத்சங்கம் பெரும் அளவில் உதவியாக இருக்கும்.

Must be read in between lines:

அறிஞர்களின் அறிவுரைகள் செய்யுட்களாகவும் உரைகளாகவும் உள்ளன. அதனைப் படிக்கும்போது வார்த்தைகளுக்கு இடையே மறைந்துள்ள பொருளையும் சேர்த்து விளங்கிக் கொள்ள வேண்டும் (must be read in between lines). ஆன்மிகத்திலிலுள்ள நுண்ணியக் கருத்துக்களை( subtleties of spirituality) வெளிக் கொண்டு வர இந்த இணைய தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மனிதன் தன்னுடைய எண்ணங்களை சக மனிதருடன் பரிமாறிக் கொள்வதில் இன்பம் காண்பவன். இப்படியாகத்தான் பல கலைகள் வளர்ந்துள்ளன. அவ்வாறு எண்ணங்களைப் பரிமாறிக்கொள்வது என்பது, நேரிடையாக உரைகள் (speeches) நிகழ்த்துவது, நூல்கள் எழுதுவது, தொலைபேசி, மின் அஞ்சல், இணைய தளம் முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட குறுந்தகவல்கள் மற்றும் கட்செவிஅஞ்சல் ஆகிய சாதனங்கள் வாயிலாக சாத்தியமாகிறது.

இந்த பரபரப்பான உலகில் எங்கிருந்தாலும் ஒருவருக்கொருவர் தகவல்கள் உடனுக்குடன் பரிமாறிக் கொள்ளும் சாதனம் வலைதளமாக இருப்பதால், இந்த ‘Prosper Spiritually’ (தமிழில்–ஆன்மசெழிப்புறு) என்கின்ற இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தோசையைச் சுடச்சுட பரிமாறுவது போல், அன்றன்று இயற்கை அறிவிற்கு நல்கும் அரிய சிந்தனைகளை அன்றன்றே அன்பர்களின் அறிவுப்பசிக்கு(Quest for truth – the consciousness) அவ்வப்போதே விருந்தாகப் பரிமாறுவதற்கே இந்த ‘Prosper Spiritually- ஆன்மசெழிப்புறு இணையதள–சத்சங்கம்.

மற்ற ஊடகங்களில்….

ஏற்கனவே வானொலியில் குறளமுதம், சான்றோர் சிந்தனை ஆகிய நிகழ்ச்சிகள், காலையில், மற்ற நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும் முன்னரே ஒலிபரப்பப்படுகின்றது.

ஆனால் ஒரு சில நிமிட நேரம்தான் ஒலி பரப்பப்படும்.

ஒலி பரப்பப்படும் நேரத்தில் கேட்டால்தான் கேட்க முடியும். மீண்டும் கேட்க முடியாது.

அந்த நேரத்தில் கேட்டு மனதில் இருத்திக் கொண்டு அன்று முழுவதும் அசை(assimilation) போடவேண்டும்.

ஒரு சில வார்த்தைகள் நினைவிற்கு வராமல் போனாலும் போகும்.

நினைவிற்கு வரவில்லை என்றால் எவ்வாறு சிந்தனை விருந்தை அசைபோடுவது?

வேண்டுமென்றால் ஒலி நாடாவில் பதிவு செய்து மீண்டும் கேட்க வேண்டும். இது சிரமமான காரியம்.

வானொலியில் ஒலி பரப்பப்படுவது போல் தொலைக்காட்சியிலும் அறிவுக்கு விருந்தாகும் நிகழ்ச்சிகள் ஒளி பரப்பப்படுகின்றன. அதுவும் குறுகிய நேரம்தான் இருக்கும் ஆனால் இணைய தளத்தில் அவ்வாறு இல்லை. ஒரு முறை அல்ல, நீங்கள் விரும்பியபடி பல முறை படித்தே மகிழலாம். மீண்டும் நினைவு படுத்திக் கொள்வதற்கு எழுத்து வடிவில் சில நாட்கள் இருக்கும். அதனால் இணைய தளத்தில் பகிர்ந்து கொள்பவைகள் மீண்டும் மீண்டும் படித்து பயன் பெற ஏதுவாக இருக்கும்.

வானொலியிலும், தொலைக்காட்சியிலும் அறிவுக்கு விருந்தாகும் நிகழ்ச்சிகள் வைத்துள்ளதற்கான காரணம் காலை வேளையில், நீங்கள், உங்கள் வழக்கம் போல் மேற்கொள்ளும் இறைவணக்கத்துடன், ‘சான்றோர் சிந்தனை’ நிகழ்ச்சியைக் கவனித்து வந்தால் அன்று முழுவதும் எங்கெங்கு சென்றாலும் எந்த தொழிலில் ஈடுபட்டாலும் இறை விழிப்புடனும்(Godly awareness), புத்துணர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கமுடியும்.

வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!! வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!

வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!

வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!

வாழ்க உலக நல நாட்டம்! வளர்க உலக நல நாட்டம்!!

வாழ்க உலக மக்கள் நலமும் வளமும் பெற்று!

வாழ்க உலக அமைதி! வருக உலக அமைதி விரைவில்!!

“நீங்களும், உங்கள் அன்புக் குடும்பமும் நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், உயர்ந்த புகழ், மெய்ஞ்ஞானத் தெளிவு ஓங்கி வாழ இயற்கையின் ஆதிநிலையான இறைநிலை நின்று வாழ்த்தப்படுகின்றது.

“Prosper Spiritually”

—————————————————————————————————————————————————————– வாழ்க வளமுடன்!

வருகின்ற 12-11-2017 ஞாயிறன்று அறிவிற்கு விருந்து நிகழ்வில் ‘செயல்விளைவுத் தத்துவமும், கருமையமும்’ என்கின்ற தலைப்பில் சிந்திக்க சத்சங்கத்தில் கூடுவோம்.

வாழ்க வளமுடன்