ஆன்ம அலங்காரம் 3/3

ஆன்ம அலங்காரம் 3/3

வாழ்க மனித அறிவு                                                                  வளர்க மனித அறிவு

நாள் – 10-11-2014

ஆன்ம அலங்காரத்தை செயலுக்கு கொண்டு வரும் போது அலங்காரத்தின் நோக்கமான மகிழ்ச்சி வாழ்வில் நிறைவேறும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது ஆன்றோர் மொழி. அகத்தின் அழகு என்பது எதனைக் குறிக்கின்றது. அகம் என்றோலோ உள்ளே இருப்பது என்று பொருள். உள்ளே இருப்பதை எதனைக் குறிக்கின்றது? ஆன்மாவைத்தான் குறிக்கின்றது. ஆன்ம தூய்மைக்கு ஏற்பத்தான் உள்ளமும் இருக்கும் அந்த உள்ளத்தின் அழகு எப்படியோ அதுபோல்தான் முகமும். அதனால்தான், யாருடைய குழந்தையாக இருந்தாலும் எல்லோருக்கும் பிடிக்கின்றது. குழந்தையின் உள்ளம் களங்கமில்லாதது. எனவே அந்த அழகு முகத்தில் தெரிகின்றது.

ஆன்ம அலங்காரம் என்பது ஆன்மாவைத் தூய்மைப் படுத்துவதாகும். கோயிலில் கடவுள் சிலைக்குக்குச் செய்யும் அலங்காரம்கூட மறுநாள் கலைக்கப்பட்டுவிடும். ஆனால் ஆன்மா அலங்காரத்தில் ஒவ்வொரு நாளும் செய்யப்படும் அலங்காரம் கலையாமல் மேலும் மேலும் ஆன்மாவிற்கு அழகைக் கூட்டிக் கொண்டே இருக்கும். ஆன்மா தூய்மை அடைந்து கொண்டே இருக்கும்.

ஆன்ம அலங்காரம் என்பது ஏற்கனவே பதிந்துள்ள பாவப்பதிவுகள் செயலற்றுப் போக, பாவப்பதிவுகளைப் போக்கும் வழிகளான பிராயச்சித்தம், மேல்பதிவு செய்தல், பாவப்பதிவுகளை முறிவு அல்லது சமன் செய்தல் ஆகியவற்றின் மூலம் ஆன்மாவைத் தூய்மைப் படுத்தி அலங்கரிக்க முடியும். ஆன்ம அலங்காரமே தான் ஆன்மதூய்மை, மனத்தூய்மை என்பது. அப்படி இருக்க ஏன் புதிதாக ஆன்ம அலங்காரம் என்கின்ற சொற்றொடரைச் சேர்க்க வேண்டும்.

மெய்ஞானமும் விஞ்ஞானமும் இன்னும் முழுமையாக இணைக்கப்படவில்லை. விஞ்ஞானத்தில் மறை பொருள் இல்லை. ஆதலால் ஒன்றைப் பற்றித் தெரிவிக்க போதிய மொழி வளம் இருக்கின்றது. ஆனால் மெய்ஞானத்தில் ஒன்றைப் பற்றித் தெரிவிப்பது என்பது அவரது சொந்த அனுபவத்தைக் கொண்டுதான் சொல்ல வேண்டியுள்ளது. அப்போது தன் அனுபவத்தை பிறருக்குத் தெரிவிக்க உவமையுடன் தெரிவிக்க வேண்டியுள்ளது. சரியான சொற்களையும் பயன்படுத்த வேண்டியிருக்கின்றது. அப்போது மொழிவளம் தேவைப் படுகின்றது.

ஒரு மொழிக்கு புதிய புதிய சொற்களையோ அல்லது சொற்றொடர்களையோ உருவாக்கித் தரும் போது அந்த மொழியின் வளம் அதிகமாகும். அந்த வகையில் தமிழ் மொழிக்கு, குறிப்பாக ஆன்மீகத் தமிழில் மறை பொருட்களைப் பற்றியப் புரிதலை தெளிவாக ஏற்படுத்துவதற்கு, கருமையம், உயிரறிவு, காந்தத் தன்மாற்றம் தன்னிருக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல், சீவகாந்தம், தெய்வீக நீதி மன்றம், உயிரின் படர்க்கை நிலை போன்ற சொற்களையும், சொற்றொடா்களையும் வேதாத்திரியம் தந்துள்ளது.

இறை உணர் ஆன்மீகத்தில் மறைபொருள் கருத்துக்களைத் தெளிவாகத் தெரிவிக்க புதிய புதிய சொற்கள் தேவைப்படுகின்றன. (That is to say, more vocabulary is needed in spiritual language ) அந்த வகையிலே ஆன்ம அலங்காரம் என்கின்ற சொற்றொடரைச் சேர்த்துக் கொள்வோம்.

இச்சமுதாயத்தில் வறண்டு போன அறனை வலியுறுத்த வந்த, பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவதரித்த வேதாத்திரி மகரிஷியின் மனாசீக குருவான முதல் நூற்றாண்டில் அவதரித்த திருவள்ளுவர் கூறும்

”மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்து அறன்;
ஆகுல நீர பிற.”
என்கின்ற மனத்தூய்மையைப் பெற ஆன்மாவை அலங்காரம் செய்து அழகு பார்ப்போம்.    இத்துடன் ஆன்ம அலங்காரம் முற்றும்.

வாழ்க மனித அறிவு,  வளர்க மனித அறிவு.
வாழ்க அறிவுச் செல்வம். வளா்க அறிவுச் செல்வம்.

* * * *

வாழ்க அறிவுச் செல்வம்                                                      வளா்க அறிவுச் செல்வம்