ஆன்ம அலங்காரம் 2/3

ஆன்ம அலங்காரம் 2/3

வாழ்க மனித அறிவு                                                                          வளர்க மனித அறிவு

                      நாள் – 09-11-2014                              

     ஆன்மாவைப் பற்றி அறிந்து கொள்வோம். ஒருவரைப் பற்றி எடுத்துரைக்கும்போது ’அவர் நல்ல மனிதர்’ என்று சொல்வோம். இன்னும் அவரது நற்குணங்களை உண்மையாகப் போற்றிச் சொல்வதற்கு ’அவர் ஒரு நல்ல ஆத்மா/ஆன்மா’ என்பது வழக்கம். இக்கூற்றில் முதலாவதாக ”அவர் ஆன்மா” என்கின்ற ஒன்று உறுதி படுத்தப்படுகின்றது. அவரை நல்ல மனிதர் என்பதனை எதை வைத்துச் சொல்கிறோம்? அவரது நற்குணங்கள் மற்றும் பண்புகளை வைத்து அவரை நல்ல மனிதர் என்கிறோம். அவரது நற்குணங்கள் அவரது ஆன்மாவில் பதிந்து அவரது ஆன்மாவை அலங்கரித்திருக்கின்றது. அந்த ஆன்ம அலங்காரத்தால்தான், அழகின் இலக்கணமான, மனிதனுக்கேற்ற குணங்கள், மனிதனுக்குத் தகுதியானத் தன்மை, மற்றும் ஒழுக்க முறை ஆகியவைகள் அவரிடமிருந்து வெளிப்படுவதால் அவருடைய ஆன்மா அழகுருகின்றது. எனவேதான் அந்த நல்லவரை நல்ல ஆத்மா/ஆன்மா என்கிறோம்.

    ஆத்மா/ஆன்மா என்பது என்ன? இதற்கு முதலில் உயிர் என்பது என்ன என்று அறிந்து கெள்ள வேண்டும். உயிரை இதுவரை யாரும் பார்த்ததில்லை. ஆனால் உயிரை உணர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இறைஉணர் அல்லது ஆன்ம உணர் ஆன்மீகத்தில், உயிர் மேல் மனம் வைத்து அகத்தவ வழிபாட்டை மேற்கொள்பவா்கள் உயிரை உணர்ந்திருக்கிறார்கள். ஆன்மாவை அறியமுடியாத ஆன்மிகம் ஆன்மிகமாகுமா? வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆன்மிகத்தின் நோக்கம், மனிதன் உயிரறிவைப் பெறுதலேயாகும். அதாவது ஆன்மாவைத் தெரிந்து கொள்ளுதலாகும். உயிரின் மூலம், அதன்நிலை, உயிரின் முடிவு, அதன் முக்கியத்துவம் ஆகியவைகளைத் தெரிந்து கொள்வது உயிரறிவாகும். ஆன்மாவிற்கும் உயிருக்கும் தொடர்பு ஏதேனும் உள்ளதா என்றால் உள்ளது என்பதுதான் பதில்.

    உயிர் என்றாலே கண்களுக்குத் தெரியாத ஒன்று. கண்களால் பார்க்க முடியாத நுண்ணிய பொருள்தான் உயிர். உயிர் அணுதரிசினியாலும்(microscope) பார்க்க முடியாது, உயிரை எவ்வாறு ஆற்றல் என்று சொல்ல முடியும்? உடல் ஒர் இயந்திரம். பொதுவாக எந்த இயந்திரமும் இயங்குவதற்கு ஆற்றல் தேவையிருப்பது போல் உடலாகிய இயந்திரம் இயங்குவதற்கும் ஆற்றல் தேவை. அந்த காந்த ஆற்றலைக் கொடுப்பது உயிர்தான்.

    எவ்வாறு உயிர் காந்த ஆற்றலைத் தருகின்றது. எவ்வாறு என்பதனை பிரிதொரு சமயத்தில் பார்ப்போம். அந்த காந்த ஆற்றல் சீவனுடைய  உடலில் இருப்பதால் சீவகாந்தம் எனப்படுகின்றது. சீவ காந்த ஆற்றல் தான் உடலியக்கத்திற்கு ஆற்றலாகச் செலவழிக்கப்படுகின்றது.  இரத்தம் உடல் முழுவதும் ஓடிக்கொண்டிருந்தாலும் அதற்கு இதயம் மையமாக இருப்பது போன்று, சீவகாந்தம் உடல் முழுவதும் ஓடிக்கொண்டிருந்தாலும் அது ஒரு மையத்தைக் கொண்டிருக்கும். அங்கு சீவ காந்தம் அடர்த்தியாக இருக்கும். அந்த அடர்த்தி பெற்ற சீவகாந்தம் தான் ஆன்மா என்பது.   இதன் சிறப்பபைப் பார்ப்போம்.

     இப்பிரபஞ்சத்தில் அலை இயக்கம் நடந்து கொண்டே இருக்கின்றது. இயற்கையின் திறன்களில் பதிதல்(recording) என்னும் நிகழ்வு மிகவும் சிறப்பானது. இந்த பதிதல் திறன் மட்டும் இல்லாதிருந்தால் உயரினப் பரிணாமமே ஏற்பட்டிருக்காது. ஒன்றிலிருந்து தரம் மாற்றம் ஏற்படுவதே இந்த பதிதல் நிகழ்ச்சியால்தான். இதனைப்பற்றி வேறொரு சமயத்தில் சிந்திப்போம். பதிதலுக்கு ஒர் ஊடகம்(medium) தேவை. அந்த ஊடகம் தான் காந்தம். இயற்கையாக நடக்கும் பதிதல் நிகழ்ச்சிக்கும் சரி அல்லது மனிதனால் செயற்கையாக நடக்கின்ற பதிதல் நிகழ்ச்சிக்கும் சரி காந்தம் தான் ஊடகமாக இருக்கின்றது. உதாரணத்திற்கு, ஒலி-ஒளி நாடாவில்(video tape) பிளாஸ்டிக் நாடாவில் காந்தப் பூச்சு (magnetic coating) தான் உள்ளது. இப்பிரபஞ்சத்தில் எது நடந்தாலும் பதிதல் இல்லாமல் இல்லை.

   ஆகவே இயற்கை மனிதனில் நடக்கும் எண்ணம், சொல். செயல் ஆகிய முத்தொழிலையும் பதிவு செய்யும் ஒரு மறை காந்த குறுந்தகடுதான் இந்த ஆன்மா. அது என்ன மறை காந்த குறுந்ததகடு? அது கண்களுக்குப் புலப்படாது மறைந்துள்ளதால் அதற்கு மறை என்கின்ற அடைமொழி சேர்க்கப்பட்டுள்ளது. மனிதன் பதிவு செய்யும் குறுந்தகட்டில் உள்ளதை அவன் விரும்பும் போது அதனை அதற்குரிய சாதனத்தின்(deck) வழியாக பதிவு செய்ததை பார்க்கலாம் அல்லது கேட்கலாம்.

   ஆன்மாவாகிய மறை குறுந்தகட்டில் உள்ள பதிவுகள் அவ்வப்போது எண்ணங்களாகவும் வருகின்றன. அதே சமயத்தில் செயல்விளைவு விஞ்ஞானத்தின் படி ஆன்ம — குறுந்தகட்டில் உள்ள பதிவுகளின் படி, எங்கும் பேரறிவு இருப்பதால் அவ்வப்போது விளைவுகளையும் கொடுக்கும். பதிவுகளின் தன்மை மற்றும் தரத்தைப் பொருத்து விளைவுகள் நல்லதாகவும் இருக்கலாம். அல்லது தீயதாகவும் இருக்கலாம். இந்த ஆன்ம – குறுந்தகட்டில் உள்ள பதிவுகள் தான் தன்னுடைய வம்சாவளி ஆன்ம – குறுந்தகட்டிலும் பதிகின்றது. ஆகவே நல்வாழ்வு வாழ்வதற்கு ஆன்மதூய்மை அவசியமாகின்றது. ஆகவேதான் வம்சாவளியின் ஆன்மா பெற்றோர்களின் செராக்ஸ் நகல் எனப்படுகின்றது. அதாவது குழந்தைகள், பெற்றோர்களின் செராக்ஸ் நகல் என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    இந்த ஆன்மாவின் விளக்கத்தை வைத்து ஓரளவிற்கு ஆன்மா அலங்காரம் என்பது என்ன என்று யூகிக்க முடிகின்றதல்லவா? ஆன்ம அலங்காரம் என்பது ஆன்ம தூய்மை என்கின்ற சொற்றொடராலும் அழைக்கப்படுகின்றது என்பது தெரிய வருகின்றது. அப்படி இருக்கும் போது ஆன்ம தூய்மையை ஏன் ஆன்ம அலங்காரம் என்கின்ற சொற்றொடரால் அழைக்க வேண்டும். தூய்மை என்பது சாதாரணமாக எல்லோருக்கும்              தெரிந்த ஒன்று. . ஆனால் அலங்காரம் என்கின்ற சொல் சிறப்பையும், முக்கியத்துவத்தையும் தெரிவிக்கின்றது. இது ஒரு catchy phrase.   இந்த சொற்றொடர் ஆரம்பத்திலேயே, அதாவது கேட்பதற்கே இதமாக உள்ளது. அதாவது அச் சொற்றொடரே அலங்காரச் சொற்றொடராக உள்ளது.

                                                                    சிந்தனையை நாளைத் தொடர்வோம்   . . . . .