227-அலட்சியம் தவிர்த்தல்

வாழ்க மனித அறிவு                                                        வளர்க மனித அறிவு

அலட்சியம் தவிர்த்தல்

அறிவிற்கு விருந்து—227

 18-09-2016—ஞாயிறு.

stop_indifference

     ‘அலட்சியம்’ என்கின்ற சொல் அனைவராலும்  அறியப்பட்டதுதான்.  ஆனால் அச்சொல்லின் ஆழ்ந்த பொருளை ஒரு சிலரே அறிந்திருப்பர். துன்பத்தை யாரும் விரும்புவது இல்லை.  எப்போதுமே இன்பமே விரும்பப்படுகின்றது.  துன்பத்தை விரும்பாத மனிதன் துன்பம் அளிக்கின்ற அலட்சியத்தைப் பற்றி  அறிந்து அலட்சியமில்லாமல் விழிப்போடு இருக்க வேண்டுமல்லவா?!

அலட்சியம் என்பது என்ன?  அலட்சியம் என்பது மனிதனின்  தன்மைகளில் ஒன்று.  ஆனால் அலட்சியம் என்பது எதிர்மறைத் தன்மை (negativity). அது விரும்பத்தகாதது (undesirable one).

‘அலட்சியம்’ என்பதன் ஆழ்ந்த பொருளை உணர்ந்தவர்களில் ஒரு சாரர் ‘அலட்சியம்’ விரும்பத்தகாதது என்று விழிப்போடு அலட்சியம் செய்யாமல் இருப்பர்.

வேறு சிலரோ அலட்சியம் என்பதன் பொருளை அறிந்திருந்தாலும் அலட்சியத்துடனே செயல்கள் புரிவர்.

‘அலட்சியம்’ என்பதன் ஆழ்ந்த பொருளை உணராதவர்களோ, அது பற்றி ஏதும் அறியாதிருப்பர்.

அலட்சியம் பற்றி அறிந்தவர்  அலட்சியம் காட்டுபவராகக்கூட இருக்காலம்.

‘அலட்சியம்’ என்கின்ற சொல்லின் பல பொருட்களைக் காண்போம்.

அலட்சியம்:

1) அக்கறையின்மை

2) பொருட்படுத்தாத தன்மை

3) உதாசீனம்(lacking interest, showing no interest)

4) முகத்தில் கர்வம், கண்களில் கர்வம்.(through body languages)

5) மதியாமை, அவமரியாதை

இவ்வாறாக பல பொருட்களில் அலட்சியம் என்கின்ற வார்த்தை கையாளப்படுகின்றது.  ஐந்து பொருளுமே விரும்பத்தகாததையே(undesirables) தெரிவிக்கின்றன.

அலட்சியம் என்பது மனிதனின் தன்மைகளில் ஒன்று என்றால் உடலின் எந்த உறுப்பின் தன்மையாக உள்ளது?  உடல் உறுப்புகளின்  தன்மை அல்ல ‘அலட்சியம்’ என்பது. உடல் உறுப்புகளை அனிச்சையாகவும், மனிதன் விரும்பியும் இயக்குவதற்கு காரணமான அறிவின் தன்மையை அலட்சியம் குறிக்கின்றது.

திருவேதாத்திரியம் அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ஆகிய அறிவின் மூன்று வறுமைகளில் அலட்சியத்தை ஒன்றாக கருதுகின்றது.  திருவேதாத்திரியத்தின் தோற்றத்திற்கு முன்னர்  அறிவிற்கு வறுமை உள்ளதாக இந்த அளவிற்கு வலியுறுத்தப்பட்டு கூறப்படவில்லை.  ஆனால் அறிவிற்கு இயலை ஏற்படுத்திக் கொடுத்த அறிவின் அறிவியலாளரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் அறிவிற்கு அலட்சியம் என்ற வறுமை இருப்பதை கூறுகிறார்.  இதனை குறையாகவும் கருதுகிறார்.

Scientist of Consciousness

 அலட்சியம் என்பது அறிவின் குறைபாடே என்று கூறும் மகரிஷி அவர்கள்,  இதனை அறியாமை என்கின்ற பொருள் கொள்வது தவறு என்கிறார்.  இது அறியாமை அன்று என்கிறார்.  விளைவு தெரிந்தும் அறியாமை போல் நடந்துகொள்வது. ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருப்பது அலட்சியம் என்கிறார் மகரிஷி அவர்கள்.

 விளைவை அறிந்து செய்தாலும், அறியாமல் செய்தாலும் செயலுக்கேற்ற விளைவு வந்தே தீரும் என்றிருக்கும்போது, விளைவு துன்பம் வரும் எனத் தெரிந்தும் ஒரே தவறை மீண்டும், மீண்டும் மனிதன் செய்து கொண்டே இருப்பது ஏன்?  அதனால் துன்பம் தனக்கோ பிறர்க்கோ வரலாம்.  காரணம் என்ன?

1)   பழக்கம்

2)   செயல் செய்வதற்கு முன் சிந்திப்பது இல்லை.  நுண்மாண்நுழைபுலன் திறன் இல்லாமையே.

3)   துன்பம் வந்தாலும் அதை அனுபவித்துக் கொண்டே வாழ்வது. தனக்கும் துன்பம் இல்லாமல், பிறர்க்கும் துன்பம் தராமல் வாழவேண்டும் என்கின்ற குறிக்கோள் இல்லாமை.

4)   செயலுக்கான விளைவு உடனே வரும் என்று சொல்வதற்கில்லை.  ‘அரசன் அன்றே கொல்வான்,  தெய்வம் நின்று கொல்லும். என்பார்கள் பெரியவர்கள்.  தெய்வம் அவ்வப்போது விளைவைக் கொடுப்பதாக இருந்தால் தவறு செய்கின்ற மனிதஇனம் பூல்பூண்டே இல்லாமல் ஆகி இருக்கும்.  மீண்டும் இயற்கை/இறை மனிதஇனத் தன்மாற்றத்தை (பரிணாமத்தை) ஆதிமனிதனிலிருந்து ஆரம்பிக்க வேண்டியிருந்திருக்கும்.

5)   மனிதருள் வேறுபாடுகள் இருப்பதற்கு உள்ள 16 காரணங்களில் சில அலட்சியத்திற்குக் காரணங்களாக உள்ளன.

 பிறவியின் நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு வாழவேண்டிய வாழ்க்கையில் அலட்சியம் இருந்தால் எவ்வாறு சரியாக இருக்கும்?  லட்சியத்தை அடையவிடாததல்லவா?”

 லட்சியத்தை அறிவின் மூன்று வறுமைகளில் ஒன்றாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்?   வறுமை என்பது பொருளாதார வசதி இல்லாத நிலை (poverty).  பொருளாதார வசதி இல்லாத நிலையைக் குறிக்கும் சொல்லாகிய ‘வறுமை’ என்கின்ற சொல்லால் அலட்சியத்தை குறிப்பிடுகின்றார். காரணம் என்ன? வறுமைக்கு எதிர்ச்சொல் என்ன?  செல்வம்.  செல்வம் என்பதனை உடைமை என்று சொல்லலாம். ஒருவருக்குரியது உடைமை. ஒருவருக்குரியது செல்வம்.

அறிவு பற்றி கூற வந்த திருவள்ளுவர் அறிவை ஒருவருக்கு இருக்க வேண்டிய உடைமை எனக்கூறி அறிவுடைமை என்கின்ற அதிகாரத்தை வகுத்துள்ளார். எனவே அறிவு என்பது ஒருவருடைய தலையாய செல்வமாகின்றது.  உலகியல் வாழ்க்கைக்கு வேண்டிய செல்வத்தை ஈட்ட  வேண்டுமென்றாலும் அறிவு திறம்பட செயல்பட்டால்தான் சாத்தியமாகும்.  திறம்பட இருக்க வேண்டிய அறிவு அலட்சியத்தோடு செயல்பட்டால் விளைவு என்னவாக இருக்கும்?  துன்பங்கள்தான் மிகும். எனவே அறிவுச் செல்வத்தில் உள்ள அலட்சியம் என்கின்ற குறையை வறுமையாகக் கருதுகிறார் மகரிஷி அவர்கள்.

 இறை அருளை வேண்டும் மனிதன், இறையாகிய அறிவில் அலட்சியம் இருந்தால் எவ்வாறு இறை அருளைப் பெறமுடியும்? திருவள்ளுவர் அறிவுடையவர் எல்லாம் உடையவர் என்று கூறுவதனை நினைவு கூர்வோம்.

FFC-166-dheaivappulavar

 அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர்”.                   குறள் எண் 430

 பொருள்:  அறிவுடையவர் வேறொன்றும் இல்லாதிருப்பினும் எல்லாம் உடையவரே ஆவர்.  அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.

 அறிவில்லாதவர் என திருவள்ளுவர் குறிப்பிடுவது குறைவுடைய அறிவை. ஆகவே  அறிவில் அலட்சியம் என்கின்ற குறை இருப்பது அறிவில்லாமைதானே. எனவே எல்லாம் உடையவராக இருக்க அலட்சியத்தை நீக்குவதில் அலட்சியமாக இருந்துவிடாமல் அலட்சியத்தை நீக்கி அறிவை திருவள்ளுவர் கூறும் எல்லாம் உடையவராக்கும் அறிவுடையதாக்கி பிறவிப்பயன் என்கின்ற லட்சியத்தை அடைவோம்

வாழ்க வளமுடன்.

 வாழ்க அறிவுச்செல்வம்.                                                     வளர்க அறிவுச் செல்வம்.