அறிவிற்கு விருந்து 3 /3

வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

அறிவிற்கு விருந்து 3 /3

அ.வி். – 43

04-01-2015—ஞாயிறு

 

திருவள்ளுவரோ 133 அதிகாரங்களை அமைத்துள்ளார் என்றால் என்ன பொருள்? அந்த 133 அதிகாரத் தலைப்புகள் தெரிவிப்பவைகள் அத்தனையும் மனித சமுதாயத்திற்கு அன்றே அவசியமாக இருந்தது. இன்று அவை மிக மிக அவசியமாக உள்ளன. அந்த 133 அதிகாரங்களை கண்ணுறும்போது அவற்றில் ஏதேனும் ஒன்றாகினும் மனித சமுதாயத்திற்கு அவசியமில்லை என்று சொல்ல முடியுமா? ஒரு அதிகாரத்தில், சொல்ல வேண்டிய ஒரு வாழ்வியல் உண்மையை ஒரு குறளில் சொன்னால், அது போதாது என்று எண்ணி, மனித அறிவிற்கு தெளிவு படுத்த விரும்பிய வள்ளுவர், பத்து கோணங்களில் கூறுவதற்கு, பத்து குறட்பாக்களில் அருளியுள்ளார்.

ஒழுக்கத்திற்கென்று தனி அதிகாரத்தை ஒதுக்கி பத்துக் குறட்பாக்களை அருளியுள்ளார். அதுபோல் அறிவைப் பற்றி பத்து பாக்களில் கூறி அறிவுடைமை அதிகாரத்தை ஏற்படுத்தியுள்ளார். இவ்வாறு திருக்குறளை அருளியதால்தான், திருவள்ளுவர் தோன்றி 1940 வருடங்கள் சென்ற பிறகும்,

ஒரு ஆன்மாவிற்கு, திருவள்ளுவரை மானசீகக் குருவாக அமைத்து,
“அகத்ததுதான் மெய்ப்பொருள் என்று எடுத்துக்காட்டி,
அறிவதனை அறிவித்தார் திரு வள்ளுவர்”
என குருவணக்கம் செய்ய வைத்து,
அறிவை அறியச்செய்து.
திருவள்ளுவரைப் போன்றே 1851 கவிகளை அருளச்செய்ய முடிந்தது இயற்கை அன்னையால். அந்த புண்ணிய ஆன்மாதான் பிரம்மரிஷியான, நம் தாய்தந்தை செய்த புண்ணியத்தால் நமக்கு இயற்கை ஏற்படுத்திக் கொடுத்த, அவ்வையார் கூறும் அறிவினரான வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

தனது மனிதகுல தன்மாற்ற தொழிற்சாலையில், விலங்கினப் பண்பால் மனிதகுலத்திற்கு வந்துவிட்ட பரிணாமக்கசடுகளை நீக்க, அறிஞர்கள் வழியாக அறநெறி – அறவுரைகள் இயற்கையால், வழங்கப்பட்டாலும், சமுதாயம் அதனைக் கண்டு கொள்ளவே இல்லை. எப்படி உடலுக்கு பிணி ஏற்பட்டால், மருந்தைக் கொண்டு சரி செய்து கொள்ள மனித சமுதாயம் கண்டுபிடித்துள்ளதோ, அதுபோல், பிறவிப்பிணிக்கு, இயற்கை காலங்காலமாக, அறநெறிமருந்துகளை தனது மூத்த குழந்தைகளில் ஒருசிலர் வழியாகத் தெரிவித்து வந்தாலும், மனிதசமுதாயம் அதனை கண்டு கொள்ளவில்லை. கைமேல் பலன் தரும் புலனின்பத்தை அளவு மீறியும், முறை மாறியும் அனுபவித்துக் கொண்டு துன்பத்துக்குள்ளாகின்றது. இதனைத்தான் அறிஞர்கள் எல்லோருமே புலன்மயக்கம் என்கின்றனர்.
‘புலன் இன்பம்’ மட்டுமே அனுபவிக்க ஆன்மா இந்த உடல் எடுக்கவில்லை. அதுதான் பிறப்பிற்கான காரணம் என்றால், ஆன்மா மீண்டும், மீண்டும் பிறவி எடுத்து வெறும் பிறப்பு–இறப்பு சுழலில்(mere cycle of birth and death) சிக்கித் துன்பக்கடலில் தத்தளிக்க வேண்டுமா?

சலிப்பிற்கும், நடைமுறையில், அளவும், முறையும் கடைபிடிக்க முடியாமல், வருகின்ற துன்பங்களுக்குக்கும் காரணமான புலன் இன்பம் மட்டுமே அனுபவிக்கும் அற்ப நோக்கத்திற்காகவா –

எல்லாம் வல்ல இறை ஆதிமனிதனிலிருந்து இன்று வரை,
கடலிலுள்ள நீர்த்துளிகள் எவ்வளவு என்று கணக்கிட முடியாதோ,
அதுபோல், பலகோடி கோடி மக்களாக வெறும் பிறப்பு – இறப்பு சுழற்சிக்காகவா தன்மாற்றம் அடைந்து வந்துள்ளது?
இதில் என்ன ரசனை இருக்கின்றது இறைக்கு? அல்லது இருக்க முடியும்!

இறையாகிய பேரறிவு, ஆதிநிலையில் வெளியாக இருந்தபோது இல்லாத சிறப்பினை மனித வடிவில் தன்னை அறியும்போது பெறுகின்றது. அந்த சிறப்பு என்ன? இறையாகிய பேரறிவு, ஆதிநிலையில் வெளியாக இருந்து போது, தன்னை இரசிக்க முடியாது. ஆனால் மனித வடிவில் இறை தன்னையே ரசிக்கின்றது. மனிதன் ரசிக்கும் இயற்கையின் அருமை, பெருமைகள் யாவும் இறையினுடையது தானே.
இது எப்படி இருக்கின்றது என்றால், முகம் பார்ப்பதற்குக் கண்ணாடித் தேவைப்படுவது போல், தன்னையே ரசிக்க பேரறிவிற்கு மனித உடலும், ஆறாம் அறிவும் தேவையாய் இருந்தது. முகம் பார்க்கக் கண்ணாடி வேண்டும். அழகனோ, அழகியோ தனது அழகினை ரசிக்க கண்ணாடி வேண்டும். கண்ணாடியே இல்லாத ஊரில் பிறந்த அழகனோ, அழகியோ எவ்வாறு தன் அழகினை ரசிக்க முடியும்?

அதுபோல், இறையும், மனிதன் இல்லாமல் தன்னை ரசிக்க முடியாது. எனவே இறைக்கும் தன் சிறப்பினையெல்லாம் அறிந்து மகிழ்வதற்கு, மனித வடிவில் கண்ணாடித் தேவைப்பட்டது.

வேதாத்திரி மகரிஷி அவர்கள் இந்த சுத்த அத்வைத தத்துவத்தை நமக்குத் தெளிய வைப்பதற்கு, மனிதனை “Sophisticated GOD” என்பார். காரணம் வெட்ட வெளியில் பேரறிவிற்கு உணர்வு கிடையாது. ஆகவே பேரறிவிற்கு, மனிதனாகி இப்போது தன்னை உணர்ந்து பேரின்பம் அடைகின்ற நிலை, வெட்டவெளியாக இருந்தபோது கிடையாது. தன்னுடைய இரகசியங்களையே மனித அறிவின் மூலமாக அறிந்து மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைகின்றது இறை.

ஆனால் இப்பேறு பெற்ற மனிதன் புலன் இன்பங்களிலேயே மூழ்கி அல்லலுறுகிறான். வேதாத்திரி மகரிஷி அவர்கள், ஆதங்கமாகவும், வேடிக்கையாகவும் “ஏன் அசைந்தோமோ? இவ்வாறு மனிதவடிவில் துன்பங்களை அனுபவிக்க வேண்டியுள்ளதே என்று இறைவன் நினைப்பான்” என்பார். தன்னையே அறிந்து இன்பமுற ஆறாம் அறிவாக வந்த பேரறிவு, மனிதனின் அறியாமையால் துன்பத்தையே அடைகின்றது. “கல்லார் கற்றார் செயல் விளைவாய்க் காணும் இன்பதுன்பமவன்” என்று இறையைக் கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

ஆகவே, ஆன்மா தனது பழிச்செயல் பதிவுகளை நீக்கிக் கொண்டு, மீண்டும் இப்பிறவியில் பழிச்செயல்கள் புரியாத அயரா விழிப்புடன் இருந்து, தன்னை உணர்ந்து, ஆன்ம உணர்விலேயே வாழ்ந்து, பெருவாழ்வு வாழ, மனிதன் அறிவிற்கு விருந்தை அருந்துவதற்காக செய்ய வேண்டியவைகள் என்னென்ன?

அறிவிற்கு விருந்தை அருந்துவதற்குச் செய்ய வேண்டியவைகள்:
1) முதலில் சரியான அறிவினரைத் தேடி அவருடன் இணைந்திருத்தல் வேண்டும்.
2) அந்த அறிவினர் கூறும் அறநெறிகள் சரியானவையா என சுயசிந்தனையின் மூலம் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவது போல்– “Information, Confirmation, Transformation” சோதித்து அறிய வேண்டும். அறிந்து, அதுபோல் நடக்க வேண்டும்.
3) வானொலி, மற்றும் தொலைக் காட்சியின் வாயிலாக ஒலி, ஒளி பரப்பப்படும் நிகழ்சிகளான சான்றோர் சிந்தனைகளைக் கேட்க வேண்டும். செய்தித்தாளில் “அறிவோமா ஆன்மீகம்” போன்ற பகுதிகளை ஆர்வமாகப் படிக்க வேண்டும்.
4) மகரிஷி அவர்களின் வாழ்க்கை மலர்களிலுள்ள சிந்தனை விருந்தை அன்றாடம் தவறாமல் படிக்க வேண்டும்.
5) அறிஞா்களின் அறநூல்களைத் தினந்தோறும் ஒரு மணி நேரமாவது படிக்க வேண்டும்.
6) சத்சங்கத்தில் நேரிடையாகக் கலந்து கொள்ள வேண்டும். வாய்ப்பில்லாதபோது அறநூல்களை தினந்தோறும் வாசிப்பதே சத்சங்கம். அறநூல்களை வாசிக்கும் போது. அதனை அருளிய அறிஞர்கள் அறிவாற்றலுடன் இணைகிறோம்.
7) இவைகளுக்கெல்லாம் வாய்ப்பில்லாத போது, தானே சிந்திப்பதும் கூட, சிற்றறிவு பேரறிவோடு, சத்சங்கத்தில் கலந்து கொள்வதேயாகும்.
அதாவது, கேள்வியும் அவனே. பதிலும் அவனே. ஒரு பொருள் பற்றி
அதிக அக்கறையுடன்,
ஆர்வத்துடன்,
ஆழ்ந்து,
விடாமல்,
எப்போதும், நித்தம் நித்தம்,
உள்ளம் சிந்திக்கும் பழக்கம் சித்தியாகிவிட்டால், கேள்வியை எழுப்புவதும் இறையே. அப்போதோ, பிறகோ விடை தருவதும் இறையேதான். உள்ளம் என்பது மனதின் மறுமுனையான தெய்வம் தானே! எனவே உள்ளம் களங்கமற்றுச் சிந்திக்க வேண்டும். களங்கமற்ற உள்ளம் சிந்திக்கின்றது என்றால் தெய்வமே சிந்திப்பது தானே? தெய்வமே சிந்தித்தால் அதுவே தனக்கு, எல்லாவற்றையும் தெரிவிக்கின்றது. தெரிவித்துக் கொள்கின்றது. இந்த உணர்வை அனுபவித்து இன்பமுற வேண்டும்.
இதுவரை அறிவிற்கு விருந்து என்றால் என்ன, ஏன் அறிவிற்கு விருந்தாகவே உண்ண வேண்டும் எனப்பார்த்தோம். அறிவிற்கு விருந்து அருந்தும் பல வழிகளில் ஒன்று சத்சங்கமாகும். நேரிடைச் சத்சங்கத்தில் கலந்து கொள்வதற்கு இயந்திரமயமான, பரபரப்பான உலகில் சாத்தியங்கள் குறைவாக இருக்கின்றது. ஆகவே நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, www.prosperspiritually.com ஏற்படுத்தப்பட்டு, அது இணையதள சத்சங்கமாகப் பயன்பட்டு, கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ‘அறிவிற்கு விருந்து’ என்கின்ற பகுதியும், சிந்தனைப் பயிற்சி என்கின்ற பகுதியும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு உலக சகோதரர்களும், சகோதரிகளும், அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வாழ்க வளமுடன். வாழ்க www.prosperspiritually.com வளர்க www.prosperspiritually.com.