அறிவிற்கு விருந்து – 290

வாழ்க மனித அறிவு!                                                                வளர்க மனித அறிவு!!

அறிவிற்கு விருந்து – 290

இனியொரு விதி செய்வோம்-4

மனிதஇன   தன்மாற்றத்தில் அறம் தோன்றிய நாள்

13-05-2020—புதன்

வாழ்க வளமுடன்!

உத்தம நண்பர்காள்! உங்கட்கும் உரியது”

“அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அத்துனை அருளாளர்களையும் நினைவு கூர்கின்ற” வேதாத்திரி மகரிஷி அவர்கள் அறிவுறுத்துகின்ற குருவணக்க யுக்தியின் படி இன்று மகாகவி பாரதியாரை நினைவு கூர்ந்து  மகரிஷி அவர்களின் துணையுடனும் வழிகாட்டுதலிலும் இன்றைய சிந்தனையைத்  தொடர்வோமாக!  வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!   

          10-05-2020 அன்றைய சத்சங்கத்தின் அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இன்றைய சிந்தனையைத் தொடர்கிறோம்.    ‘செயலுக்கு விளைவு உண்டு’ என்பதுதான்  இயற்கை/இறை நீதி என்று  நம் குருநாதர் என்று கூறியுள்ளதை நாம் அறிந்திருந்தாலும், நம் குருநாதரின் அருட்துணையுடனும், வழிகாட்டுதலிலும்,

 1. சட்டப்படிப்பே தேவையில்லை இயற்கை/இறை நீதியை அறிந்து கொள்வதற்கு,
 2. ஆட்சியின்றி ஆளுகின்ற ஒழுங்காற்றல் இயற்கை/இறை,
 3. இயற்கை/இறை நீதி எது என்பது பற்றிய நமது முடிவு,
 4. விளைவிற்கு விதை செயலே!,
 5. சற்று சிந்தித்துப் பார்ப்போமே! ஒரு கற்பனை!
 6. இயற்கைநீதி/இறைநீதி மிக மிக எளிமையானதுதான்

ஆகிய துணைத்தலைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு ஆழ்ந்து சிந்தித்து, ‘செயலுக்கு விளைவு உண்டு’ என்பது இயற்கையின்/இறையின் நீதியே என  ஐயமின்றி உறுதி செய்தோம் சென்ற அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில்.

      இன்றைய அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில்  ‘அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அத்துனை அருளாளர்களையும் நினைவுகூர்தல் அவசியம்;   நலம் பயக்கும்’ என்கின்ற உண்மையை  நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வகுத்துக் கொடுத்த குருவணக்க யுக்தியின்படி மகாகவி பாரதியாரை நினைவுகூர்தலின் முகமாக   மகாகவி பாரதியாரின் சத்திய வாக்கான

   “மனித ருணவை மனிதர் பறிக்கும்

  வழக்கம் இனியுண்டோ?

  மனிதர் நோக  மனிதர் பார்க்கும்

  வாழ்க்கை இனியுண்டோ?”  என மகாகவி பாரதியார் 1921 ற்கு (அவர் மறைந்த ஆண்டு) முன்னர்  தீர்க்கமாக மொழிந்ததை  நினைவுகூர்வோம். 

      இப்பாடலை நினைவுகூர்வதோடு நம் சிந்தனை முடிந்துவிடுவதில்லை என்பதனை நாம் அறிவோம்.  ஆகவே  தீர்க்கதரிசியான மகாகவி பாரதியாரின்  சத்திய வாக்குகள், 38 (1959-1921=38)ஆண்டுகளுக்கு பிறகு 

 • மனிதன் தனது எந்த தன்மையை(இரக்கம்) அறிந்து கொண்டு அதனை வளர்த்துக்கொள்ளும் போது மகாகவி பாரதியார் அருளிய சத்திய வாக்குகள் நிறைவேறும் என்பதற்கு உறுதியான நம்பிக்கையினை மனித(Fractions) மனங்களிலே ஏற்படுத்தும் முகமாக,  
 • இதுவரை அறத்திற்கு தெளிவான சுருக்கமான, அன்றாட வாழ்க்கையிலே புலன் வழி வாழ்ந்துகொண்டிருக்கும் பாமரனும் விளங்கிக்கொண்டு கடைபிடிக்கும் வகையில் தனது செயல்களை அளந்துபார்க்கும் அளவுகோல்(Yard stick) இல்லாத குறையை இயற்கை/இறை
 • அறத்தின் வரையறையின்(definition) வாயிலாக மனிதகுலத்திற்கு அறத்தினை தெரிவிக்க மனிதஇன தன்மாற்ற/பரிணாம வராற்றில் ஒரு புனித நாளான 20-12-1959 ஐ தேர்ந்தெடுத்து,
 • ஆன்மீக வரலாற்றில் இதுவரை ஆன்மீக வரலாறு கண்டிராத பெரும் திருப்பு முனையை       ஏற்படுத்திய இயற்கை/இறை, வேதாத்திரி மகரிஷி அவர்களைத் தேர்ந்தெடுத்து அவரைத்  திருக்கருவியாக்கி அறிவித்த  திருப்பாடலை இப்போது நினைவுகூர்வோம்.

             வாழ்க திருவேதாத்திரியம்!   வளர்க திருவேதாத்திரியம்!!

                         அறத்தின் தோற்றம்/அறமே மதம்(20-12-1959)

                   பிறஉயிர் உணர்தலாய்ப் பெற்றிடும்

                      சுகதுக்க அளவினை

                   உறவுகொண் டுள்ளத்தால் யூகித்து,

                       உணர்ந்திரங்கி உதவும்

                   சிறந்த திருப்பம் அறிவில் சிந்தனையில்

                      முதல்உலகில் பெற்றநாள்

                   அறம்தோன்றிற்று;  மதமாம், அதை

                      வளா்த்தோர் பெயர்களினால் பலஆயிற்று. 

. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

(20-12-1959-மாக்கோலமாய் விளைந்த மதிவிருந்தில் ‘அறத்தின் தோற்றம்’ என்கின்ற தலைப்பிலும் பின்னாளில் ஞானக்களஞ்சியத்தில் கவி எண். 494 ல் இடம் பெற்றுள்ளது இப்பாடல்) 

பாரதியாரின் சத்யவாக்கு என்ன கூறுகின்றது?

     மேலே குறிப்பிட்ட சத்யவாக்கினை மீண்டும் நினைவு படுத்திக் கொள்வோம். என்ன கூறுகின்றார் பன்முகக் கவிஞர் மகாகவி பாரதியார்?  மனிதர்களிடம் இனி அன்பும் கருணையும் ஊற்றெடுக்கும்  என்கிறார்  பாரதியார். அதாவது மனிதர்களிடம் இனி இரக்கம் மலரும் என்கிறார். எப்படி இயற்கையின் தன்மாற்றத்தில்/இறையின் தன்மாற்றத்தில் திடீரென்று அம்மாற்றம் நடைபெறமுடியும்?! பாரதியார் பேரறிவின் தன்மாற்றம்தானே?  பேரறிவே பாரதியார் என்கின்ற உடலின் வழியாக  கூறிய சத்யவாக்குகள்  அவை என்று கொள்ளலாம்.  மாற்றாக    ‘ஆன்மா நினைத்தால் பேரான்மா நிறைவேற்றி வைக்கும்’ (Fraction demands.  Totality suppplies) என்கின்ற அடிப்படையில்  தன்மாற்றம்/பரிணாமம் வளர்ச்சி பெற்று வருகின்றது;  ஆகவே பாரதியார் ஆன்மா நினைத்தது, பேரான்மா அதனை நிறைவேற்றி வைக்கும்  எனக் கொள்ளலாமா?  கொள்ளலாம்.  நிறைவேற்றி வைத்ததா? ஆம்!  நிறைவேற்றி வைத்துள்ளது வேதாத்திரி மகரிஷி வாயிலாக.

     “மனித ருணவை மனிதர் பறிக்கும்

  வழக்கம் இனியுண்டோ?

  மனிதர் நோக  மனிதர் பார்க்கும்

   வாழ்க்கை இனியுண்டோ?”   . . .   மகா கவி பாரதியார்,

 பொருள்: மனிதனுக்குரிய வரையறைகளில் ஒன்று  ‘மனிதன் ஒரு சமூகப்பிராணி.Man is a Social Animal.  ஏன் மனிதனை அவ்வாறு கூறவேண்டும்?  மனிதன் உயிரினத்தைச் சேர்ந்தவன்தானே?!  இருந்தாலும் மற்ற உயிரினத்தைவிட சிறப்புடையவன்.  ஆறாம் அறிவு உடையவன் மனிதன் என்று மனிதர்களாகிய நாம் ஏற்றுக் கொள்கிறோம். விலங்கினத்திலிருந்து வந்ததுதானே மனிதஇனம்.  விலங்கை  பிராணி என்கிறோம்.  பிராணி என்றால் இடம் விட்டு இடம் செல்லக்கூடியதும், புலனுணர்வுகளைப் பெற்றிருப்பதுமான உயிரினம். மற்ற உயிரினங்கள் தங்கள்  இனத்தைவிட்டு தனியாகவும் வாழ முடியும்.  சில விலங்குகள்  பாதுகாப்பிற்காக  தன் இனத்தைச் சேர்ந்த கூட்டத்தில் சேர்ந்து வாழ்கின்றன. ஆனால் மனிதன்  எப்போதுமே மனித சமுதாயத்தில் சார்ந்து  சேர்ந்துதான் வாழமுடியும். தன் சமுதாயத்தை விட்டு வெளியே வாழமுடியாது.  காரணம் தனக்கு வேண்டிய எல்லாப் பொருட்களையும் தனியொரு மனிதன் செய்துகொள்ள முடியாது. சமுதாயத்தில் இருந்துதான் பெறமுடியும்.  ஆகவே மனிதன் சமுதாயப்பிராணி எனப்படுகிறான்.  மனிதன் சமுதாயத்தில் வாழ்கின்றபோது அவனுக்கு  நெறி(code of conduct) அவசியமாகின்றது.  நெறி என்றால் என்ன?  தனி மனித ஒழுக்கத்திற்காக ஏற்படுத்திக் கொள்கின்ற விதி அல்லது மேற்கொள்ளும் முறையே நெறி. ஆகவே நெறி என்பது ஒழுக்கம் என்றாகின்றது.  அப்படியானால் ஒழுக்கம் என்றால் என்ன?

ஒழுக்கம் பற்றி திருவேதாத்திரியம் கூறுவது என்ன?

 •  தனக்கோ, பிறருக்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ உடலுக்கோ உயிர் உணர்ச்சிக்கோ துன்பத்தை விளைவிக்காத எண்ணம், சொல் செயல் ஆகிய மூன்றும் ஒழுக்கம் என்பதாகும்.
 •  எண்ணம், சொல், செயலில் எழும் விளைவறிந்து, உண்மையில் இன்பமே உண்டெனில் ஒழுக்கமாம்
 •  பிறருக்கு துன்பம் இல்லாமல் செயலாற்றுவதே ஒழுக்கம்.
 • துன்பம் விளைவிக்காமல் காக்கின்ற வாழ்க்கைத்திறனே, செயல் திறமையே ஒழுக்கம் எனக்கொள்ளவேண்டும்.

     ஒழுக்கம் எது என்பதை திருவள்ளுவர் இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னரே கூறியிருந்தாலும், இருபது நூற்றாண்டுகளுக்குப் பின்னர்  பத்து கோணங்களில் ஐயன் திருவள்ளுவர் கூறியுள்ளதைச்  சுருக்கி காலத்திற்கு ஏற்றாற்போல்,

 • மனிதனிடம் அடிப்படையாக என்ன வேண்டுமோ,
 • அதாவது ஆதிமனிதன் விலங்கினத்திலிருந்து தோன்றியதால், ஆதிமனிதனின் கருத்தொடராக வந்தவன்தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதனும் என்பதால் அவனிடம் உள்ள கருமையத்தில் உள்ள விலங்கினத்தன்மை மறைந்து மனிதனுக்கே உரிய அன்பும், கருணையுமாகிய மனிதம் முழுமையாக வெளிப்படவேண்டும் என்பதனைக் கருதி அந்நெறியை இரண்டொழுக்க பண்பாக்கித்  தந்துள்ளார் திருவேதாத்திரியத் தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

இரண்டொழுக்கப் பண்பாடு என்ன கூறுகின்றது?

     இரண்டொழுக்கப் பண்பாடு என்ன என்பது மனவளக்கலைஞர்களால்  அறியப்பட்டதுதான். எனினும் அதனை இங்கே நினைவுபடுத்திக் கொள்வோம்.

 • நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்,
 • துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

முதலாமாவது அன்பை வெளிப்படுத்தும்.  மனிதனுக்கு இரண்டு கண்கள் உள்ளதுபோல் மனிதநெறிக்கும் இரண்டு கண்கள் உண்டு.  மனிதநெறிக்கு முதல் கண் அன்பு எனில், அதன் இரண்டாம் கண் கருணை. ஆகவே இரண்டாவது ஒழுக்கம் கருணையை வெளிப்படுத்துகின்றது.

இரண்டொழுக்கப்பண்பாடு ஒவ்வொரு மனவளக்கலைஞர்களாலும் தவத்தின் முடிவில் சங்கல்பம்  செய்யப்பட்டு வருவதால் அது  வான்காந்த களத்தில் பதிந்து அழுத்தம் பெற்று பிறமனிதர்களிடம் சென்றடைந்து, காலத்தால் ஒழுக்கத்தை உடைமையாக்கிக் கொள்ளும் மனிதசமுதாயமாக  மலர்ச்சி பெறும்.   

ஆகவே திருவேதாத்திரிய இரண்டொழுக்கப்பண்பாடு, மகாகவி பாரதியாரின்

      ‘மனிதர் உணர்வை மனிதர் பறிக்கும் அன்பில்லா வழக்கம் இனி இருக்காது’

               எனும் முதல் சத்யவாக்கினையும்,   

     ‘மனிதர் நோக மனிதர் பார்க்கும் கருணையற்ற வாழ்க்கை இனி இருக்காது’ என்கின்ற இரண்டாவது  சத்யவாக்கினையும் அருட்பேராற்றல் நிறைவேற்றி வைத்துள்ளதை நினைந்து மனம் ஆனந்தமடைகின்றது  மனிதநல ஆர்வலர்களான  மனவளக்கலைஞர்களுக்கு.

இரக்கமில்லாமல் ஒழுக்கம் ஏது?

    மேலும் மற்றொன்றையும் கவனிக்க வேண்டும் நாம்.  இரக்கமில்லாமல் ஒழுக்கம் என்பது மனிதனிடம் வராது. ஒழுக்கம் என்பது அன்பையும், கருணையையும் வெளிப்படுத்துகின்ற நெறிதானே?!  அவ்வாறிருக்கும்போது இரக்கமின்றி எப்படி மனிதனிடம் ஒழுக்கத்தைப் போதிக்க முடியும்?  விலங்கினத்திலிருந்து தன்மாற்றமடைந்த (பரிணாமத்தில்) விலங்கினப்பண்பைக் கொண்ட மனிதனிடம் எப்போது இரக்கம் தோன்றியிருக்க முடியும் என்று சிந்தித்த வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு அருபோரற்றலால் அறிவிக்கப்பட்ட பாடல்தான் மேலே குறிப்பிட்டுள்ள அறத்தின் தோற்றம் என்கின்ற பாடல்.  ஆகவே மனிதஇன தன்மாற்றத்தில்/பரிணாமத்தில் ஒரு நாள் ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு ஏற்பட்ட  இன்பதுன்ப உணர்வினை தன் உணா்வுபோல்  யூகித்து உணர்ந்து உதவி செய்திருக்கின்றான்.   அப்போதுதான் உறவு இருவருக்கும் இடையே  பிறந்திருக்கின்றது.  அந்த உறவால் அம்மற்றொரு  மனிதன் அனுபவித்த துன்பத்தை போக்கியிருக்கிறான். இது சிறந்த திருப்பம் என்கிறார் மகரிஷி அவர்கள். உலகில் முதல் நாள் ஏற்பட்ட அந்த இரக்க உணர்வை அறம் என்கிறார் மகரிஷி அவர்கள்.  அந்த அறஉணர்வை மேலும் விளக்குகிறார். 

இரக்கஉணர்வே அறம் என்கிறார் மகரிஷி அவர்கள்

அறம் என்பதுகூட ஒரு நெறிதான். இயற்கையின்/இறையின் நெறியே அறம். ஆகவேதான் இறைஉணர்வையும், அறநெறியையும் இணைத்தே கூறுகின்றார் மகரிஷி அவா்கள்.  இறைஉணர்வும் அறநெறியும் எனும் நூலையும் இயற்றியுள்ளார். ஆகவே இன்றைய சிந்தனையில் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் பேரறிவு மகாகவி பாரதியாரின் வாயிலாக  மனிதகுலத்தில் ஒழுக்கம் இரக்கமாக வெளிப்பட்டு அன்பும் கருணையுமாக மலரவேண்டும் என நினைந்து அதனை 38 ஆண்டுகள் கழித்து மனிதர்களுக்கு மேலும்  புரிகின்ற எளிய முறையில்  வேதாத்திரி மகரிஷி வாயிலாக சிந்திக்க வைத்து அதற்குரிய போதனையையும், சாதனையையும் மனவளக்கலையாக அருளியுள்ளது என்பது இயற்கையின்/இறையின் கருணயன்றோ!!  

வாழ்க திருவேதாத்திரியம்!      வளர்க திருவேதாத்திரியம்!!

 . . .தொடரும்                                                                                                                 

வாழ்க அறிவுச்செல்வம்!                                                  வளர்க அறிவுச்செல்வம்!!