அறிவிற்கு விருந்து – 288

வாழ்க மனித அறிவு!                                                                வளர்க மனித அறிவு!!

அறிவிற்கு விருந்து – 288

                                                                                                                      29-04-2020—புதன்

 

     உண்மை ஒன்றுதான்!  இரண்டு பட்டதல்ல!!

வாழ்க வளமுடன்!

         நேற்று செய்வாய்க்கிழமை சத்சங்கம் இல்லை.  வாரத்தில் ஒரு நாள் சத்சங்கம் இல்லை.  பரபரப்பான உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.  இருப்பினும் ஆன்மீகப் பயிற்சிகளை தவறாது மேற்கொண்டு வருகிறோம்.  அப்பயிற்சிகளில் ஒன்றுதான் இந்த இணையதள சத்சங்கம்.  முதல் முறையாக ஒரு பொருள் பற்றி சிந்திக்கும்போது நேரமின்மையால் ஆழ்ந்து சிந்தித்திருக்கமாட்டோம். வேகமாக படித்திருப்போம்.  “ அறிவை அறிய நினைத்தால் அறிவுக்கு ஓய்வு இல்லை”என்கின்ற நம் குருநாதரின் பொன்னான வாக்கிற்கிணங்க நாம் படித்த ஆன்மீகக் கருத்துக்கள்  நமது அன்றாட வேலைகளிலும்கூட அவ்வேலைகளுக்கு குந்தகமில்லாமல் மனதில் சுழன்று கொண்டு தான் இருக்கும்.   இது ஓர் நல்ல திருப்பம் ஆன்ம சாதகர்களுக்கு.   இது வேறான்றுமில்லை. அயரா விழிப்புணர்விற்கு அழைத்துச் செல்கின்றது  பேரறிவு.  மனவளக்கலை பயிற்சியின் நோக்கமே அதுதானே!!!  ஆறு நாட்களில்  சிந்தித்ததை மீண்டும் ஒரு முறையோ  பல முறையோ சிந்திப்பதற்காகவே செவ்வாய்க்கிழமைகளில் சத்சங்கம் இல்லை.  ஆகவே நேற்றைய தினத்தில் ஆறு நாட்களில், புதன்கிழமையிலிருந்து  திங்கட்கிழமை வரை  சிந்தித்ததை அசைபோட்டு மேலும் மேலும் ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்திருப்போம்.

          26-04-2020— ஞாயிறு அன்று சத்சங்கத்தில் ஆராய்ந்த சிந்தனையின் தொடர்ச்சியாக அதனை  மேலும் ஆழ்ந்து ஆழ்ந்து சிந்திக்க இன்று நேரம் அளித்த  இறையின் கருணையையும், சத்சங்க அன்பர்களின் பேரவாவால் கொண்ட நியாமான எதிர்பார்ப்பையும் கருத்தில் கொண்டு  நன்றி கூறி  இன்றைய சிந்தனையைத் தொடர்வோம்.  வாழ்க வளமுடன்!

       இயற்கை என்றால் யாவருக்கும் பொது என்று சென்ற சத்சங்கத்தில் கூறியிருந்தோம் அல்லவா?  யாவருக்கும் என்றால் யார் அவர்கள்?

முற்றுப் புள்ளி ஏற்படட்டும்

     யாவருக்கும் என்றால் என்ன பொருள்?  சமுதாயத்தில் இறைநம்பிக்கை உள்ளவர்களும், இறை நம்பிக்கை இல்லாதவர்களும் இருப்பதால் இயற்கை என்றே பொதுவாக அழைக்கலாம்.  இதில் இறைநம்பிக்கை உள்ளவர்கள் விட்டுக்கொடுத்து, இயற்கை, இறை என்பதில் இயற்கை என்பது இரு சாரர்களுக்கும் பொதுவானதாக  உள்ளதால்  இயற்கை என்றே அழைப்போம்.   பிறவிதோறும் இறையைக்  காணமுடியாததால், இறைநம்பிக்கை இல்லாதவர்களாகிவிட்ட ஆன்மாக்களால்  “இறை இல்லை” என்பதுபோல  “இயற்கை இல்லை” என மறுக்க முடியுமா?  முடியாது.  இரு தரப்பினருமே இயற்கை அன்னையின் குழந்தைகள்தானே! எனவே  இருதரப்பினருமே ஏற்றுக் கொள்வர்.  ஆகவே இயற்கை என்றாலும், இறை என்றாலும் ஒன்றே.  ஆகவேதான் பிரபஞ்சத்திற்கு  மூலப்பொருளான மெய்ப்பொருளை இயற்கை/இறை என்றே அழைத்து வருகிறோம் நமது சத்சங்கத்தில். சமுதாயத்தில், உண்மையை(Truth) ‘இறை உள்ளது’ என்று ஒரு தரப்பினர் கூறுவதும்,  மற்றொரு தரப்பினர் ‘இறை என்ற  ஒன்று இல்லவே இல்லை’ என்று கூறிவதும்  ‘உண்மையை  இரண்டு பட்டதாக கூறுவதுபோல் உள்ளது. உண்மை ஒன்று தான்.  எப்போதும் மாறாதது.

உண்மையில் இரண்டுபட்ட நிலை கிடையாது.   அதாவது  இயற்கை/இறை/பேரறிவு, அதன் குழந்தைகளால் வாதப்பொருளாக்கப்பட்ட நிலைமைக்கு முற்றுப்புள்ளி ஏற்படட்டும். 

அற ஊற்று வற்றாத ஜீவநதியாக ஓட வேண்டும்,  which is the need of the Hour

     இருதரப்பினருமே இணைந்தே நீதி நெறி உணர்ந்த மாந்தர்களாகி  உலக நலத்தின்பால் அக்கறை கொண்டு மனித சமுதாயம் உய்வதற்காகவே எண்ணுவோம், உழைப்போம்,  பாடுபடுவோம். யார் பாடுபட்டாலும் சமுதாயத்தில் அறம் ஊற்றெடுத்து வற்றாத ஜீவநதியாக ஓட வேண்டும். 

    எனவே,

நல்ல பயனுள்ள அறச்செயல்களும். அதற்கேற்ற எண்ணங்களும் எவரிடம் நிலவுகின்றனவோ, அவரைச்சுற்றிலும் நுண்ணலையாகிய அருட்பேராற்றல்(இயற்கை/இறை ஆற்றல்) சூழ்ந்து கொண்டு காப்பளித்து, வெற்றியளித்து, அதனால் மகிழ்ச்சியையும் நிறைவையும்  அளிக்கின்ற”

கருணை இயற்கைக்கு/இறைக்கு உள்ளது என்பதால் இயற்கை/இறை அருளுக்கு பாத்திரமாவதற்கு, அறச்செயல்களில் ஈடுபடுவோம்.  ‘அருள் என்கின்ற  காப்பினை’ அளித்து அதன் விளைவாக  வெற்றியை உண்டாக்கி, மனதிற்கு மகிழ்ச்சியையும், நிறைவையும் அளிப்பதால்  பேராற்றலான இயற்கையை/இறையை அருட்பேராற்றல் என்கின்ற பொது நாமத்தால்(பெயரால்) அழைப்போம்.    

         இயற்கையை/இறையை அருட்பேராற்றல் என்கின்ற பொது நாமத்தால் மனங்குளிர உள்ளன்போடு அழைப்பதும் மட்டுமல்லாது, தன்முனைப்பு என்கின்ற மாயத் திரையை விலக்கி  இயற்கையை/இறையை  நெஞ்சார மதித்தும், போற்றியும் அதன் நிலையை அறிவதற்கு ஏற்ற முறையில் வணங்குவோம். வழிபடுவோம்.    இயற்கையின்/இறையின் தன்மையை  விளங்கிக்கொள்ளவே ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை(Entelechy) இருந்து வந்தது. ஆனால் இப்போது இல்லை. அவ்வார்த்தை இப்போது இல்லாமல் போனது  அதிர்ச்சியையும், ஆதங்கத்தையும், கவலையையும் அளிக்கின்றது இயற்கையை/இறையை நேசிப்பவர்களுக்கு.   அச்சொல் இல்லாமல் போனதற்கான காரணத்தை பின்னர் அறிவோம். இப்போதைய கவலைக்கான காரணம் என்னவெனில், எவ்வாறு/எப்போது இந்த சமுதாயம் இயற்கையின் இறையின் தன்மாற்ற சரித்திரத்தை முதலில் கருத்தியலாக வியப்பின்றியும் பின்பு , தெளிவாக நேரிடை அனுபவமாக, தன் அனுபவமாக, அதாவது  அகக்காட்சியாக    அறிந்து கொள்ளப்போகின்றது என்பதே.  இருப்பினும் அந்த கவலையை நீக்க வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக இயற்கை/இறை 20 ஆம் நூற்றாண்டில் ஏற்படுத்திய  ஆன்மீகத் திருப்புமுனையின் வாயிலாக Entelechy என்கின்ற ஆங்கில வார்த்தைக்கு புத்துயிர் அளித்ததை நினைத்து ஆனந்தம் ஏற்படுன்றது

        அறம் ஊற்றெடுத்து வற்றாத ஜீவநதியாக ஓட வேண்டும்.  மனித வாழ்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்; அறவாழ்வு வாழவேண்டும் மனிதகுலம்.  அப்போதுதான் மனித வாழ்விற்கு ஓர் அர்த்தம் உண்டு. இந்த அர்த்தத்தை இயற்கை/இறை மனிதனுக்கு அறிவுறுத்தாவிடில் விலங்கினத்திலிருந்து மனித  இனமாக தன்மாற்றம் அடைந்த இயற்கைக்கு/இறைக்கு திறமை (Entelechy of Consciousness) இல்லை என்றாகிவிடுமல்லவா?  இது விளங்கிக்கொள்வதற்கான  கூற்றுதானே ஒழிய உண்மையில் இயற்கையின்/இறையின் திறைமையே தனி. ஆனால் இருபதாம் நூற்றாண்டுவரை இயற்கை/இறை காத்திருக்க வேண்டியிருந்தது.  அதாவது மனிதகுலத்தின் பரிபக்குவ நிலை அப்போதுதான் ஆரம்பித்தது என்று கூறுலாம்.  அதாவது  ‘Fraction Demands;  Totality supplies’ என்கின்ற அடிப்படையில் தான்  உயிரினத் தன்மாற்றம்/பரிணாமம்  படிப்படியாக மலர்ச்சி பெற்று வருகின்றது. அதாவது  ஆன்மா நினைத்தால், பேரான்மா   செய்யக் காத்திருக்கின்றது.   மேலும் சிந்திப்போம்.

      ஏற்கனவே விலங்கினத்திலிருந்து மனித இனம் தோன்றியுள்ளதால், அதன் மரபணுவில் பிறர் வளம் பறிக்கும்’ விலங்கினப் பண்பாகிய

      ‘பிறர் வாழும் சுதந்திரத்தை பறிப்பது.

      சித்திரவதை செய்வது,

      கொல்லுதல்’

ஆகிய ஐந்தறிவு விலங்கினத்திற்கே உரிய, ஆனால் வெட்கப்படக்கூடிய ஆறாம் அறிவு சீவ இனத்திற்கு தேவையில்லாத அநாகரீகக் குணங்கள் வந்துவிட்டன.   தன்மாற்றத்தில்(பரிணாமத்தில்) உருவம் மாறியும், நாகரீகம் அடைந்தும் இன்னமும் அந்த அநாகரீகக்குணங்கள் அழியாமல்; செயலிழக்கப்படாமலே உள்ளது என்பதனை ஐயமறத் தெளிவாக    நம் குருதேவரின் வாயிலாக நாம் நன்கு அறிந்திருக்கிறோம்.  

   உலகை உய்விக்க வந்த மகான்!  உன் புகழ் வாழ்க வாழ்கவே!! வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

சமுதாய அக்கறை கொண்ட சமுதாய நல ஆர்வலர்களாக உள்ளதால் நம் உள்ளத்தில் வருத்தம் ஒரு புறம் இருந்தாலும் வள்ளலார், சுவாமி விவேகானந்தர், வேதாத்திரி மகரிஷி போன்ற அருளாளர்கள்   “மனித குலத்தை திருத்திவிடலாம், அஞ்சவேண்டாம்” என்று கூறியுள்ளதாலும், இறைஉணர்வு பெறுவது  மனிதனின் பிறப்புரிமை என்பதனை தெள்ளத் தெளிவாக்கியுள்ளதாலும், மனித அறிவு மேலும் மேலும் மேம்பட்டு, அறிவு(இறை) ச் செல்வத்தை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு, பல்வேறு தொண்டுகளில் ஒன்றான முதன்மையான அறிவுத் தொண்டினை  முழுமையான நம்பிக்கையோடு செய்து வருகிறோம் என்பதனை எப்போதும் நினைவில் கொண்டு சலிப்பின்றி தொண்டாற்றி வருகிறோம்.  வாழ்க மனவளக்கலை!  வளர்க மனவளக்கலை!!  வாழ்க அறிவுத் தொண்டு!  வளர்க வளர்கவே அறிவுத் தொண்டு!!!

வள்ளலாரின் சத்ய வாக்கில்  இணைவோம்

     “அறத்தின் மாண்புணர்ந்து அறம் ஊக்கி அறம் காக்கும் தகைமையே இறைஉணர்வு” என நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் உரைக்கின்றார்.  உண்மைதானே! சத்யவாக்குதானே அது!

      இறைஉணர்வின் பயன்,  

      துன்பம் அளிக்கக்கூடிய,

      மீண்டும், மீண்டும் பிறவி என்கின்ற  சலிப்பையேத் தருகின்ற பிறவித் தொடரை

      இந்த பிறவியோடு  அருத்துக்கொண்டு; அமரநிலை எய்தி,

      வள்ளலாரின் கடைசி புனிதச் செய்தியிலுள்ள “அகவினத்தாருக்கு சாகா வரமும், ஏனையோருக்கு பரிபாக நிலையும் அளிப்போம்” என்கின்ற உறுதியான சத்யவாக்கில்  வள்ளலாருடன் இணைந்து, வேதாத்திரி மகரிஷி அவர்களின் திருவழிக்காட்டுதலில் பூத உடலை நீத்த பிறகும் திருச்சேவை புரிய அருளாளர்கள் உலகில் சஞ்சரிக்க  இறைஉணர்வு பேற்றினைப் பெற்றே ஆக வேண்டும்.   

      அதற்கு திருவள்ளுவர் கூறும் பிறவிப் பெருங்கடலை நீந்தி கரைசேர்ந்து எங்கிருந்து வந்தோமா அந்த அரூபமான இறைக்கடலில் சேர்ந்து கொள்வதற்கு,   அறம் ஊற்றெடுத்து ஓடுகின்ற வற்றாத ஜீவநதியில்   மூழ்கி,  குளித்து, திளைத்து மகிழ்வோம்.   

மனிதன் திருந்தி நல்லவனாக வாழ்தலுக்கு, இயற்கைக்கு/இறைக்கு ஒத்த வாழ்க்கையை  வரையறை செய்து கொண்டு, தக்க வழிகாட்டுதலுடன் வாழ்தலே சிறப்பான இறைவழிபாடாக அமைகின்றது.

        இதுவரை இயற்கையும் இறையும் ஒன்றே என்பதனை உறுதி செய்தோம். இனி இயற்கை/இறை நீதி என்பது என்ன என்று ஆராய்வோம். 

                                             ……  தொடரும்

வாழ்க அறிவுச்செல்வம்!                                                  வளர்க அறிவுச்செல்வம்!!