214-அருளாளர்கள் உலகம் 7/?

வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

 
அருளாளர்கள் உலகம் 7/?

அறிவிற்கு விருந்து—214

07.08.2016—ஞாயிறு

gurudevar

பண்பு மாற்றத்தினை ஏன் இறைவெளியின் திறனான இயல்பூக்க நியதி என்கிறார்?

மனிதன் என்பவன் யார்? இறையின் தன்மாற்றங்களில் கடைசி நிலைதானே! அந்த மனிதனிடம் பண்பு உருவாகுதலும் இறையின் திறன்களில் ஒன்றுதானே! எனவேதான் மனிதனின் பண்பு மாற்றத்தினை இறைவெளியின் திறனான இயல்பூக்கநியதி என்கிறார் மகரிஷி அவர்கள். இருப்பினும் சற்று விரிவாக சிந்திப்போம். ‘பண்பு மாற்றத்தினை ஏன் இறைவெளியின் திறனான இயல்பூக்க நியதி என்கிறார்?’ அதற்கான விடையைக் காண்பதற்கு முன்னர் இயல்பூக்க நியதி என்றால் எதனைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள் என்பதனை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இயல்பூக்கம் என்பது என்ன?

இறைவெளி இருப்பு நிலையில் வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் ஆகிய நான்கு தன்மைகளாக உள்ளன.
இறைவெளி இயக்கமாக வந்தபோது/வருகின்றபோது தன்மாற்றம், இயல்பூக்கம், கூர்தலறம் ஆகிய திறன்கள் வந்துள்ளன/வருகின்றன. புலன் அறிவால் வெற்றிடமாக கருதப்படுகின்ற இறைவெளி(க்குள்) தன்னுடைய திறனால், இப்போது நாம் காணும் பிரபஞ்சமாகவும், மனிதன் உள்பட எல்லா உயிரினங்களாகவும் தன்மாற்றம் அடைந்துள்ளது.

இதனை இடைவிடாத ஆழ்ந்த சிந்தனையால் ஆராய்ந்த மகரிஷி அவர்கள் இறைவெளியின் இத்திறனை மூன்றாகப் பிரித்து தன்மாற்றம், இயல்பூக்கம், கூர்தலறம் என்கிறார்.

அப்படியானால் இயல்பூக்கம் என்பது என்ன? எல்லாத் தோற்றங்களும் விண்களின் கூட்டுதான். இருந்தாலும் அவற்றில் காந்தம் உற்பத்தியாகி, அது அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்தாகவும், உயிரினங்களிலே மனமாகவும் மாற்றமடைகின்றது. வடிவம் பெறும் குணங்களுக்கு ஏற்ப அததற்குரிய இயக்கச் சிறப்பு பொருத்தமாக அமைவதே இயல்பூக்க நியதியாகும்.

தன்மாற்றம் மட்டும் ஆகிவிட்டால் போதுமா?

இறைவெளிதான் துகள்களாகவும், பஞ்சபூதங்களாகவும், பிரபஞ்சமாகவும், மனிதகுலம் உட்பட எல்லா உயிரினங்களாகவும் தன்மாற்றமாகியுள்ளது. தன்மாற்றம் மட்டும் ஆகிவிட்டால் போதுமா? தன்மாற்றம் என்பது என்ன? ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு தானாகவே/தானே மாறுவது. எதற்காக அந்த தன்மாற்றம் நிகழ்ந்ததோ அது முழுவதுமாக அந்த தன்மாற்றத்தில் வெளிப்பட வேண்டுமல்லவா? இல்லையெனில் அந்த தன்மாற்றம் பொருளற்றதாகிவிடுமே! அதாவது ஒவ்வொரு தன்மாற்றமும் அததற்குரிய உருவ அமைப்பிற்கு ஒப்ப சிறப்புற வேண்டுமல்லவா? இச்சிறப்பு இறையின் ஒவ்வொரு தன்மாற்றத்திலும், அதாவது, முதல் தன்மாற்றமான துகள் நிலையிலிருந்து ஆரம்பித்து எண்ணிலடங்கா தன்மாற்றங்களான மனிதன் வரை காணப்படுகின்றது. இத்தகைய ‘இயல்பாகவே, இறையிடம் உள்ள ஊக்கச்சிறப்பினை’ இயல்பூக்கம் என்கின்ற புனிதச் சொல்லால் அழைக்கிறார் மகரிஷி அவர்கள்.

இறைவெளியின் தன்மாற்றத்தின்போது ஏற்படும் உருவங்களின் அமைப்பு மாற்றங்களும், குணநல மாற்றங்கள் உண்டாவதனை இயல்பூக்கம் என்கிறார் மகரிஷி அவர்கள். அதாவது இறைவெளியில் இயல்பாகவே அந்த ஊக்கம் உள்ளது. பொதுவாக ஊக்கம்(inducement) என்பது என்ன என்று மனிதன் தோன்றிய பிறகு, இப்போது கேட்டால், ‘ஒருசெயலைச் செய்வதற்குப் பிறர் தரும் உற்சாகமான தூண்டுதல், ஆதரவு’ என்போம். ஆனால் இறைவெளி மனிதனாக ஆவதற்கு முன் அதற்கு எங்கிருந்து வந்தது ஊக்கம்? இறைவெளிக்கு வேறு யார் ஊக்கம் அளிக்க முடியும்? இறைவெளிக்கு அதுவேதான் ஊக்கம் அளித்துக் கொள்ள முடியும், இவ்வாறாகக் கூறுவதைவிட, ‘இயல்பாகவே ஊக்கம் உள்ளது இறைவெளியிடம்’ என்பதே சரி. இறைவெளி எல்லாம் வல்லது, எல்லாம் உடையது. இயல்பாக இருந்த ஊக்கத்தை இயல்பூக்கம் (இயல்பு+ஊக்கம்) என்கிறார் மகரிஷி அவர்கள்.
மேலும் இயல்பூக்க நியதியால் உருவங்களின் அமைப்பு மாற்றங்களும், குணநல மாற்றங்களும் உண்டாகும் என்கிறார் மகரிஷி அவர்கள்.

இறைவெளிதானே மனிதனாக தன்மாற்றமாகியுள்ளது. எனவே ‘ஒவ்வொரு தன்மாற்றமும் அததற்குரிய உருவ அமைப்பிற்கு ஒப்ப சிறப்புற வேண்டும்’ என்று முன்னர் கூறியபடி/முடிவு செய்தபடி, மனித தன்மாற்றத்திலும் அச்சிறப்பு அவசியமில்லையா? விலங்கினத்திலிருந்து தன்மாற்றமாகிய மனிதகுலம் உருவத்தில் மாற்றம் அடைந்துள்ளது. இதனை மகரிஷி அவர்கள் ‘விலங்கினத்திற்கும் மனிதஇனத்திற்கும் என்ன வித்தியாசம்?’ எனக் கேட்டுவிட்டு அவரே ‘அதற்கு(விலங்கிற்கு) முதுகெலும்பு படுக்கையாக இருந்தது, மனிதனுக்கு நிமிர்ந்திருக்கின்றது. அவ்வளவுதான்’ என்று விடையளிப்பார். இதிலிருந்து என்ன தெரிகின்றது? மனிதன், அவனுக்குரிய மனிதப் பண்பில் இன்னமும் ஏற்றம் பெறவேண்டியுள்ளது என்கின்ற ஆதங்கத்தை அல்லவா வெளிப்படுத்துகிறார்.

எனவே மனிதப்பண்பு மனிதனிடம் ஏற்றம் பெறவேண்டுமானால், எந்த பண்பில் ஏற்றம் பெறவேண்டுமோ அந்தப்பண்பின் மதிப்பை அறிந்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த பண்பை தானும் அடையவேண்டும் என்கின்ற உள்ளக்கிடக்கை வேண்டும். அதனை நினைந்து, நினைந்து போற்ற வேண்டும். தான் உயராது மற்றவரின் உயர்வை மதிக்கவும், ரசிக்கவும் முடியாது என்று மகரிஷி அவர்கள் கூறியதன் உட்பொருளை விளங்கிக் கொள்ள வேண்டும். பண்பில் ஏற்றம் பெறுவதற்கு அவ்வையார் கூறுவது போல் அந்த பண்பு மிக்க நல்லோரிடம் இணக்கம் கொள்ள வேண்டும். நல்லோருக்கு மரியாதை செலுத்த வேண்டும். அந்த பண்பின்மீது காதல் கொள்ள வேண்டும். அதற்கு வழி என்ன? அதனை மகரிஷி அவர்களின் வாயிலாகவே அறிந்து கொள்வோம்.

‘எந்த ஒரு செயலையோ, குணத்தையோ, உயிரையோ, ஒருவர் அடிக்கடி நினைத்து வந்தால் அப்பொருளின் தன்மையாக, நினைப்பவருடைய ஆற்றல் அவரது அறிவிலும், உடலிலும் மாற்றம் ஏற்படும்’ என்கின்ற இயற்கையின் தன்மையைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். இதனை பெருமையாகவும் கருதுகிறார். இதனையும் இறைக்குள்ள திறமைகளில் ஒன்றான இயல்பூக்க நியதியுமாகும் என்கிறார்.

எனவேதான் எந்த ஒரு பொருளையோ, செயலையோ, குணத்தையோ, உயிரையோ அடிக்கடி நினைந்து வந்தால் அப்பொருளின் தன்மையாக நினைப்பவரின் ஆற்றல் மாறும் என்று கூறும்போது ‘அறிவினிலும், உடலினிலும் மாற்றம் ஏற்படும்’. இயற்கையின் தன்மையினை/திறனை இயல்பூக்க நியதி என்கிறார். அறிவை முதலில் கூறிவிட்டு பிறகு உடலைக் குறிப்பிடுகிறார். அறிவில் மாற்றம் ஏற்படுவதுதான் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அறிவில் மாற்றம் ஏற்படும்போது கூடவே உருவத்திலும் மாற்றம் ஏற்படுகின்றது.
ஏன் உருவத்திலும் மாற்றம் ஏற்படுகின்றது?

உருவ மாற்றம் என்பது என்ன? அதுவும் ஒரு இயக்கம்தானே!? இயக்கமாற்றம் ஏற்படும்போது, அதாவது உருவ மாற்றம் ஏற்படும்போது, குணமும் மாறுகின்றது. எனவே குணமாற்றமும், உருவமாற்றமும் ஒன்றொடு ஒன்று பிணைந்தது என்றே சொல்லலாம். எனவேதான் இயல்பூக்க நியதிப்படி, அறிவினிலும் உருவினிலும் மாற்றம் ஏற்படும் என்கிறார். இயல்பூக்கம் எனும்போதே உருவமாற்றத்திற்கு(தன்மாற்றம்) ஏற்ப குணங்களும் மாற்றம் பெறவேண்டும். இயற்கையின்/இறையின் தன்மாற்ற சிறப்பினைக் குறிக்கும் வார்த்தை ஏதேனும் உள்ளதா? இருந்தால் அவ்வார்த்தையினை வைத்து இயற்கையின்/இறையின் தன்மாற்ற சிறப்பினை அறிந்து மகிழலாமே.

அப்படி ஒரு வார்த்தை உள்ளது ஆங்கிலத்தில். . . . .

என்ன வார்த்தை அது? அந்த வார்த்தை தெரிந்து கொள்வதற்கு முன் வார்த்தை பொதுவாக உருவாக்கத்தின் அவசியத்தை அறிந்து கொள்வோம். எந்த ஒரு வார்த்தையும் மனிதனால் உருவாக்கப்பட்டதுதானே! எதற்காக வார்த்தை உருவாக்கப்படுகின்றது? ஒன்றைப் பற்றி தான் அறிந்ததை மற்றவருக்கு அதனை தெரிவிப்பதற்காக வார்த்தை உருவாக்கப்படுகின்றது மொழியில். ஒரு வார்த்தையை மொழியியல் வல்லுனர் ஒருவர் உருவாக்குகின்றார் எனில் அந்த வார்த்தை தெரிவிக்கக் கூடிய பொருளை அவர் நிகழ்வாகவோ அல்லது யூகத்தாலோ அவர் அறிந்திருக்கிறார் என்றுதானே பொருள். எனவே அவர் அறிந்திருக்கும்போது அவர் அறிவும், நம் அறிவும் ஒரே பேரறிவின் அம்சமாக இருக்கும்போது அவர் அறிந்ததை அவர் கூறும் வார்த்தையால் நாம் அறிய முடியாதா? முடியும். என்ன வித்தியாசம் இருவருக்கும்? அவர் முன்னர் அறிந்துவிட்டார். நாம் பின்னர் அறிகிறோம். நமக்குப் பின்னரும் அது அறியப்படவிருக்கின்றது சமுதாயத்தில்.
இயற்கையின்/இறையின் தன் தன்மாற்றத்தை/பரிணாமத்தை அதுவே கூறி நாம் கேட்டதுபோல் விளக்கிக் கொள்ள வேண்டும். அதுவேதான் நம் அறிவாக உள்ளது. தந்தை குழந்தைக்கு சொல்லித் தருவதில்லையா? அதுபோல் பேரறிவு தன்குழந்தைகளுக்கு சொல்கின்றது. இயற்கைக்கு/இறைக்கு அறிவு இருக்கின்றது. ஏனெனில் அது அறிவாகவே இருக்கின்றது. ஆனால் வாய் இல்லை(அப்படி கூட சொல்ல முடியாது. அதுவேதான் வாயாகவும் உள்ளது. இருப்பினும் வாய் இல்லாததாகவே வைத்துக்கொள்வோம்). வாய் இருந்தால் சொல்லிவிடும். வாய் இல்லாவிட்டாலும் கைகளாவது இருந்திருந்திருந்தால் எழுதிக் காண்பித்திருக்கும். இயற்கை/இறைதான் அரூபி ஆயிற்றே. எப்படி முடியும்?
நேரிடையாக பார்த்ததுபோல் இயற்கையின்/இறையின் தன்மாற்றத்தை/பரிணாமத்தை ஐயமின்றி தெளிவாக அறிந்து கொள்ளமுடியும் ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்தால்.
இந்த இயற்கையின்/இறையின் தன்மாற்றத் தன்மையினைக் குறிக்கும் வகையில் ஏதாவது வார்த்தை மொழியில் இருந்தால் அந்த வார்த்தையினை வைத்துக் கொண்டு இயற்கையின்/இறையின் ஒவ்வொரு தன்மாற்றத்திலும் அதன் சிறப்பினையும், வெற்றியினையும் அறிந்து, தெளிந்து மகிழ முடியுமன்றோ!. என்ன அந்த ஆங்கில வார்த்தை? ‘Entelechy’ என்பதே அந்த வார்த்தை. இந்த வார்த்தை மனவளக்கலைஞர்களுக்கு தெரிய வந்த பின்புலத்தை அறிந்து கொள்வோம் நமக்குத் தெரிந்த வரையில், ‘Entelechy’ என்கின்ற வார்த்தையினை மகரிஷி அவர்கள் எழுத்து மூலமாக ஓரிடத்தில் அறிவித்துள்ளார். ‘Logical solutions for the problems of Humanity’ என்கின்ற ஆங்கில நூலில் பக்கம் 35 இல் இவ்வாறு கூறுகிறார்.
‘The reality of the universe is that everything is the result of Nature’s evolution. All things evolve in orderly fashion, directed by entelechy (omniscient consciousness with inner purpose) of Nature. All manifestation and movements in the universe are subject to the unfailing laws of cause and effect. These three—evolution, entelechy, and cause and effect are the inhernt character and capability of Gravity—Unified force—the radical first principle of the Universe.”Shri Vethathri Maharishi.

Entelechy’ என்பதனை ‘omniscient consciousness with inner purpose’ என்கிறார். ‘Omniscient’ என்றால் knowing all-எல்லாம் அறிந்த, சர்வக்ஞனான என்று பொருள். அனைத்துப் பொருட்களும் ஒழுங்குடன் தன்மாற்றம்(பரிணமித்துள்ளது) ஆகியது, எல்லாம் அறியத்தக்க பேரறிவாக உள்ள இயற்கை இயக்குவதால் சாத்தியமாகியுள்ளது. இயற்கையின் அந்த இயக்குகின்ற தன்மையை ‘Entelechy’ என்கிறார். மீண்டும் ‘Entelechy’ யைப்பற்றி மேலும் கூறுவதனைக் கவனிக்க வேண்டும். These three: evolution, entelechy  and cause and effect……. Here the word mutation–இயல்பூக்கம் is replaced with the word ‘entelechy’. இயல்பூக்கத்தினை ‘entelechy’ என்று கூறுகிறார்.

இதற்கு முன்னா் ‘Entelechy’ என்கின்ற வார்த்தையினை எங்காவது கூறியிருக்கிறாரா மகரிஷி அவர்கள்? ஆம் இவ்வார்த்தையினை அறிவித்திருக்கிறார் CUFA (Committee on Unified Force and Animation) அமைப்பின் கூட்டத்தில்(meeting of CUFA). இவ்வார்த்தையை தனது அருளுரையில் தெரிவித்துள்ளார். பரிணாமத்தை பற்றி விளக்கிக்கொண்டு வருகிறார் அன்று. அவர் கூறியதை இப்போது நினைவு கூர்வோம். “பத்து பல்லிகள் தண்ணீரில் விழுந்திருக்கும் ஏழு பல்லி இறந்திருக்கும். மூன்று பல்லிகள் பிழைத்திருக்கும். அந்த மூன்றும்தான் முதலைகளானதாக இருக்கும்.” எனக் கூறிவிட்டு ஆங்கில அகராதியினை எடுத்துவரச் சொல்லி, அதனை திறந்து கொண்டே “இப்படி ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் உள்ளது பார்த்தீர்களா? – Entelechy” என்று கூறினார். இடைவேளை (brake) வந்துவிட்டதால் மகரிஷி, அவர்களது அறைக்குச் சென்றுவிட்டார். அதன் பிறகு 1998 இல் ஆங்கில நூலில் அவ்வார்த்தையினைக் குறிப்பிட்டுள்ளார். ‘Entelechy’ என்பதற்கு அகராதியில் உள்ள பொருள் என்ன? அதனை அடுத்த அறிவிற்கு விருந்தில்(10-08-2016 புதன்) அறிவோம்.

வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்.


அன்பு வேண்டுகோள்

வாழ்க வளமுடன்
உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய, ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். அதற்கான வழிமுறையினை அறிய: click here.
அல்லது
நேரிடையாக உங்கள் கருத்துக்கள் பகுதிக்கு செல்ல click here
https://prosperspiritually.com/contact-us/
நன்றி.