FFC-211-அருளாளர்கள் உலகம் 4/?

வாழ்க மனித அறிவு                                                           வளர்க மனித அறிவு

அருளாளர்கள் உலகம் 4/?

அறிவிற்கு விருந்து — 211

27.07.2016—புதன்

Bhogar_appears

    கடந்த மூன்று அறிவிற்கு விருந்துகளில், அருளாளர் உலகம் பற்றி சிந்தித்து வருகிறோம். இதன் நோக்கம் என்ன? அருளாளர்கள் எவ்வாறு தங்களுக்கு பின்னர் வரும் ஆன்மசாதகர்களுக்கு துணை நிற்கிறார்கள்/உதவிபுரிந்து வருகிறார்கள் என்று  ‘அருளார் உலகம்’ தலைப்பில் ஆராய்ந்து வருகிறோம்.  மேலும் மகரிஷி அவர்கள் அறிவுறுத்தியபடி அறிவின் இருப்பிடம் அறிந்து, பேரறிவில் அறிவாய் நிலைத்து, அதன் பயனாக/வெளிப்பாடாக அறத்தை வகுத்து, அவ்வாறே வாழ்ந்து காட்டியஅனைத்து அருளாளர்களையும் நினைவுகூர்வது என்பது என்ன என்றும், மகரிஷி அவர்கள்,  அந்த அருளாளர்களை எந்தப் பொருளில்/நோக்கத்தில் ‘நினைவுகூர்வோம்’  என்றாரோ அந்த பொருளை/நோக்கத்தினை அடைவதற்காக அருளாளர்கள் உலகம் என்கின்ற தலைப்பில் அறிவிற்கு விருந்து படைத்து சிந்தித்து வருகிறோம்.  இன்றைய சிந்தனையை மகரிஷியின் அவர்களின்  கனவில் அருளாளர்  வந்து உறுதி அளித்த அருட்சம்பவத்துடன் தொடங்குவோம். 

மகரிஷி அவர்களுக்கு கனவில் உறுதி அளித்த அருளாளர்:

    மேலும், மகரிஷி அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் அருளார்கள்கள் சூக்குமமாக இருந்து கொண்டு ஆன்மீக சாதகர்களுக்கு உதவியாக இருந்து வருகின்றனர் என்பதற்கு சான்றாக உள்ளது.  தனக்கு ஏற்பட்ட அந்த அனுபவத்தை தனது  சீடர்களுக்கு எடுத்துக் கூறவிரும்பி ஒரு கவியினை அருளியுள்ளார் மகரிஷி அவர்கள்.

கனவில் ஒரு சித்தர்(18-12-1985)

தூக்கமில்லை, விழிப்பில்லை, துரிய தவம் ஆழ்ந்திருந்தேன்;

  தோன்றினார் ஒருசித்தர்; ‘தெரியுமா! நான் யார்?’ என்றார்

நாக்கு எழவில்லை; இவர்! போகரோ? என நினைந்தேன்;

 ‘ஆக்க வாழ்க்கைநெறியாம் கர்மயோகம்*பரவவிடல்’

அறிவுத் திருக்கோயில் முடித்து, உன்வயிற்றுப்புண் ஆறவிடல்

 ஊக்கமுடன் தொண்டாற்றும் உனக்குலகப் பரிசுவர

  உதவிடுவேன் எனச் சொல்லி  ஒரு நொடியில் மறைந்துவிட்டார்.’

                              . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     இச்சம்பவத்திலிருந்து என்ன தெரிய வருகின்றது?  மகரிஷி  அவர்கள் தனது 35 வது வயதில்(1911+35=1946)வயதில் இறைஉணர்வில் தெளிவு பெற்றுவிட்டார் என்பது தெரிந்ததே. அவ்வாறிருக்க, கனவில் ஒரு சித்தர் வந்து ஆசீர்வதித்தச் சம்பவம் 1985 இல் நடைபெற்றிருக்கிறது. அதாவது 74 வது வயதில் நடந்திருக்கின்றது.  அப்போது ஊக்கமுடன் அறிவுத்தொண்டாற்றிக் கொண்டிருக்கிறார் மகரிஷி அவர்கள்.  இதனை அறிந்த அச்சித்தர் மகிழ்ந்து, கருணை கொண்டு இரங்கி தானாகவே முன்வந்து மகரிஷி அவர்களுக்கு, இதுவரை *ஆக்க வாழ்க்கை(purposeful life/constructive way of living) வாழத் தெரியாத மனிதகுலத்திற்கு,

     ஆக்க வாழ்க்கை வாழ்வதற்கான நெறியான கர்மயோகம்  பரவுவதற்கும்,

     கட்டப்பட்டுக் கொண்டிருந்த அறிவுத்திருக்கோயில் முடிவு பெறுவதற்கும்

     மற்றும் அவரது வயிற்றுப்புண் ஆறுவதற்கும் உதவுவதாக சொல்லி மறைந்துவிட்டார்.

 அச்சித்தர் தனது பூதவுடலை உதிர்த்துவிட்டு இப்பூவுலகை விட்டு புறப்பட்டுவிட்டார்.  எப்போது புறப்பட்டார் என்பது தெரியாது? மீண்டும் மாந்தர்கள் வாழ்கின்ற இப்பூவுலகிற்கு அவரது சூக்கும சரீரத்தால் வருகை தந்து மகரிஷி அவர்களுக்கு உதவிட இயற்கை/இறை விரும்பியிருக்கிறது.  இப்பூவுலகை விட்டுவிட்டு சென்ற சித்தா் மீண்டும் இப்பூலகிற்கு வரும் வரை எங்கிருந்திருப்பார்?  வான்காந்த களத்திலே சூக்குமாக பயணம் செய்து கொண்டிருந்திருப்பார்.   ஒத்ததை ஒத்தது ஈர்க்கும் – உதாரணம்: ஒரு குறிப்பிட்ட அலை வரிசையை நம் வானொலிப் பெட்டியில் தேர்ந்தெடுத்தால்(Tuning) அக்குறிப்பிட்ட அலை வரிசையில் வான்காந்தத்தில் உள்ள ரேடியோ சமிக்ஞைகள் ஈர்க்கப்படும்

Vethathiri_Maharishi_and_Annai_Logambal_

 மேலும் ஒரு சம்பவம்—அன்னை லோகாம்பாளுக்கு அருள்பாலித்தது:

   அருட்சோதி வள்ளலார் அருள்பாலித்தது தவிர, மேலும் ஒரு சம்பவத்தை மகரிஷி அவர்கள் தனது வாழ்க்கை விளக்கத்தில் குறிப்பிடுகிறார்.  தனது மனைவி அன்னை லோகாம்பாள் மூலமும் அருளே குணமாகக் கொண்ட  மகானுடைய ஆவி தொடர்பு கொண்டதாகவும் குறிப்பிடுகின்றார்.  அந்த பெயர் தெரியாத மகானுடைய ஆன்மாவால் அவரது குடும்பத்திற்கு எவ்வளவோ நன்மைகளும், பாதுகாப்பும் கிடைத்ததாகக் குறிப்பிடுகிறார் மகரிஷி அவர்கள்.  அந்த மகானின் ஆன்மாவோடு பலமுறை உரையாடியதாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.  இது,  பல உண்மை கண்டுபிடிப்பு ஆராய்ச்சிக்கு (தத்துவ ஆராய்ச்சி) மகரிஷி அவர்களுக்கு உதவியதாகக் கூறுகிறார்,  இதனைக் கூறிவிட்டு மகரிஷி அவர்கள் தெரிவிப்பதாவது—‘உடலைவிட்டு பிரிந்த உயிரின் நிலை என்ன என்று பலகூட்டங்களில் உரை நிகழ்த்தி இருக்கிறேன்’ என்கிறார்.  எனவே அந்த மகானுடன் உரையாடியதிலிருந்து பெற்ற விளக்கங்கள்தானோ மகரிஷி அவர்கள் ‘உடலைவிட்டு பிரிந்த  உயிரின் நிலை என்பது’?!  புவியைவிட்டுச் மேலே செல்கின்ற அனுபவம் மரணத்தின்போதுதான்  ஆன்மாவிற்குத் தெரியும் ஆனால் அந்த மரணசம்பவ அனுபவத்தை யாருக்கும் தெரிவிக்க இயலாது.  ஆனால் அதனை இந்த மகான் ஆவி மகரிஷி அவர்களுக்கு தெரிவித்துள்ளதோ?! சுத்த அத்வைத உண்மையின் (தத்துவம்) படி இறைநிலை எய்திய ஆன்மாவும் இறையும் ஒன்றுதானே.  இறை நிலை கடல்நீர் என்றால், இறைநிலை எய்திய இறையின் சிறுதுளியான ஆன்மா கொட்டாங்குச்சியில் உள்ள கடல் நீர் போன்றது என்பார் மகரிஷி அவர்கள்.  ஆகவே உலகைஉய்விக்க   வேதாத்திரி மகரிஷி அவர்களை அவதாரம் எடுக்கச் செய்து அவரை விடிவெள்ளி ஆக்கிட இயற்கை/இறை எல்லாவற்றையும் செய்திருக்கின்றது.    

 ‘கனவில் ஒரு சித்தர் சம்பவம்’ என்ன தெரிவிக்கின்றது?

    இச்சம்பவத்திலிருந்து  ஒரு உண்மை தெரியவருகின்றது. என்ன உண்மை அது? கருமையத்தூய்மை பெற்ற ஆன்மா பூதஉடலைவிட்டு பிரிந்த பின்னர் எங்கே இருந்தது? பூதஉடலில் வாழ்ந்து கொண்டிருந்தபோது தான் கொண்டிருந்த  வலுவான நல்லெண்ணத்தை நிறைவேற்ற  முடியாதபோது, வேறொரு உடல் வழியாக நிறைவேற்றிக்கொள்கின்றது. வேறொரு உடல் வழியாக நிறைவேற்றிக்கொள்கின்றது. இது மேலே கூறப்பட்டுள்ளது போல் இயற்கையின்/இறையின் புனித ஏற்பாடு என்றும் வைத்துக்  கொள்ளலாம். அல்லது இயற்கையின்/இறையின் தன்மை என்றும் வைத்துக் கொள்ளலாம். இது பற்றி தெளிவு பெற உயிரைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.  உயிரைப்பற்றி தெரிந்து கொள்வது என்பது வேதாத்திரிய உயிரியல் படிக்க வேண்டும். அதனை இப்போது முழுவதுமாக இந்த சிந்தனையிலேயே படிப்பது என்பது, சிந்தனையின் திசை திரும்பியது போல் இருக்கலாம்.  இருப்பினும் அருளாளர் உலகம் என்கின்ற தலைப்பில் சிந்தித்துக் கொண்டு வருவதால், பூதவுடலை உதிர்த்த அருளாளர்கள் எவ்வாறு அவர்கள் (அருளாளர்களின்) உலகத்தில் உடம்பில்லாமல், சூக்குமஉடலை மட்டுமே வைத்துக் கொண்டு எவ்வாறு அங்கு வாழ்ந்து கொண்டு என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பதனை அறிய இருப்பதால்  இப்போது, வேதாத்திரிய உயிரியியலில் கடைசிப்பகுதியான ‘இறந்தபின் உயிரின் நிலை என்ன?’  என்ன என்கின்ற பகுதிக்குள் மட்டும் செல்வோம். பிறிதொரு சமயத்தில் ‘உயிரறிவு’ பற்றி முழுமையாகச் சிந்திப்போம்.

 இறந்தபின் உயிரின் நிலை என்ன?

        இறந்த பின் உயிரின் நிலையை அறிவது என்பது உயிரறிவின் ஒரு பகுதியாகும்.  பூதஉடலைவிட்டு பிரிந்த பின்னர் உயிர் எங்கே செல்கின்றது  என்பதனை அறிய,  இறந்த பின் உயிரின் நிலையை அறிய வேண்டும். மரணத்தின் பிறகு உடல்தான் அழிகின்றதே தவிர உயிர் அழிவதில்லை என்பது எல்லோராலும்   அறியக்கூடியதுதான்/அறிந்த ஒன்றுதான்.   அப்படி அறியவில்லையாயினும் இனிமேலாவது சமுதாயம் அதனை அறிந்து கொள்ள வேண்டும் என்பது மனவளக்கலைஞர்களின் ஆதங்க எண்ணம்.   உயிர் அழிவதில்லை என்றும் ஏன் அழிவதில்லை என்றும் கேள்விகள் எழுந்தால்தான் அறிவைக் கொண்ட உயிர்  உயிரறிவு பெற முடியும்.

       ‘உடலே  நான்’ என மனிதன் நினைத்துக் கொண்டு வாழும் காலத்தில்(ஆயுள்பரியந்தம்) அவனுடனே வாழ்ந்து கொண்டிருக்கின்ற  உயிர் பற்றிய சிந்தனை மனித அறிவிற்கு  வருவதில்லை. இதனை இப்போது நினைக்கும்போது அறிவு .இச்சிந்தனையில்லாமலே இதுவரை வாழ்ந்து வருகின்றது என்பது மிகுந்த வருத்தத்துடன் தெரியவருகின்றது.  இருப்பினும் வேதாத்திரிய தோற்றத்திற்கு பிறகாவது, அதாவது இப்போதாவது அறிவிற்கு இச்சிந்தனை ஏற்பட்டுள்ளது என்பது மனநிறைவைக் கொடுக்கின்றது. மரணத்தின்போது உயிர் எங்கே செல்கின்றது/செல்லப்போகின்றது என்பதனை வாழும்போதே அறிந்து கொள்ள வேண்டாம் மனிதன்?! உயிர் போன உடலுக்கு ஏது அந்தஸ்த்து? மனிதன் சடப்பொருளாகின்றான்.  பெயரை இழக்கின்றான். தனக்கெனத் தனிப்பெயர் கொண்டிருந்த மனிதன் பிணம் என்கின்ற பொதுப் பெயர் சூட்டப்படுகிறான்.  மரணம் சம்பவித்த பிறகு உயிர், மேலே எங்கே செல்லவேண்டுமோ அந்த இடத்திற்கு தானாகவே சென்றுவிடும்.    

 எனவே உயிர் உடலில் இருக்கும்போதே, அதாவது வாழும்போதே இந்த உயிரைப்பற்றிய அறிவினை அறிவு அறிந்து கொள்ள வேண்டும். பலபிறவிகளாக சேர்த்துவைத்த  பழிச்செயல்பதிவுகளுக்குக் காரணம் உயிரறிவைப்பற்றிய அறிவினை பெறாமையே.   உயிரறிவைப்பற்றி கருத்தியலாகவும், செயல்முறையிலும்(Both theoretical and practical realisation) அறிந்து கொள்ள வேண்டும்.  மனிதனிடம் அன்பும், கருணையும் மலர வேண்டும்.  உயிரறிவு பெறும்போது ‘சீவனில் சிவனைக் காணலாம்’ என்று அருளாளர்கள் சொன்னது சாத்தியமாகும்.

     உயிரைப்பற்றி அறிந்து கொள்வது  உயிரறிவு எனப்படுகின்றது.  மனிதனுக்கு எத்தனையோ ஆசைகள் உள்ளன?  அவற்றில் முதலில் முக்கியமாக இடம் பெறுவது உயிர்மீது ஆசை.  ஏனெனில் உயிர் இருந்தால்தானே மற்ற ஆசைகள் நிறைவேறும்போது அதனை அனுபவிக்க முடியும்? அப்படிப்பட்ட உயிரை பற்றி அறிய வேண்டாம் இந்த விஞ்ஞான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன்?

     உயிரைப்பற்றிய அறிவினைப் பெறுவதினால் என்ன நன்மை மனிதகுலத்திற்கு என மனிதமனம் நினைக்கும்/நினைக்கலாம்.  ‘நினைக்கும்/நினைக்கலாம்’ என்பதில்லை நினைக்க வேண்டும் ஆறாம் அறிவு. 

உயிரறிவு பெறுவதினால்

     மனிதகுலம் எல்லாச் சிக்கல்களிலிருந்தும் விடுதலையாகலாம்.

     பண்பேற்றத்தில் உயரமுடியும். 

     இன்று மனிதகுல வாழ்வில் மனிதகுலமே ஏற்படுத்திக் கொண்ட பல செயற்கையான சிக்கல்களுக்கு தீர்வுகள் தெரிய வரும்.

     தனிமனித வாழ்விற்கு வேண்டிய தீர்வுகளை தனிமனிதன் என்கின்ற அளவில், தான் தீர்த்துக் கொண்டதுபோக,

     பெரும்பாலான மற்ற சிக்கல்களுக்குத் தீர்வுகண்டு அவற்றை சரிசெய்ய  சமுதாயத்தை  சிந்திக்க வைக்க தனிமனிதர்கள் ஒவ்வொருவரும்   தங்களது  மௌன ஊடகமான எண்ணங்களை பயன் படுத்த முடியும்.

      இறந்த பின் உயிரின் நிலையை அறிவதற்கு இறப்பை மூன்று விதமாக பிரித்துக் கொண்டு சிந்திக்க வேண்டும்.

1)   இயற்கை மரணம்.

 2)   திடீர் மரணம்

 3)   முழுமைப் பேறு அடைந்த நிலை

      இதற்கான விளக்கம் யாவரும் அறிந்ததே.  குறிப்பாக மனவளக்கலைஞர்கள் முன்றாவது இறப்பு நிலையைப் பற்றிய தெளிவு பெற்றவர்கள்.  எனவே இந்த மூன்று வகையில் மரணம் சம்பவிக்கும்போது உயிர் எங்கே செல்கின்றது என்பதற்கான விடை தெரிந்து கொள்ள வேண்டும்.

   புவி மீது வாழ்ந்து கொண்டிருக்கிறான் மனிதன்.  உடல் மண்ணிற்கு சென்று விடுகின்றது.  பிறகு உயிர் எங்கே செல்ல முடியும்? மேல் நோக்கித்தான் செல்ல வேண்டும். ஏனெனில் உடலில் உயிர் இருக்கும்போதே, உடலில் உள்ள மற்ற உறுப்புகள்  புலன்களால் தெரிந்து கொள்ளப்படுவது போன்று  தெரிந்து கொள்ளப்படமுடியாத ஒன்று எந்தநிலையில்(in what form)  இருக்க முடியும்?  மற்ற உறுப்புக்கள் பருப்பொருள்(physical existance) நிலையில் இருப்பது போன்று இருக்க முடியாது. அரூபா-ரூப நிலையில் தான் இருக்க முடியும். எனவே அது பருப்பொருளைவிட அதாவது லேசானதாக   இருக்க முடியும்.

எனவே அது பூமியைவிட்டு மேல்நோக்கிச் சென்று விடுகின்றது.  எல்லா மனிதர்களுக்கும் இறப்பில் நடக்கின்ற பொதுவான நிகழ்வுதான் இது.  எனினும்  மேல்நோக்கிச் செல்கின்ற எல்லா உயிர்களும் ஒரே இடத்திற்காக செல்கின்றது என்பது அடுத்த அறிகின்ற-ஆர்வத்தை எழுப்புகின்ற வினா.  இல்லை. எல்லா உயிர்களும்(ஆன்மாக்களும்) ஒரே இடத்திற்குச் செல்வதில்லை. 

   ஏன் இயற்கையில் இந்த பாகுபாடு? பிறகு எந்தெந்த இடத்திற்கு எந்தெந்த ஆன்மா  செல்லும்?  ஆன்மாவில் பதிந்துள்ள பதிவுகளுக்கு ஏற்ப  அது புவியைவிட்டு அது அதற்குரிய  இடத்திற்கு செல்லும்.      அடுத்த அறிவிற்கு விருந்தில் (31-07-2016 ஞாயிறு) சந்திப்போம்.


 வாழ்க அறிவுச் செல்வம்                                                    வளர்க அறிவுச் செல்வம்.
அன்பு வேண்டுகோள்
வாழ்க வளமுடன்

உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய,  ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். அதற்கான வழிமுறையினை அறிய:  click here.

https://prosperspiritually.com/category/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

                                              அல்லது

நேரிடையாக உங்கள் கருத்துக்கள் பகுதிக்கு செல்ல click here

https://prosperspiritually.com/contact-us/  

நன்றி,

வாழ்க வளமுடன்