அயரா விழிப்புணர்வு

Constant Awareness

வாழ்க மனித அறிவு                             வளர்க மனித அறிவு

அயரா விழிப்புணர்வு

FFC -120

20-09-2015—ஞாயிறு

FFC-120-அயரா விழிப்புணர்வு

 

மேலே நினைவுகூர்ந்த இரண்டு பாடல்களில் விழிப்புநிலையின் மேன்மையைப் பற்றி அருட்தந்தை அவர்கள் கூறியுள்ளார்கள். விழிப்பு நிலை பண்பை வளர்க்கும். ‘மீண்டும் பிறவா’ வரத்தை நல்கும் என்கிறார் மகரிஷி அவர்கள். எனவே இன்றைய சிந்தனையாக ‘அயரா விழிப்புணர்வு’ என்கின்ற தலைப்பினை எடுத்துக் கொண்டுள்ளோம். ‘விழிப்புணர்வு’ என்று மட்டும் தலைப்பாக எடுத்துக் கொள்ளாமல், அதனுடன் ‘அயரா’ என்கின்ற சொல்லையும் சேர்த்துக் கொண்டு ‘அயரா விழிப்புணர்வு’ என்று எடுத்துக் கொண்டுள்ளோம். காரணம் விழிப்புநிலை அயர்ந்து விடக்கூடாது என்பதற்காக.

விழிப்பு நிலையில் விழித்துக் கொண்டிருத்தலே அயரா விழிப்புணர்வு என்கிறோம் நாம் இங்கு.

அதாவது விழிப்பில் விழிப்பாக இருத்தலே விழிப்புணர்வு என்கிறோம் நாம்.

அயரா விழிப்புணர்வு ஆங்கிலத்தில் “Constant awareness” எனப்படும். அயரா விழிப்புணர்வு என்றால் என்ன? அயரா, விழிப்பு, உணர்வு ஆகிய மூன்று சொற்களைக் கொண்டிருக்கின்றது “அயரா விழிப்புணர்வு” என்கின்ற சொற்றொடா்.

யாருக்கு அயரா விழிப்புணர்வு தேவை?  அறிவிற்கு அயரா விழிப்புணர்வு தேவை.
ஏன் தேவை?   மனித அறிவு இன்பத்தையே எப்போதும் விரும்புகின்றது. இதில் தவறில்லை. ஏன் அறிவு துன்பப்படவேண்டும்? அறிவு எப்போதும் இன்பத்தையே விரும்புவதால், அறிவிற்கு எப்போதும் விழிப்புணர்வு தேவை. எப்போதும் தேவையாக இருக்கின்ற விழிப்புணர்வைத்தான் “அயரா விழிப்புணர்வு” என்கிறோம். அயரா விழிப்புணர்வு எவ்வாறு எப்போதும் இன்பத்தைத் தரும் என்று இன்று சிந்திக்க உள்ளோம்.

முதலில் ஒரு சிறு உதாரணத்தின் மூலம் அயரா விழிப்புணர்வின் பயனை இப்போதே புரிந்து கொண்டுவிட்டு விரிவாக சிந்திப்பதற்கு நம் சிந்தனையைத் தொடர்வோம். ஐநூறு கிலோ மீட்டர் கடப்பதற்காகும் பத்து மணிநேரமும் தூங்காமல் விழித்துக்கொண்டுதான் மகிழுந்தை (Car) ஒட்ட வேண்டும். சேர வேண்டிய இடத்தை நெருங்கும் கடைசி இரண்டு நிமிடங்களில், ஒரு சில நொடிகள் அயர்ந்து விட்டால் கூட விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒரு சிலர் விபத்தைச் சந்திக்கின்றனர்.

ஆகவே ஒன்பது மணி, ஐம்பத்தெட்டு நிமிடங்கள் விழிப்புடன் இருந்து விட்டு கடைசி இரண்டு நிமிடங்களில் ஒரு சில வினாடி விழிப்புநிலைத் தவறியதால் அதற்குரிய விளைவு வருகின்றது. ஆகவேதான் பத்து மணிநேரமும் விழிப்புடன் உறங்காமல் மகிழுந்தை ஓட்டியிருக்க வேண்டும் ஓட்டுனா். இதுதான் அந்தப் பணியில் ஒட்டுனருக்கு இருக்க வேண்டிய அயரா விழிப்புணர்வாகும்.(அதோடு மட்டுமில்லை வாழ்விலும் அயரா விழிப்புணர்வு தேவை அவருக்கு) விழிப்புணர்வு அயர்ந்ததால் விபத்து நேரிட்டது. இதுபோல் உயிர் உடலில் இருக்கின்ற வரை, வாழ்க்கை என்கின்ற பேரின்ப உந்தை இங்கே ஒட்ட வேண்டியிருப்பதால் வாழ்க்கையில், யாராக இருந்தாலும், உறங்கும் நேரத்தைத் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் அயரா விழிப்புணர்வு அவசியமாகின்றது.

விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவ்வாறு அயா்ந்து விட்ட எல்லா ஓட்டுனர்களும் விபத்தைச் சந்திப்பதில்லை. ஒரு சில சமயங்களில் ஒரு சிலருக்கு விபத்து நடக்கின்றது. இங்கே தான் தீயவினைப்பதிவுகளின் விளைவுகளை வெளிக் கொண்டு வர உகந்த நேரமாக செயல்விளைவு நீதி முடிவு செய்துவிட்டது என்றும் எடுத்துக் கொள்ளலாம். அல்லது ஒட்டுனரின் செயலான அயர்ந்து விட்டமையின் விளைவு உடனே வந்து விட்டதாகவும் கருதலாம். இதில் எது சரி என ஆராயப்போனால் இன்றைய சிந்தனைக்கான தலைப்பை விட்டு வெளியே செல்வதாகிவிடும். ஆகவே இதே உதாரணத்தை வேறொரு சமயத்தில் வேறொரு தலைப்பில் சிந்திக்கலாம். தலைப்பிற்குள் செல்வோம்.

“அயர்ந்து” என்றால் “தன்னை மறந்து” என்று பொருள். பிரயாணக் களைப்பால் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார் என்கிறோம். என்ன அர்த்தம்? தன்னை மறந்து ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். “அயரா” என்றால் “தன்னை மறவாத நிலை” என்று பொருளாகின்றது. அறிவிற்கு வேண்டிய “தன்னை மறவாத நிலையை” அயரா விழிப்புணர்வு என்கிறோம்.

“விழி” என்றால் “சுய உணர்வுடன் இருத்தல்” என்று பொருள். அறிவு விழித்திருத்தல் என்றால் அது தன்னுடைய சுய உணர்வுடன் இருத்தலாகும். “சுய உணர்வு” என்றால் தன்னுடைய நிலை, செயல், சூழல் முதலியவற்றை அறியும் கட்டுப்பாட்டு உணர்வு என்று பொருள். “விழிப்பு” என்றால் மயக்கம் நீங்கிய நிலை என்று பொருள். அதாவது விழிப்பு நிலை என்றால் மயக்கம் நீங்கி சுய உணர்வுடன் இருத்தல் என்பதாகின்றது.
‘உணர்வு’ என்றால் ஒன்றை அனுமதிக்கிற, விரும்புகிற, வேண்டுகிற மனநிலை என்று பொருள்.

‘அயரா விழிப்புணர்வு’ என்றால் மயக்கம் நீங்கி தன்னுடைய நிலையை மறவாது விரும்புகிற நிலை என்று பொருளாகின்றது. இந்நிலை மனிதஅறிவிற்கு அவசியமாகின்றது. ஏன் அவசியமாகின்றது? எப்போது மனிதனுக்கு ஒன்று அவசியமாக இருக்கும்? எந்த ஒன்று, மனிதன் சிக்கலற்று, துன்பமில்லாமல் இன்பமாக வாழ்வதற்கு தேவையாக இருக்கின்றதோ அந்த ஒன்று மனிதனுக்கு அவசியமாகின்றது.
மயக்கம் நீங்கி தன்னுடைய நிலையை மறவாது விரும்புகிற நிலை அவசியமாகின்றது என்றால், மனிதஅறிவு தன்னுடைய மூலநிலையை (source, origin), மறந்து மயக்கத்தில் உள்ளது என்று பொருள். ஐயறிவு சீவனுக்கு இந்த நிலை அறிய வேண்டியதில்லை. ஏனெனில் ஐயறிவு சீவன்கள் ஒவ்வொரு புலனும் உணர வேண்டிய உணர்வை உணர்ந்து கொண்டு நிறைவு பெற்றுக் கொண்டுதான் உள்ளன.

ஆறாம் அறிவுள்ள மனிதன் ஐயறிவு சீவன்கள் உணா்ந்து வந்த அதே அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியன மட்டும் உணர்வதைத் தவிர ஆறாம் அறிவிற்கான பிரத்யேக உணர்வினை பெறாமல் இருக்கிறான்.

ஆகவே மனிதனுக்கு நிறைவு ஏற்படாமல் புலன் வழி வாழ்க்கையிலேயே மூழ்கி அதனையே பிரதானமாக நினைக்கிறான். மனம் நிறைவு பெறாத போது, இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று, என்றும் அழியாப் பொருளின் மீது மனம் திரும்பாமல், அழியும் பொருட்களின் மீது மோகம் கொள்கிறான். விளைவு, அளவும் மீறியும், முறை மாறியும் அனுபவித்து இயற்கை நீதியான இன்பமே துன்பமாக மாறும் என்பதனை அறியாமல் மயக்கத்தில் வாழ்கிறான்.

இதனையே மெய்ஞானிகள் புலன்மயக்கம் என்கின்றனா். புலன்கள் உணரும் கருவிகளாகவே(பொறிகளாக) மட்டும், இருக்க வேண்டுமே ஒழிய புலன்களைச்  சிறைப்படுத்தும் பொறிகளாக(trap) ஆக்கி விடக்கூடாது மனிதன்.

அப்படி ஆகிவிட்டால் அந்தப் புலனுக்கு அடிமை ஆகிவிடுகின்றது அறிவு. இதுதான் பழக்கம் எனப்படுகின்றது.

இறைக்கு அடியராக இருப்பதைத்தவிர, பெரும்பாலும் புலன்களுக்கு அடிமையாகின்ற பழக்கம் தீய பழக்கங்களாகவே இருக்கும். ராஜ வாழ்க்கை வாழ வேண்டிய அறிவு அடிமை வாழ்க்கை வாழ்கின்றது.

அடுத்த அறிவிற்கு விருந்தில்(23-09-2015–புதன்) திருவள்ளுவரின் துணைகொண்டு சிந்திப்போம்..